‘பகிரி’ பட விழாவில் வசந்தபாலன், சுரேஷ் காமாட்சி பரபரப்பு பேச்சு!

‘பகிரி’ விவசாயம் பற்றிய கதை!

செய்திகள் 27-Jun-2016 12:55 PM IST VRC கருத்துக்கள்

‘லட்சுமி கிரியேஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் 'பகிரி'. நடிகர் கருணாஸ் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட, பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார். இசக்கி கார்வண்ணன் ‘பகிரி’ படத்தின் கதை எழுதி தயாரித்து, இயக்கியுள்ளார். இவ்விழவில் வீரக்குமார், நடிகைகள் நமீதா, சாக்ஷி அகர்வால், 'பகிரி'யில் நாயகனாக நடித்துள்ள பிரபு ரணவீரன், நாயகியாக நடித்துள்ள ஷார்வியா மற்றும் ஆதிரா, ரேகா நாயர், படத் தொகுப்பாளர் அத்தியப்பன் சிவா, 'ஹரிதாஸ்' வசனகர்த்தா ஏ.ஆர் வெங்கடேசன், திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி பேசும்போது,

"நாங்கள் இந்தப் 'பகிரி' இயக்குநர் இசக்கி கார்வண்ணன் எல்லாருமே ஒரே ஆலமரத்திலிருந்து வந்த விழுதுகள். தமிழ் சினிமா இப்போது பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. சிறு படங்களுக்கு ஒரே நம்பிக்கை ஊடகங்கள்தான். ஆனால் படம் பார்த்து விமர்சனங்கள் பத்திரிகைகளில் வருவதற்குள் திரையரங்கில் படம் இருப்பதில்லை. தூக்கி விடுகிறார்கள். இன்று சினிமாவை யாரும் பார்க்காமலில்லை. திருட்டு விசிடியில் கூட காசு கொடுத்துதான் பார்க்கிறார்கள். இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யக்கூட காசு கொடுத்துதான் ஆக வேண்டும். அப்படியிருக்கும் போது ஏன் திருட்டு விசிடியை சட்டபூர்வமாக்க கூடாது? அப்படி பண்ணினால் கொஞ்சம் பணமாவது தயாரிப்பாளருக்கு கிடைக்கும்’’ என்றார்.

அதனை தொடர்ந்து இயக்குனர் வசந்த பாலன் பேசும்போது, ‘‘பகிரி’யின் முன்னோட்டம் பார்த்தேன். படம் விவசாயம் பற்றிப் பேசுகிறது. ஓர் இயக்குநருக்கு எந்த அளவுக்கு கேளிக்கையூட்டும் பொறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும், நல்லது செய்ய வேண்டும் என்கிற பொறுப்பும் இருக்க வேண்டியது அவசியம். விவசாயம் என்பது இன்று அழிந்து வருகிறது. அந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த ‘பகிரி’ படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் இசக்கி காரவண்ணன். விவசாயத்தை பொலவே தமிழ் சினிமவும் அழிந்து வருகிறது. நல்ல கருத்துக்களை தாங்கி வரும் ‘காக்கா முட்டை’ போன்ற ஒரு சில படங்கள் தான் ஓடுகிறது. அந்த வகையில் விவசாயத்தை பற்றி சொல்லும் ‘பகிரி’ படமும் ஓட வேண்டும்! இப்படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்’’ என்றார்.

படத்தின் இயக்குனர் இசக்கி காரவண்ணன் பேசும்போது, "ஒரு காலத்தில் செருப்பு தைக்கிற தொழிலை கேவலமாக நினைத்தார்கள். சிலர்தான் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் இன்று ஆதிக்க சாதி, ஆண்ட சாதி எல்லாரும் அந்த தொழிலைச் செய்கிறார்கள். காரணம் பணம். ஆனால் இப்போது விவசாயம் செய்ய யாரும் முன்வருவது இல்லை. இந்த நிலை நீடிக்க கூடாது என்பது தான் இப்படத்தின் கருத்து! பசி இருக்கிற வரையில் விவசாயமும் இருக்கும்’’ அந்த கருத்தை தான் இப்படம் வலியுறுத்துகிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;