முத்தின கத்திரிக்கா - விமர்சனம்

இரண்டாம் பாதியை விட முதல் பாதி ருசி அதிகம்!

விமர்சனம் 18-Jun-2016 1:50 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Venkat Raghavan
Production : Avni Cinemax
Starring : Sundar C, Poonam Bajwa, Vaibhav
Music : Siddharth Vipin
Cinematography : Bhanu Murugan
Editing : N. B. Srikanth

சுந்தர்.சி.யின் சிஷ்யரும், அறிமுக இயக்குனருமான வெங்கட் ராகவன் இயக்கியிருக்கும் ‘முத்தின கத்தரிக்கா’வின் ருசி எப்படி?

கதைக்களம்

சுந்தர்.சி.யின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக அரசியலில் இருந்து வருகிறது. ஆனால் சுந்தர்.சி.யின் தாத்தா, அப்பா என யாராலும் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை. இதனால் சுந்தர்.சி.யை அவரது அம்மா சுமித்ரா அரசியல் வாடை படாமலேயே வளர்க்கிறார். படித்து வளர்ந்த சுந்தர்.சி. ஒரு நாள் ஒரு அரசியல்வாதியை போல் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வெளியில் செல்ல, தனக்கு போலீஸ் உட்பட அனைவரும் தரும் மரியாதையை கண்டு அரசியலில் குதிக்க முடிவு செய்து, ஒரு கட்சியை துவங்குகிறார். இந்நிலையில் வெவ்வேறு கட்சிகளில் எதிரும் புதிருமாக இருக்கும் அண்ணன், தம்பிகளான விடிவி கணேஷும், சிங்கம் புலியும் சுந்தர்.சி.யை எதிர்ப்பதில் இணைந்து செயல்படுகின்றனர்! இவர்கள் இருவரும் ஊருக்கு செய்யும் நல்ல காரியங்களை தந்திரமாக தனக்கு விளம்பரமாக்கி கொள்ளும் சுந்தர்.சி., எப்படி அவர்களை எதிர்த்து தேர்தலில் நின்று எம்.எல்.ஏ ஆகிறார்? 40 வயதாகியும் திருமணம் ஆகாத சுந்தர்.சி எப்படி தன் முன்னாள் காதலியான கிரணின் மகள் பூனம் பஜ்வாவை கரம் பிடிக்கிறார் என்பதற்கு விளக்கம் தரும் படமே ‘முத்தின கத்திரிக்கா.’

படம் பற்றிய அலசல்

இது ஒரு ரீ-மேக் படம் (மலையாள ‘வெள்ளி மூங்கா’) என்பதால் இயக்குனர் அதிகம் சிரத்தை எடுக்க வேண்டிய அவசியமேற்படவில்லை. ‘வெள்ளி மூங்கா’ கதையை அப்படியே நம் நேட்டிவிட்டிக்கு தகுந்த படி மாற்றி ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார். இடைவேளை வரை காமெடியாக செல்லும் திரைக்கதை, இடைவேளைக்கு பிறகு தேர்தல் வந்ததும் சூடு பிடிக்கிறது என்றாலும் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம், விறுவிறுப்பு பிற்பாதில் காணவில்லை! திரைக்கதையின் இடை இடையே சில குளறுபடிகள் இருந்தாலும் ‘முத்தின கத்திரிக்கா’ சுந்தர்.சி. ஸ்டைலிலான ஒரு காமெடி படமாக அமைந்துள்ளது. பானு முருகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஆனால் சித்தார்த் விபினின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பெரிதாக பலம் சேர்க்கவில்லை!

நடிகர்களின் பங்களிப்பு

சுந்தர்.சி., தனது வயதுக்கும் தோற்றத்திற்கும் ஏற்ற ஒரு கேரக்டரை தேர்வு செய்து சிறப்பாக நடித்துள்ளார். பாட்டி கிளியிடம் ஆரம்பித்து அதன் பேத்தி கிளி வரை தனக்கு எப்போது கல்யாணம் ஆகும் என்று கேட்கும் படியான ஒரு ‘முத்தின’ கேரக்டரில், அரசியல், நையாண்டி, தந்திரம் என ரசிக்க வைத்திருக்கிறார்! தான் காதலிக்கும் பூனம் பஜ்வா பள்ளியில் படிக்கும்போது தன்னுடன் சண்டையிட்ட சக மாணவன் ரவி மரியா மற்றும் தான் காதலித்த பெண் கிரணின் மகள் என்பது தெரிய வருவது காமெடியின் உச்சம்! படம் முழுக்க கிளாமராக வரும் பூனம் பஜ்வாவை ரசிக்கலாம்! சுந்தர்.சி.யின் நண்பராக வந்து கலகலக்க வைக்கும் சதீஷின் ஒட்டு மீசை அவருக்கு ஒட்டவேயில்லை! அண்ணன் தம்பிகளாக வரும் சிங்கம் புலி, விடிவி கணேஷ் ஏற்று நடித்துள்ள பாத்திரங்கள் இன்றைய அரசியலில் நடக்கும் சில விஷயங்களை அப்படியே பிரதிபலித்துள்ளன. யோகி பாபு, சிங்கப்பூர் தீபன், ஸ்ரீமன், முன்னாள் கதாநாயகியான கிரண், ரவி மரியா, சுமித்ரா ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

பலம்

1. படத்தின் காமெடி காட்சிகள்
2.நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு
3. ஒளிப்பதிவு

பலவீனம்

1.லாஜிக் விஷங்களை கவனத்தில் கொள்ளாதது
2.சுவாரஸ்யம் விறுவிறுப்பு குறைவான இரண்டாம் பகுதி
3. கவனம் பெறாத பாடல்களும் பின்னணி இசையும்

மொத்தத்தில்

லாஜிக் விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல் இரண்டு மணிநேரம் சிரித்து பொழுதை போக்க நினப்பவர்களுக்கு இந்த ‘முத்தின கத்திரிக்கா’ பிடிக்க வாய்ப்பிருக்கிறது!

ஒரு வரி பஞ்ச் : இரண்டாம் பாதியை விட முதல் பாதி ருசி அதிகம்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;