காலம் மாறிக்கொண்டே வருகிறது... நம்மூர் தமிழ்ப் படங்களுக்கு இணையாக அதிக தியேட்டர்கள் எண்ணிக்கையை கைப்பற்றி வருகின்றன ஹாலிவுட் படங்கள். அதற்கு சமீபத்திய உதாரணங்கள் தி ஜங்கிள் புக், கான்ஜுரிங் 2. இந்த வரிசையில் இப்போது இன்டிபென்டென்ஸ் டே படத்தின் 2ஆம் பாகம் இடம்பெறவிருக்கிறது.
ரோலன்ட் எமெரிச் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான ‘இன்டிபென்டென்ஸ் டே’. படத்தைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகம் ‘இன்டிமென்டஸ் டே : ரிசர்ஜென்ஸ்’ வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கிறது. 200 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் பில் புல்மேன், ஜெஃப் கேல்டுப்ளம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்திலும் நடித்த இவர்களுடன் லியம் ஹெம்ஸ்வொர்த், ஜுட் ஹிர்ஸ்ச் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஹெரால்டு க்ளோசர், தாமஸ் வான்கர் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்திற்கு மார்கஸ் ஃபோர்டெரர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இதில் 80க்கும் மேற்பட்ட திரையரங்குளில் தமிழில் வெளியாகவிருக்கிறது.