ராஜா மந்திரி – விமர்சனம்

காமெடி தர்பார்!

விமர்சனம் 24-Jun-2016 5:46 PM IST Top 10 கருத்துக்கள்

Production : Etcetera Entertainment, PG Media Works
Direction : Usha Krishnan
Starring : Kalaiarasan, Kaali Venkat, Shalin, Bala Saravanan, Vaishali
Music : Justin Prabhakaran
Camera : PG Muthiah
Editing : Selva RK

பெண் இயக்குனர் உஷா கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ராஜா மந்திரி’ எப்படி?

கதைக்களம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் பாசக்கார அண்ணன் தம்பி, காளி வெங்கட், கலையரசன்! இவர்களில் காளி வெங்கட் சோடா வியாபாரம் செய்கிறார். கலையரசன் கல்லூரியில் படிக்கிறார். காளி வெங்கட்டுக்கு நிறைய பெண் பார்த்தும் திருமணம் கை கூடவில்லை! இந்நிலையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வைஷாலி மீது காதல் கொள்கிறாற் காளி வெங்கட்! கலையரசனும் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஷாலினை காதலிக்கிறார். ஒரு நாள் இரவு காளி வெங்கட் காதலி வைஷாலியை பார்க்க வீட்டு வேலியை தாண்டி குதித்து செல்ல, இதனால் இரு வீட்டாருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு வைஷாலி குடும்பத்தினர் அந்த ஊரை விட்டே சென்று விடுகின்றனர். காளி வெங்கட்டுக்கு பெண் பார்க்கும் படலம் மீண்டும் தொடர்கிறது. இந்நிலையில் ஒரு இடத்துக்கு பெண் பார்க்க வர மறுக்கும் காளி வெங்கட்டை தம்பி கலையரசன் கட்டாயப்படுத்தி பெண் பார்க்க அழைத்து செல்கிறார். அங்கே பெண்ணாக வந்து நிற்பவர் கலையரசனின் காதலி ஷாலின்! தன்னுடைய காதலன் கலையரசன் தான் தன்னை பெண் பார்க்க வந்திருக்கிறார் என்று நினைத்த ஷாலின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, காளி வெங்கட்டும் அழகான பெண்ணே தன்னை மணக்க சம்மதம் தெவித்தார் என்று நினைத்து திருமணத்திற்கு சம்மதிக்கிறார். விஷயம் தெரிந்த கலையரசன் எப்படி அண்ணனின் மனம் நோகாமல் தனது நண்பர் பாலசரவணன் உதவியுடன் அந்த திருமணத்தை நிறுத்துகிறார்? எப்படி ஊரை விட்டு சென்ற அண்ணன் காதலி வைஷாலியை அவருடன் சேர்த்து வைக்கிறார் என்பது தான் ‘ராஜா மந்திரி’யின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்!

அரதபழசான கதை என்றாலும் படம் பார்க்க வருபவர்களை இரண்டு மணிநேரம் சிரிக்க வைத்தால் போதும் என்ற முடிவோடு லாஜிக் விஷயங்களை எல்லாம் கடை பிடிக்காமல் இப்படத்தை ரசிக்கும் படி இயக்கியுள்ளார் உஷா கிருஷ்ணன். பெண் இயக்குனராலும் இதுபோன்ற காமெடி படங்களை இயக்க முடியும் என்பதற்கு ‘ராஜா மந்திரி’ சிறந்த எடுத்துகாட்டாக அமைந்துள்ளது. காளி வெங்கட், கலையரசன் ஆகியோரின் அந்நியோன்யத்தை கண்டு அடிக்கடி கண் கலங்கும் அப்பா ‘நாடோடிகள்’ கோபால் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும்போது சிரிக்காதவர்களே இருக்க முடியாது! எல்லை மீறாத காதல் காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகள், வசனங்கள் என எல்லாவற்றிலும் கண்ணியம் காத்திருக்கிறார் இயக்குனர்! பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவில் கிராமத்து இயற்கை அழகை ரசிக்க முடிகிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ‘பக்கத்து வீட்டு காலி ஃப்ளவரே…’ பாடல் உட்பட இரண்டு பாடல்கள் இனிமை ரகம்.

நடிகர்களின் பங்களிப்பு

காளி வெங்கட், கலையரசன் இருவருக்கும் நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்கள்! கலையரசனை விட நடிப்பில் அதிக ஸ்கோர் செய்திருப்பவர் காளி வெங்கட் தான்! தன்னையும் ஒரு பெண் திருமணம் செய்ய சம்மதித்தாளே என்று நினைத்து மகிழும்போதாகட்டும், அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தும்போதாகட்டும் யதார்த்தமான நடிப்பில் மனதில் நிற்கிறார் காளி! இவரது காதலியாக வரும் வைஷாலி, கலையரசனின் காதலியாக வரும் ஷாலின், நண்பராக வரும் பாலசரவணன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் நன்றாக வேலை வாங்கியுள்ளார் இயக்குனர்!

பலம்

காமெடி காட்சிகள்
நடிகர்களின் சிறந்த பங்களிப்பு
ஒளிப்பதிவு, இசை

பலவீனம்

கதை
லாஜிக் விஷயங்களை கடைபிடிக்காதது

மொத்தத்தில்

காமெடி கலந்த ஒரு கிராமத்து ஜனரஞ்சக படத்தை பார்த்து ரசிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் ‘ராஜா மந்திரி’.

ஒரு வரி பஞ்ச் : காமெடி தர்பார்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தட்றோம் தூக்றோம் டீஸர்


;