கபாலி - இசை விமர்சனம்

மீண்டும் ‘மகிழ்ச்சி!’

இசை விமர்சனம் 13-Jun-2016 10:36 AM IST Chandru கருத்துக்கள்

இதற்காகத்தானே காத்துக் கொண்டிருந்தார்கள் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். இதற்கு முன்பு ரஜினியின் எத்தனையோ பாடல்கள் வெளிவந்திருந்தாலும், ‘கபாலி’க்கான எதிர்பார்ப்பு என்பது வேறு. காரணம், தனது வழக்கமான இசைக்கூட்டணியிலிருந்து வெளியே வந்து முதல்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை தன்னோடு இணைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. எப்போதும் ரஜினிக்கு ஓபனிங் பாடல் பாடும் எஸ்.பி.பி.யும் ‘கபாலி’ ஆல்பத்தில் இல்லை. ‘கபாலி’யின் இசை தரிசனம் ரசிகர்களுக்கு எப்படிப்பட்டதாய் அமைந்திருக்கிறது?

உலகம் ஒருவனுக்கா....
பாடியவர்கள் : அனந்து, சந்தோஷ் நாராயணன், ‘கானா’ பாலா, ரோஷன் ஜாம்ராக்
வரிகள் : கபிலன், விவேக்


4 பேர் கூட்டணியில் பாடப்பட்டிருக்கிறது தலைவருக்கான அறிமுகப் பாடல். பாடலின் இசையில் எக்கச்சக்க எனர்ஜியை தெரிக்கவிட்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பாடலின் இடையிடையே வரும் ‘ராப்’ வரிகளுக்கு சூப்பர்ஸ்டாரின் நடனம் எப்படியிருக்கும் என இப்போதே மனக்கண்ணில் படம் ஓடவிட்டுக் கொண்டிருப்பார்கள் ரசிகர்கள். ரஜினி பாணி அறிமுகப் பாடலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பரிமாணத்தில் இப்பாடல் ஒலிப்பதால், ரசிகர்கள் நிச்சயம் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். ‘உலகம் ஒருவனுக்கா...’ திரையரங்கங்களை அதிர வைக்கப்போவது உறுதி...!

மாயநதி...
பாடியவர்கள் : அனந்து, பிரதீப்குமார், ஸ்வேதா மோகன்
வரிகள் : உமாதேவி


அதிரடியான ஓபனிங் பாடலுக்குப் பின்பு வரும் ஆல்பத்தின் இரண்டாம் பாடலை சற்று அமைதியாக ஒலிக்கவிட்டிருக்கிறார் சந்தோஷ். எண்பதுகளில் ராஜாவின் இசையில் ஒலிக்கும் மெலடிப்பாடலை கேட்பதுபோன்ற சுகத்தைத் தருகிறது இந்த மாயநதி. நிச்சயம் ரஜினி படத்தில் இதுபோன்றதொரு பாடலை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த மெலடி டூயட்டிற்கேற்ற அற்புதமான அர்த்தமுள்ள வரிகளைத் தந்திருக்கிறார் உமாதேவி.

வீரத் துறந்தரா...
பாடியவர்கள் : கானா பாலா, லாரன்ஸ், பிரதீப் குமார்,
வரிகள் : உமாதேவி


‘வீரத் துறந்தரா’வுக்காக கானா பாலாவை வேறொரு ஸ்டைலில் பாட வைத்து அசத்தியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஆக்ஷன் படங்களுக்கே உரிய வழக்கமான பாணி சந்தோஷ் பாடலாக இது இருந்தாலும், பாடியிருக்கும் விதமும் ‘ஹை டெசிபலி’ல் ஒலிக்கும் இசையும் பாடலுக்கு வேறொரு உணர்வைத் தருகிறது. இப்பாடலிலும் இடையே ‘ராப்’ வெர்ஷனும் வந்துபோகிறது. உமாதேவியின் வரிகள் இசைக்கு இணையான உணர்வைத் தாங்கி நிற்கின்றன. கபாலீஸ்வரனின் ஆக்ஷன் மான்டேஜாக இந்தப் பாடல் திரையில் தோன்றலாம். விஷுவல் விருந்து நிச்சயம்!

வானம் பார்த்தேன்....
பாடியவர்கள் : பிரதீப் குமார்
வரிகள் : கபிலன்


இப்பாடலின் ஆரம்ப ஆர்கெஸ்ட்ரா, ரஜினி - ராஜா காம்பினேஷனில் உருவான ‘தளபதி’ படப்பாடலை நினைவுபடுத்துகிறது. இப்பாடலை நிதானமாக, தெளிவாக, உறுதியாகப் பாடியிருக்கிறார் பிரதீப்குமார். ‘கபாலி’க்கான பிளாஷ்பேக் பாடலாக இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது கபிலனின் வரிகள். படத்தின் முக்கிய தருணமொன்றில் உணர்ச்சிப்பூர்வமாக இப்பாடல் இடம்பெறலாம்.

நெருப்புடா...
பாடியவர்கள் : ரஜினிகாந்த், அருண்ராஜா காமராஜ்
வரிகள் : அருண்ராஜா காமராஜ்


ஆல்பத்தின் கடைசிப்பாடல்... ‘இதான்... இதான் வேணும் எங்களுக்கு...’ என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாடல். ‘கபாலி’ டீஸரில் பலநூறுமுறை கேட்டவிட்ட ‘தீம் மியூசிக்’ என்பதால் கேட்டவுடன் புல்லரிக்கிறது. சந்தோஷின் அதிரடி இசை, அருண்ராஜாவின் வெறித்தனமான வாய்ஸ் என ரசிகர்களின் பல்ஸை எகிற வைக்கும் இப்பாடலின் இடையிடையே ‘பயமா...’, ‘மகிழ்ச்சி...’, ‘நான் வந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேனு... 25 வருஷத்துக்கு முன்னாடி எப்டி போனாரே கபாலி... அப்டியே வந்துட்டாருன்னு சொல்லு’ என தலைவரின் குரலையும் கேட்பது உற்சாகத்தின் உச்சகட்டம். செம விஷுவல்ஸ் காத்திருக்கிறது ரசிகர்களுக்கு!

சந்தோஷ் நாராயணன் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவரின் வழக்கமான ஸ்டைலில் உருவான இன்னொரு ஆல்பமாக ‘கபாலி’ இருந்தாலும், பாடல்கள் ரஜினிக்காக உருவாக்கப்பட்டவை என்ற உணர்வு ஒன்றே போதும் இதை ‘மாஸ்’ ரகம் என உரக்கச் சொல்வதற்கு. மூன்று அதிரடிப் பாடல்கள், மனதை அள்ளும் இரண்டு மெலடிகள் என ‘கபாலி’ ஆல்பம் ரஜினி கேரியரில் புது ரகம்!

மொத்தத்தில் : மீண்டும் ‘மகிழ்ச்சி!’

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சர்வர் சுந்தரம் - டீசர்


;