எனக்கு இன்னொரு பேர் இருக்கு - விமர்சனம்

இப்படி பண்ணிட்டீங்களே ‘நைனா’?

விமர்சனம் 17-Jun-2016 4:06 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Sam Anton
Production : Lyca Productions
Starring : G. V. Prakash Kumar, Anandhi, Saravanan, Karunaas
Music : G. V. Prakash Kumar
Cinematography : Krishnan Vasant
Editing : Ruben

‘டார்லிங்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது இயக்குனர் சாம் ஆண்டன், ஜி.வி.பிரகாஷ் கூட்டணி. ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ எப்படி இருக்கு?

கதைக்களம்

ஒட்டுமொத்த ராயபுரத்தையும் யார் கன்ட்ரோலில் வைத்திருக்கிறாரோ அவர்தான் நைனா (சரவணன்). தனக்குப் பிறகு தன் மகள் ஆனந்தியைக் கட்டிக்கொள்ளப்போகும் மாப்பிள்ளைக்கு தன்னுடைய ‘நைனா’ பதவியை விட்டுக் கொடுக்க ஆசைப்படும் சரவணன், அதற்காக ஊரிலிருக்கும் பயங்கரமான ரௌடி ஒருவரை கண்டுபிடிக்கச் சொல்கிறார். நிஜ ரௌடியை கூட்டி வருவதற்குப் பதிலாக, அப்பாவி ஜி.வி.பிரகாஷை பெரிய ரௌடி என நினைத்து சரவணனிடம் அழைத்து வருகிறார்கள் அவரது அடியாட்கள். ஏற்கெனவே, ஜி.வி.பிரகாஷுக்கு ஆனந்தி மேல் காதல் இருப்பதால், அவரும் ரௌடிபோல நடித்து ஆனந்தியை கரம் பிடிக்கிறார். அதன்பிறகு திடீரென புதிதாக முளைக்கும் வில்லன் ஒருவன், சரவணனைத் தாக்கிவிட்டு ‘நைனா’ பதவியைக் கைப்பற்றுகிறார். அப்போதுதான் ஜி.வி. ரௌடியில்லை என்பதே அனைவருக்கும் தெரிய வருகிறது. அதன்பிறகு நடக்கும் காமெடி களேபரங்களே இந்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’.

படம் பற்றிய அலசல்

கதை, திரைக்கதை, சினிமா இலக்கணம் என எதைப்பற்றியும் எந்த கவலையுமில்லாமல் முன்னணி நடிகர்களின் ‘ஹிட்’ பட ரெஃபெரன்ஸை வைத்தே ஒட்டுமொத்த படத்தையும் நகர்த்திவிட வேண்டும் என்ற முடிவோடு களத்தில் குதித்திருக்கிறார் சாம் ஆண்டன். தலைப்புக்கு ‘பாட்ஷா’ பட டயலாக், நாயகன் கேரக்டருக்கு ரஜினியின் ஹிட் படத் தலைப்பு, டீஸருக்கு அஜித், விஜய்யின் பஞ்ச் டயலாக் என படம் வெளிவருவதற்கு முன்பே பல விஷயங்களை கையிலெடுத்த சாம் ஆண்டன், முழுப்படத்திலும் அதைத்தான் செய்திருக்கிறார் என்பதுதான் பெரும் சோகம். இதுபோதாதென்று, லேட்டஸ்ட் ‘கபாலி’ பட டயலாக் முதற்கொண்டு ‘டப்பிங்’ மூலம் கடைசி நேரத்தில் படத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் போன்றவை படத்தின் தன்மைக்கேற்ப பயன்பட்டிருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் தனக்கு கிடைத்த ‘யூத்’ ரசிகர்களை தக்க வைப்பதற்காக கிட்டத்தட்ட அதே போன்றதொரு கேரக்டரில் இப்படத்திலும் நடித்திருக்கிறார் ஜி.வி. இது அவரின் வளர்ச்சிக்கு பலமாக அமையுமா அல்லது பலவீனமாக மாறுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் இரட்டை அர்த்த வசனங்களையாவது ஜி.வி.பிரகாஷ் கைவிட வேண்டும். மற்றபடி, நடிப்பில் அவரிடம் எந்த பெரிய மாற்றமும் இல்லை. ஒரே மாடுலேஷனில்தான் நடிக்கவும் செய்கிறார், டான்ஸும் ஆடியிருக்கிறார். ஆனந்தி இப்படத்தின் ஹீரோயின் என்பதைத் தவிர, அவருக்குப் பெரிய வேலை எதுவும் இல்லை. சரவணன், கருணாஸ், விடிவி கணேஷ், நான்கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு, சார்லி, நிரோசா என அவரவர் வேலைகளை சரியாக செய்திருக்கிறார்கள்.

பலம் - பலவீனம்

சிற்சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கும் காமெடிகளைத் தவிர்த்து பலம் என்று சொல்வதற்கு இப்படத்தில் பெரிதாக எதுவுமில்லை.

மொத்தத்தில்...

திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்காக சினிமாவிற்கென்றிருக்கும் இலக்கணங்களைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல், ரசிகர்களிடம் கைதட்டல்களை வாங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு பல வெற்றிப்படங்களின் காட்சிகளை வைத்தே முழுப்படத்தையும் ஒப்பேற்றியிருக்கிறார்கள். ஒருவேளை இப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும், அது சம்பந்தப்பட்ட படங்களுக்கான வரவேற்பாகத்தான் நிச்சயம் இருக்க முடியும்.

ஒரு வரி பஞ்ச் : இப்படி பண்ணிட்டீங்களே ‘நைனா’?

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;