அம்மா கணக்கு – விமர்சனம்

கணக்கு தப்பாகவில்லை!

விமர்சனம் 24-Jun-2016 10:07 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Ashwini Iyer Tiwari
Production : Colour Yellow Pictures, Wunderbar Films
Starring : Amala Paul, Revathi, Samuthirakani
Music : Ilaiyaraaja
Cinematography : Gavemic U Ary

ஹிந்தியில் வெளியாகி பேசப்பட்ட படம் என்பதோடு ஒரு சில திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு கவனம் பெற்ற ‘நில் பேட்டி சனாடா’ படத்தின் ரீ-மேக்கான ‘அம்மா கணக்கு’ சரியாக வந்துள்ளதா?

கதைக்களம்

கணவரை இழந்த அமலா பால், கஷ்டப்பட்டு வீட்டு வேலைகள் செய்து தன் மகள் யுவஸ்ரீயை படிக்க வைக்கிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் யுவஸ்ரீ கணக்கு பாடத்தில் ரொம்பவும் வீக்! ட்யூஷன் போகவும் வசதியில்லை! என்னதான் படித்தாலும் பத்தாம் வகுப்பு தேறாது, தனது எதிர்காலமும், அம்மாவைப் போல வேலைக்காரி தான் என்ற முடிவுக்கு வருகிறார் யுவஸ்ரீ! ஆனால் யுவஸ்ரீயை எப்படியாவது நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் அமலா பால்! அதற்கு அமலா பாலின் முதலாளி அம்மாவான ரேவதியும் உதவி புரிகிறார். அவர் யோசனை படி யுவஸ்ரீயை நன்றாக படிக்க வைக்க, அவள் படிக்கும் அதே வகுப்பிலேயே மாணவியாக சேருகிறார் அமலா பால்! பள்ளியில் மாணவியாக சேரும் அமலாவால் யுவஸ்ரீயை நன்றாக படிக்க வைக்க முடிந்ததா? அமலா பாலின் கனவு நனவாகியதா?என்பதற்கு விடை தரும் படமே ‘அம்மா கணக்கு’

படம் பற்றிய அலசல்

ஹிந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இயக்கியிருக்கிறார்! மகளை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் ஒரு தாயின் ஏக்கம், எதிர்பார்ப்பு, எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைக்கிறார் என்பது தெரியாமல் படிப்பில் அலட்சியமாக இருக்கும் ஒரு மாணவி - இவர்களுக்குள் நடக்கும் பாசப் போராட்டங்கள் தான் படத்தின் மைய கரு! அதை கிட்டத்தட்ட இரண்டு மணி நேர திரைக்கதையாக்கி ரசிக்கும் படியாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அஸ்வினி ஐயர்! மகள் படிக்கும் வகுப்பிலேயே மாணவியாக சேரும் அமலா பால் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்றுக்கொள்ளும் படியாகஅமையவில்லை என்றாலும், ‘வைராக்கியம் வந்து விட்டால் எதையும் சாதிக்கலாம்’ என்பதை உணர்த்தும் விதமாக அக்காட்சி அமைந்திருப்பதால் ஏற்றுக் கொள்ளலாம்! அப்துல் கலாமின் ‘கனவு காணுங்கள்’ என்ற தத்துவத்தை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்திருக்கும் இப்படம் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் நல்ல ஒரு கருத்தை கூறும் படமாக அமைந்துள்ளது. கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் இல்லாமல் யதார்த்தமாக பயணிக்கும் திரைக்கதைக்கு இளையராஜாவின் இசையும், கவேமிக் யு ஆரியின் ஒளிப்பதிவும் மிக்க பலம் சேர்த்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

தாயாக வரும் அமலா பால், மகளாக வரும் யுவஸ்ரீ (அறிமுகம்) இருவரும் நடிப்பில் போட்டி போட்டு கொண்டு சிறப்பாக நடித்துள்ளனர். நடிப்பை பொறுத்தவரையில் அமலா பாலுக்கு இப்படம் பெயர் சொல்லும் படமாக அமைந்துள்ளது! கணக்கு வாத்தியாராக வரும் சமுத்திரகனியின் நடை, உடை, பாவனை, மாணவர்களுக்கு அவர் பாடம் சொல்லி தரும் பாங்கு ரசிக்க வைக்கிறது. ஒரு சில இடங்களில் மிகையான நடிப்பு என்று நமக்கு தோன்றினாலும் ஒரு சில வாத்தியார்கள் இப்படி தான் இருப்பார்கள் என்பதை அப்படியே பிரதிபலித்து காட்டியுள்ளார் சமுத்திரகனி! டாக்டராக வரும் ரேவதி பக்குவமான நடிப்பில் கவர்கிறார். விஷால் தேவ், மளவிகா, விக்கி ஆகியோரும் தங்களது பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாகநடித்துள்ளனர்.

பலம்

கமர்ஷியல் விஷயங்கள் தவிர்த்து அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை
நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பு
இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

ஒரு சில லாஜிக் விஷயங்களை தவிர்த்து பார்த்தால் இப்படத்தில் பெரிய குறைகள் எதுவும் இல்லை!

மொத்தத்தில்

பெயரும், பொருளும் ஈட்டி தந்த ‘காக்கா முட்டை’ படத்தை தயாரித்த தனுஷின் மற்றொரு தயாரிப்பான இந்த ‘அம்மா கணக்கு’ பொருளை ஈட்டி தருகிறதோ இல்லையோ, நல்ல கருத்தை கூறும் ஒரு படத்தை தயாரித்தவர் என்ற பெயரை ஈட்டி தரும் என்பது நிச்சயம்! பொழுதுபோக்கு விஷயங்களை எதிர்பார்க்காமல் யதார்த்தமான படங்களை ரசிப்பவர்களுக்கு ஏற்ற படம் இந்த ‘அம்மா கணக்கு.

ஒரு வரி பஞ்ச் : கணக்கு தப்பாகவில்லை!

(கமர்ஷியலாக இப்படத்தை ரேட்டிங் செய்ய விரும்பாததால் ‘அம்மா கணக்கு’க்கு ரேட்டிங்கை தவிர்த்துள்ளோம்!)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;