இண்டிபெண்டன்ஸ் டே 2 - ஹாலிவுட் பட விமர்சனம்

இப்படம் ஒரு பிரம்மாண்டமான உணர்ச்சியற்ற போராட்டம்!

விமர்சனம் 24-Jun-2016 6:27 PM IST Top 10 கருத்துக்கள்

ரோலன்ட் எமெரிச் இயக்கத்தில் பிரம்மாண்டாக உருவாகி 1996ஆம் ஆண்டு உலகமெங்கும் வெளியான படம் ‘இண்டிபெண்டன்ஸ் டே’. சரியாக 20 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் 2ஆம் பாகமாக ‘இண்டிபெண்டன்ஸ் டே : எழுச்சி அடைதல்’ தற்போது தமிழிலும் ரிலீஸாகியிருக்கிறது. 200 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், முதல் பாகம் தந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?

1996ல் ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினம் மட்டுமல்ல, உலகத்தை அழிக்க நினைத்த வேற்றுகிரகவாசிகளின் தாக்குதலை அமெரிக்க முறியடித்த தினம்கூட. சரியாக 20 வருடங்கள் கழித்து, அதே நாளில் மீண்டும் கொண்டாட்டமான ஒரு சூழ்நிலையில் திளைக்கிறது அமெரிக்கா. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சுதந்திர தின உரையாற்றுவதற்காக தயாராகி வருகிறார் தற்போதைய ஜனாதிபதியான சீலா வார்டு. இன்னொருபுறம், உலகத்தை காக்கும் பொருட்டு நிலவில் அமெரிக்கா ஆய்வுகூடத்தை அமைத்து பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறது. நிலவிலிருந்து சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு சாகசம் புரிவதற்காக அமெரிக்காவிலிருந்து ஜெட் விமான குரூப் ஒன்றும் நிலவிற்கு பறக்கிறது.

இந்த சூழ்நிலையில், நீண்ட வருடங்களாக உடல்நிலை சரியில்லாமலிருந்த பழைய ஜனாதிபதி பில் புல்மேனுக்கு மீண்டும் ஏலியன்ஸின் தாக்குதல் நடக்கப்போவதாக தகவல் கிடைக்கிறது. அதோடு, நிலவில் புதிதாக வேற்றுகிரக விண்கலம் ஒன்று தரையிரங்கவும் முயற்சி செய்கிறது. அது தங்களின் எதிரி என நினைக்கும் அமரிக்க ராணுவம் அதனை சுட்டு வீழ்த்துகிறது. தங்களின் எதிரிகளை அழித்துவிட்ட சந்தோஷத்தில் அமெரிக்கா மகிழ்ச்சியாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத வண்ணம் 3000 மைல் சுற்றளவு கொண்ட மிகப் பிரம்மாண்டமான விண்கலம் ஒன்று, அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்தையும் மீறி கடலில் தரையிரங்கி, பூமியின் மையப்பகுதியை துளையிடத் துவங்குகிறது. இதனால் இரண்டு மணி நேரத்தில் மொத்த உலகமும் அழியப்போகிறது என்ற அபாயத்தில் மக்கள் பரிதவிக்கிறார்கள். இந்த பேராபத்தை அமெரிக்க ராணுவம் எப்படி முறியடிக்கிறது? இந்தமுறை வேற்றுகிரகவாசிகளின் தாக்குதல்கள் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை இரண்டு மணி நேர படமாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்தில் பில் புல்மேன், ஜெஃப் கேல்டுப்ளம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்திலும் நடித்த இவர்களுடன் லியம் ஹெம்ஸ்வொர்த், ஜுட் ஹிர்ஸ்ச் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஹெரால்டு க்ளோசர், தாமஸ் வான்கர் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்திற்கு மார்கஸ் ஃபோர்டெரர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஒரே பலம் டெக்னிக்கல் விஷயங்கள். உச்சபட்ச கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள், மலைக்க வைக்கும் போர்க்கருவிகள், சாகஸ சண்டைகாட்சிகள், மிரளவைக்கும் ஒளிப்பதிவு, பிரமிக்க வைக்கும் பின்னணி இசை என டெக்னிக்கலாக மிகப்பெரிய உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். 3டியில் பார்ப்பது இன்னொரு சுகம். ஆனால், ரசிகர்கள் ஒரு படத்துடன் ஒன்றிப்போவதற்கு இத்தகைய பிரம்மாண்டங்கள் மட்டுமே போதும் என்று நினைத்ததுதான் படத்தின் ஆகப்பெரிய பலவீனம். முதல் பாகத்திலிருந்த ஒரு சுவாரஸ்யமான கதையோ, பரபரப்பான திரைக்கதையோ, நெஞ்சை நெகிழ வைக்கும் ‘எமோஷனல்’ காட்சிகளோ இப்படத்தில் இல்லை. வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் நிறைந்த படமாகவே இந்த ‘இன்டிபென்டென்ஸ் டே’வின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஒரு உலகம் அழியப்போகிறதென்றால் எத்தகைய பதைபதைப்பு ஏற்பட வேண்டும்? நாயகனின் அம்மா அவரின் கண்முன்னே சாகப்போகிறார் என்றால் எப்படிப்பட்ட துயரத்தை ரசிகர்கள் அனுபவிக்க வேண்டும்? ஆனால், படத்தில் இத்தகைய காட்சிகளை சர்வ சாதாரணமாக கையாண்டிருக்கிறார்கள். இந்த காட்சிகள் பெரிய அளவில் கைகொடுக்காததற்கு படத்தின் வசனங்களும், நடிகர்களின் பங்களிப்பும் இன்னொரு காரணங்களாக இருக்கலாம். அதோடு, முதல் பாகம் வெளிவந்தபோது ‘ஏலியன்கள்’ ரசிகர்களுக்கு புது விஷயம். ஆனால், அதன்பிறகு இதுபோன்ற பல படங்களை ரசிகர்கள் பார்த்துவிட்டதும்கூட, இப்படத்தின்மீது பெரிய ஈர்ப்பு வராததற்கு காரணமாக இருக்கலாம்.

இரண்டு மணி நேரம் கண்முன்னே நம்பமுடியாத காட்சிகளைக் காட்டி வியக்க வைத்தால் போதும் என்று நினைப்பவர்கள் தாராளமாக ‘இண்டிபெண்டன்ஸ் டே’ படத்தின் 2ஆம் பாகத்திற்கு விசிட் அடிக்கலாம்.

மொத்தத்தில்... இப்படம் ஒரு பிரம்மாண்டமான உணர்ச்சியற்ற போராட்டம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;