மெட்ரோ - விமர்சனம்

செயின் திருடர்கள் ஜாக்கிரதை!

விமர்சனம் 24-Jun-2016 3:48 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Ananda Krishnan
Production : E5 Entertainments, Metro Productions
Starring : Shirish, Bobby Simha, Sendrayan
Music : Johan
Cinematography : N. S. Uthaya Kumar
Editing : M. Ramesh Baarathi

‘ஆள்’ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணனின் இரண்டாவது படைப்பு ‘மெட்ரோ’. சென்சாரில் பல பிரச்சனைகளை சந்தித்து, இப்போது ‘ஏ’ சர்டிஃபிக்கெட்டுடன் வெளியாகியிருக்கும் ‘மெட்ரோ’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

பத்திரிகையில் பணிபுரிந்து வரும் கதாநாயகன் சிரிஷின் குடும்பம், ஓய்வு பெற்ற ‘போலீஸ்’ அப்பா, அன்பான அம்மா, காலேஜில் படிக்கும் அன்பான தம்பி சத்யா என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறது. வீட்டுக்கு தெரியாமல் ஒரு பெண்ணை காதலிக்கும் சத்யா, காதலியின் ஆடம்பர வாழ்க்கை ஆசைகளால் கூட படிக்கும் மாணவன் நிஷாந்துடன் சேர்ந்து ரோட்டில் நடந்து செல்லும் பெண்களின் தங்க சங்கிலியை பறித்து பணத்தை ஈட்டி ஆடம்பர வாழ்க்கையை துவங்குகிறார். பண போதை தலைக்கு ஏறிய சத்யா சங்கிலி பறிப்பு கும்பல் தலைவன் பாபி சிம்ஹாவிடம் அறிமுகமாகி, தொடர்ந்து சங்கிலி பறிப்பு தொழிலில் ஈடுபட, ஒரு கட்டத்தில் சத்யாவால் அவனுடைய அம்மாவின் உயிரே பறி போகும் நிலை உருவாகிறது. சந்தோஷமாக வாழ்ந்து வந்த குடும்பம் சின்னா பின்னமாகிறது! அம்மாவின் உயிரை பறித்தவனை கண்டு பிடிக்க களத்தில் இறங்குகிறார் சத்யாவின் அண்ணன் சிரிஷ்! ஆனால் அவருக்கு நிறைய அதிர்ச்சிகள் காத்திருந்தது! அது என்ன? அம்மாவின் கொலையாளியை சிரிஷ் கண்டுபிடித்தாரா இல்லையா? இதற்கெல்லாம் விடை தரும் படமே ‘மெட்ரோ’.

படம் பற்றிய அலசல்

சென்னை போன்ற ‘மெட்ரோ’ சிட்டிகளில் நடக்கும் செயின் பறிப்பு சம்பவங்களை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன்! ஒரு இளைஞனை கொடூரமாக சித்திரவதை செய்யும் சஸ்பென்ஸ் காட்சியுடன் துவங்கி, அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகளுடன் படம் ஜெட் வேகம் பிடிக்கிறது. நவநாகரீக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் செயின் பறிப்புக்கு ஆளாகும் பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக படமாக்கியுள்ள இயக்குனர், செயின் பறிப்புக்கு ஆளாகாமல் இருக்க பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் இப்படத்தில் வலியுறுத்தியுள்ளார். சொல்லப் போனால் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்ற முறையில் இப்படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்தான் வழங்கியிருக்க வேண்டும்!

ஜோஹனின் பின்னணி இசை, என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு, ரமேஷ் பாதியின் படத்தொகுப்பு முதலானவை இயக்குனரின் எண்ணங்களுக்கு கை கொடுத்துள்ளன. ஆனால், பாடல்கள் கவனம் பெறும்படியாக அமையவில்லை. ஒரு சில லாஜிக் மீறல்களும், நம்ப முடியாத காட்சி அமைப்புகளும் படத்தின் பலவீனங்கள் பட்டியலில் இடம்பிடிக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

அண்ணன் தம்பியாக வரும் புதுமுகங்கள் சிரிஷ், சத்யா பொருத்தமான தேர்வு! சீரியஸ் காட்சிகளில் வெளிப்படுத்த வேண்டிய எக்ஸ்பிரஷன்களில் சிரிஷ் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்! தடுமாற்ற மனநிலை கொண்ட கேரக்டரில் தோன்றியிருக்கும் சத்யா, சங்கிலி பறிப்பு கும்பல் தலைவனான பாபி சிம்ஹாவுக்கே தண்ணி காட்டி அவரது இடத்தை பிடிக்கும் காட்சிகளில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.வில்லனாக பாபி சிம்ஹாவும் மிரட்டியுள்ளார். இவர்களுடன் சென்ட்ராயன், யோகி பாபு, இயக்குனர் ராஜா, துளசி, நிஷாந்த், மாயா ஆகியோரும் தங்களது பாத்திரங்களை சிறப்பித்துள்ளனர்.

பலம்

விறுவிறுப்பான திரைக்கதை
அந்நியப்பட்டு நிற்காத கேரக்டர்கள், நடிப்பு
பின்னணிஇசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

ஒரு சில லாஜிக் மீறல்கள், நம்ப முடியாத காட்சிகள் தவிர்த்து இப்படத்தில் பெரிய குறைகள் எதுவும் இல்லை.

மொத்தத்தில்...

செயின் பறிப்பு விஷயத்தை மையப்படுத்தி, அழகான திரைக்கதை அமைப்புடன் வெளிவந்திருக்கும் இந்த ‘மெட்ரோ’ ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராது!

ஒரு வரி பஞ்ச் : செயின் திருடர்கள் ஜாக்கிரதை!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;