அச்சம் என்பது மடமையடா - இசை விமர்சனம்

ரஹ்மானின் ஆல் டைம் ஃபேவரிட் ரகம் இந்த ‘அச்சம் என்பது மடமையடா’ ஆல்பம்!

இசை விமர்சனம் 17-Jun-2016 10:27 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் இன்னொரு ஆல்பம் என்ற ஒற்றை விஷயமே போதும்.... ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பதற்கு. காரணம், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஏற்கெனவே, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆல்பத்திலிருந்து சிங்கிள் டிராக்காக வெளிவந்த இரண்டு பாடல்களுமே சூப்பர்ஹிட் வெற்றிச் சுவைத்திருக்கின்றன. இப்போது மேலும் 3 பாடல்களோடு முழு ஆல்பமும் வெளிவந்திருக்கிறது. மீண்டும் மேஜிக் நிகழ்த்தியிருக்கிறாரா ரஹ்மான்?

ஷோகாலி...
பாடியவர்கள் : ஆதித்யா ராவ், ஆர்யன் தினேஷ் கனகரத்னம், ஸ்ரீ ராஸ்கோல்
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்


அதிரும் பேஸ் இசையுடன் இன்டர்நேஷனல் ஸ்டைலில் ஒலிக்கிறது இந்த ஷோகாலி. ராப், ஹிப் ஹாப் என இளைஞர்களை 100% திருப்திப்படுத்தும் வகையில் இப்பாடலை உருவாக்கியிருக்கிறார் ரஹ்மான். ஹெட்போனை மாட்டி பாடலை உன்னிப்பாகக் கேட்டால், இப்பாடலுக்காக எத்தனை இசை லேயர்களை ரஹ்மான் அடுக்கியிருக்கிறார் என்ற ஆச்சரியம் பிறக்கும். இன்றைய இளைஞர்கள் தங்களின் ‘பைக்’குகளை எந்தளவுக்கு காதலிக்கிறார்கள் என்பதை வரிகளாக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். இரவுநேர பப், பார்டி, நீண்டதூர கார்ப் பயணங்களில் ‘யூத்’களின் ஃபேவரிட்டாக இந்த ‘ஷோகாலி’ இடம் பிடிக்கும்.

இதுநாள் வரையில்...
பாடியவர்கள் : ஆதித்யா ராவ், ஜோனிதா காந்தி
பாடலாசிரியர் : மதன்


எலக்ட்ரிக் கிடாரின் டிரென்டி இசையுடன் துவங்கும் இந்த ‘இதுநாள் வரையில்...’ பாடல் காதலியின் அழகை காதலன் வியந்து பாடுவதுபோல் உருவாக்கியிருக்கிறார்கள். ‘இதுநாள் வரையில்... உலகில் எதுவும் அழகில்லை என்றேனே... எனை ஓங்கி அறைந்தாலே... காற்றிலே தூய்மை இல்லை என்றேனே... இசையில் சுகம் இல்லை என்றேனே... அனைத்தையும் பொய்யாக்கினால்’ என மதன் எழுதியிருக்கும் அழகான கவிதையை அற்புதமான பாடலாக்கியிருக்கிறார் ரஹ்மான். இப்பாடலின் இன்னொரு பலம் ஆதித்யா ராவின் மயக்கும் குரலும், ஜோனிதா காந்தின் சின்னச் சின்ன ஹம்மிங்கும். ரிப்பீட் மோட்!


ராசாளி...
பாடியவர்கள் : சத்ய பிரகாஷ், ஷாஷா திருப்பதி
பாடலாசிரியர் : தாமரைஇரண்டாவது சிங்கிள் டிராக்காக வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பாடல். புதுமை இசையின் உற்சாகத்தையும், பழமை மெட்டின் அழகியலையும் ஒன்றோடொன்று இணையவிட்டு ரஹ்மான் செய்திருக்கும் முயற்சியை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். அருணகிரிநாதரின் முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம், பட்டணம் சுப்பிரமணியரின் வளச்சி வாச்சி ஆகிய இசைப் படிவங்களை இப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் ரஹ்மான். ‘முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை, முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை’ என்ற வரிகளில் ஆயிரம் அர்த்தங்கள்! சத்ய பிரகாஷும், ஷாஷா திருப்தியும் அற்புதமாகப் பாடி, ரஹ்மானின் புதிய முயற்சிக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

அவளும் நானும்...
பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ்
பாடலாசிரியர் : பாவேந்தர் பாரதிதாசன்


‘அன்பே சுகமா....’, ‘என்மேல் விழுந்த பனித்துளியே....’ ஸ்டைலின் மனதை வருடும் ஒரு மெலடிப் பாடல். பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு, ரஹ்மான் இசை தர, குரல் தந்து வருடியிருக்கிறார் விஜய் யேசுதாஸ். பின்னணியில் சின்னச் சின்ன டெக்னோ பீட்களுக்கு மத்தியில் மெல்லிய புல்லாங்குழல் இசையைப் படரவிட்டு பாடலின் வரிகள் தெளிவாகக் கேட்பதற்கு வழிவிட்டு அசத்தியிருக்கிறார் ரஹ்மான். இரவு நேர விருப்பப்பாடலாக இடம்பிடிக்கும்.

தள்ளிப்போகாதே...
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், அபர்ணா நாராயணன்
பாடலாசிரியர் : தாமரை


இப்பாடலைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு ஏதும் இல்லை. ஏற்கெனவே சிங்கிள் டிராக்காக வெளியிடப்பட்டு, இதுவரை 1 கோடியே 50 லட்சம் முறை இப்பாடல் கேட்பட்டிருப்பதிலேயே தெரிந்துவிடும், இப்பாடலை ரசிகர்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு. சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் தன்னுடைய ரிங்டோனாக ‘தள்ளிப்போகாதே...’வை வைத்திருந்தார். திரையில் ரிங் டோன் ஒலிக்கும் ஒவ்வொரும் முறையும் தியேட்டர் அதிர்ந்தது. அதுதான் ரஹ்மான்!

இதற்குத்தானே ஆசைப்பட்டார்கள் ரஹ்மான் ரசிகர்கள்... ‘இந்த கூட்டணி நிச்சயம் ஏமாற்றாது’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள் கௌதம் மேனனனும், ரஹ்மானும். ஆல்பத்தின் அத்தனை பாடல்களுமே இன்றைய யுவன் - யுவதிகளுக்கு பிடித்தமான பாடல்களாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மொத்தத்தில்... ரஹ்மானின் ஆல் டைம் ஃபேவரிட் ரகம் இந்த ‘அச்சம் என்பது மடமையடா’ ஆல்பம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;