விஜய்யை ‘இளையதளபதி’யாக்கிய 5 விஷயங்கள்!

விஜய்யின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் 5 முக்கிய விஷயங்களைப் பற்றிய தொகுப்பு

கட்டுரை 22-Jun-2016 11:50 AM IST Chandru கருத்துக்கள்

கிட்டத்தட்ட 23 வருடங்களாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ‘இளைய தளபதி’ விஜய், இன்று 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிரபல இயக்குனரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவிற்குள் நுழைந்தாலும், தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சம் வெற்றிகளைப் பெற்று இன்று ரசிகர்களின் ‘இளையதளபதி’யாகியிருக்கிறார் விஜய். அவரின் இந்த வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணிகளில் 5 முக்கிய விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

எது சரியாக வரும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் விஜய்!

தனக்கென ஒரு வட்டம், அதில் எதைத் தேர்ந்தெடுத்தால் ஜெயிக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் நடிகர் விஜய்தான். கிட்டத்தட்ட 59 படங்களில் நடித்திருக்கும் விஜய் பட ஃபார்முலா இதுதான் என்பதை குழந்தைகூட சொல்லிவிடும். அதேபோல் தேவையில்லாத கெட்அப் மாற்றங்கள் எதையும் முயற்சி செய்வதில்லை விஜய். பல சமயங்களில் இது விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டாலும், கூர்ந்து கவனித்தால் விஜய்யின் வெற்றி ரகசியமே இதில்தான் அடங்கியிருக்கும். ரசிகர்கள் தன்னிடமிருந்து எதிர்பார்ப்பது தன் அசத்தலான நடனம், சின்னச் சின்ன எக்ஸ்பிரசன்ஸ், அதிரடியான சண்டைகள் மட்டும்தான் என்பதை விஜய் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார். அந்தப் புரிதலே இன்று கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதர்ஷ நாயகனாக விஜய் இருப்பதற்கு முக்கிய காரணம்.

பொதுவெளியிலும் வெளிப்படும் நல் மனம்!

ஏழைகளுக்கும், பெண்களுக்கும் உதவி செய்வதை திரையில் மட்டும் செய்வதோடு நின்றுவிடாமல், நிஜ வாழ்க்கையிலும் தன்னால் முடிந்த உதவிகளை எப்போதும் செய்யத் தவறியதில்லை விஜய். அதேபோல் தன் அன்பையும், மகிழ்ச்சியையும் தன் நெருங்கிய நண்பர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் எப்போதும் வெளிப்படுத்தத் தவறியதில்லை விஜய். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நலத்திட்ட உதவிகளைச் செய்வதோடு, தன் ரசிகர்களை சந்திப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய். இந்த நல்ல மனமே விஜய்யை, ரசிகர்களின் ‘இளைய தளபதி’யாக்கியிருக்கிறது.

பொறுப்பான தந்தை, பாசமான மகன்!

மாதக்கணக்கில் ஷூட்டிங், ஷூட்டிங் என பிஸியாக இருந்தாலும், வருடத்திற்கு ஒருமுறை தன் குடும்பத்துடன் ஒரு மாத காலம் வெளிநாட்டில் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் விஜய். அதேபோல், ஒவ்வொரு வார இறுதியிலும் தனது பெற்றோர்களுடன் நேரத்தைச் செலவிடுவார் இந்த அம்மா செல்லம்.

விஜய்யின் இளமை ரகசியம்!

விஜய்யின் வெற்றி ரகசியத்தில் முக்கிய பங்கு வகிப்பது, காலங்கள் கடந்தும் மாறாத அவரின் இளமையும், உடல் தோற்றமும்தான். 23 வருட சினிமா கேரியரில் விஜய்யின் புகைப்படங்களை தொகுத்துப் பார்த்தால் உடலளவில் அவரிடம் பெரிய வித்தியாசங்கள் எதுவுமே இருக்காது. எப்போதும் சிறு புன்னகை, தினந்தோறும் பருகும் லிட்டர் கணக்கிலான தண்ணீரே விஜய்யின் இளமை ரகசியம் என்கிறார்கள் அவரின் நெருங்கிய வட்டாரங்கள்.

சக கலைஞர்களைக் கொண்டாடத் தெரிந்த நாயகன்!

தொழில் போட்டி என்பதைத் தாண்டி, தனது சக காலத்து முன்னணி நட்சத்திரங்களுடன் நட்போடு பழகுவதில் விஜய்யின் குணமே தனிதான். அஜித், சூர்யா, விக்ரம் என அனைவருடனும் ஏதாவது ஒரு தருணத்தில் தனது நேரத்தை செலவழிக்கத் தவறியதில்லை விஜய். அதேபோல் தன்னுடன் பணிபுரியும் கலைஞர்களையும் வெகுவாக நேசிப்பார் விஜய். ஒவ்வொரு படம் முடிவடையும்போதும்தான், தன் கையால் படக்குழுவினருக்கு உணவு பரிமாறுவதை நீண்டகாலமாகவே வழக்கமாக கொண்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;