சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் - ஹாலிவுட் பட விமர்சனம்

‘சென்ட்ரல் இன்டலிஜென்ஸ்’ படம் உங்களுக்கு ‘டைம்பாஸ்’ தரும்!

விமர்சனம் 17-Jun-2016 11:03 AM IST Top 10 கருத்துக்கள்

ஆக்ஷன் படங்களின் ஆதர்ச நாயகன் டிவைன் ஜான்சன்... ‘ராக்’ என்று சொன்னால் ரசிகர்களுக்கு பட்டென நினைவுக்கு வருவார். அவரின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கிறது ‘சென்ட்ரல் இன்டலிஜென்ஸ்’. போலீஸ் வேடமென்றால் சொல்லவே வேண்டாம்... மனிதர் அடித்து தூள் கிளப்பிவிடுவார். இதற்கு சமீபத்திய உதாரணம் ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் தொடர். இந்த ‘சென்ட்ரல் இன்டலிஜென்ஸ்’ படத்தில் ஆக்ஷன் மட்டுமின்றி காமெடியிலும் அடித்து தூள் கிளப்பியிருக்கிறார் ராக்.

1996ஆம் ஆண்டில் படம் துவங்குகிறது... ஹைஸ்கூலில் படிக்கும் குண்டு பையனான பாப் ஸ்டோன் (டிவைன் ஜான்சன்), குறும்புக்கார மாணவர்கள் சிலரால் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருக்கும்போது இழுத்துவரப்பட்டு நட்டநடு ஆடிட்டோரியத்திற்குள் தள்ளிவிடப்படுகிறார். சுத்தி இருப்பவர்கள் பாப் ஸ்டோனைப் பார்த்து சிரிக்க, அந்த இடத்தில் தனது மேலாடையை கழற்றிக் கொடுத்து பாப்பின் மனதில் இடம்பிடிக்கிறார் கால்வின் ஜாய்னர். காலங்கள் உருண்டோடி நிகழ்காலத்தில் படம் நகரத் தொடங்குகிறது...

இப்போது, கால்வின் அக்கவுன்டன்ட்டாக பணிபுரிகிறார். ஃபேஸ்புக் மூலம் அவரைக் கண்டுபிடித்து பார்க்க ஆசைப்படுவதாக பார் ஒன்றிற்கு அழைக்கிறார் பாப் ஸ்டோன். தன் பள்ளிக்கால நண்பனைப் பார்ப்பதற்காக அவரும் அங்கே வர இருவரும் குடித்து கும்மாளமிட்டு, தங்கள் பள்ளியையும் ஒருமுறை சுற்றிப்பார்த்துவிட்டு கால்வின் வீட்டிற்குச் சென்று தூங்குகிறார்கள். மறுநாள் காலை, பாப்பை கைது செய்வதற்காக சிஐஏ ஏஜென்ட் அங்கு வருகிறார்கள். ஆனால், அதற்குள் பாப் அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். பாப் ஸ்டோனைத் தேடி சிஐஏ ஏன் வருகிறது? பாப் யார்? அதன்பிறகு என்னென்ன சம்பவங்கள் நடக்கின்றன என்பதே இப்படத்தின் கதைக்களம்.

வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் பட ஸ்டைலில் உலகைக் காக்கும் தனி ஒருவனின் கதைதான் இப்படத்திலும். ஆக்ஷன் காட்சிகளிலும் புதிய முயற்சிகள் எதுவும் இல்லை. ஆனாலும், படம் போரடிக்காமல் செல்கிறது. அதற்குக் காரணம் டிவைன் ஜான்சன், கெவின் கர்ட்டின் கூட்டணி அடிக்கும் லூட்டிகள்தான். பயந்து நடுங்கும் கெவின் கர்ட்டை ஒவ்வொரு முறையும் சிக்கலில் மாட்ட வைத்து விழிபிதுங்க வைப்பதே டிவைன் ஜான்சனின் வேலை. குறிப்பாக கெவின் கர்ட்டின் மனைவியிடம் ஒரு டாக்டராக அறிமுகமாகும் டிவைன் ஜான்சன், கெவினை படுத்தி எடுக்கும் காட்சியைச் சொல்லலாம். தியேட்டர் சிரிப்பலையில் அதிர்கிறது.

லாஜிக்கைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு ஜாலியான ஆக்ஷன் காமெடிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து படத்தை இயக்கியிருக்கிறார் ராசன் மார்ஷல் தர்பெர்.
Amy Rayon, Aaron Paul மற்றும் Danniele Nicolet ஆகியவர்களும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு-Barry Peterson. action காட்சிகளின் அமைப்பாளர்கள்-Mark Fichera மற்றும் Mark Wickham. Hansa Pictures இன் வெளியீடு, இப்படம்.

ஆக்ஷன் கிங் ராக் இப்படத்தில் இருந்தும், விறுவிறுப்பான திரைக்கதையோ, பரபரப்பான க்ளைமேக்ஸோ, அனல்பறக்கும் சண்டைக்காட்சிகளே பெரிதாக எதுவும் இல்லை. ஆனால், கதனை காமெடி மூலம் நிவர்த்தி செய்திருக்கிறார்கள்.

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் ரேஞ்சுக்கு எதிர்பார்க்காமல், ராக்கின் ஒரு சாதாரண படத்தின் எதிர்பார்ப்போடு சென்றால் ‘சென்ட்ரல் இன்டலிஜென்ஸ்’ படம் உங்களுக்கு ‘டைம்பாஸ்’ தரும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;