ஒரு நாள் கூத்து – விமர்சனம்

ஜாலியான கூத்து!

விமர்சனம் 10-Jun-2016 10:40 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Nelson
Production : Kenanya Films
Starring : Dinesh, Mia George, Nivetha Pethuraj
Music : Justin Prabhakaran
Cinematography : Gokul
Editing : V J Sabu Joseph

ஒரே ஒரு குறும்படம் மட்டுமே இயக்கிய அனுபவத்தோடு இப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியிருக்கும் நெல்சன் வெங்கடேசனின் ‘ஒரு நாள் கூத்து’ எப்படி?

கதைக்களம்

மூன்று பெண்களின் திருமணம் பற்றிய கதை தான் இது! அவர்களில் ஒருவர் மியா ஜார்ஜ். ஏராளமான வரன்கள் வந்தும் கண்டிப்பு மிக்க தந்தையின் கெடுபிடிகளால் இவரது திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. இன்னொருவர் எஃப்.எம்.ரேடியோவில் ஆர்.ஜே.வாக இருக்கும் ரித்விகா! சதீஷ் என்பவருடன் இவருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் சதீஷின் சந்தேக பார்வையால் நின்று போகிறது! மூன்றாமவர் நிவேதா பெதுராஜ். வசதி படைத்த இவர் வசதி வாய்ப்பு குறைவான ‘அட்டகத்தி’ தினேஷை காதலிக்கிறார். ‘வசதி வாய்ப்பு குறைவு’ என்ற காரணத்தால் தினேஷை தவிர்த்து வேறு ஒருவருக்கு மனைவியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது நிவேதாவுக்கு! இப்படிப்பட்ட மூன்று பேர் வாழ்க்கையில் அவர்கள் விரும்பிய படி திருமணம் நடக்கிறதா? இல்லையா? என்பதே ‘ஒரு நாள் கூத்து’.

படம் பற்றிய அலசல்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ‘திருமணம்’ என்ற சம்பிரதாய சடங்கு வரும்போது அதனால் அவர்களது மனதில் ஏற்படும் குழப்பங்கள், ஏக்கங்கள், சஞ்சலங்கள், பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள், கடைமைகள், பிரயாசங்கள் முதலானவற்றை ரசிக்கும் படியான ஒரு திரைக்கதையாக்கி இப்படத்தை இயக்கியிருக்கிறார் நெல்சன் வெங்கடேசன்! திரைக்கதையில் ஒரு சில குறைகள் இருந்தாலும் முதல் படத்திலேயே பாஸ் மார்க் வாங்கியுள்ளார் நெல்சன்! சுவாரஸ்யமான வசனங்கள், யதார்த்தமான காட்சி அமைப்புகள், எதிர்பாராத திருப்பங்கள் என்று ஜாலியாக செல்லும் திரைக்கதையில் சதீஷிடம் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தும் ரித்விகா சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. அதைப்போல, கிளைமேக்ஸ் காட்சியும் சிலருக்கு கொஞ்சம் ஏமாற்றம் தரலாம்! ஆனால் அதை தவிர்த்து வழக்கமாக படங்களில் வருவது மாதிரியான ஒரு கிளைமேக்ஸை இயக்குனர் அமைத்திருந்தால் இப்படமும் பத்தோடு பதினொன்றாக அமைந்திருக்கும். கதையின் ஜாலியான போக்கிற்கு ஜஸ்டின் பிரபாகரனின் இசை, கோகுல் பினாயின் ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் கை கொடுத்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

அடக்கம், அமைதியான கேரக்டரில் வரும் மியா ஜார்ஜ், சுமாரான அழகுடையவராக வரும் ரித்விகா, ரிச் ஃபேமிலி பெண்ணாக வரும் நிவேதா மூவரும் தங்களது பாத்திரங்களை தங்களது சிறந்த நடிப்பால் நிறைவு செய்திருக்கிறார்கள். அதிலும் நிவேதா பெதுராஜ் ஒரு புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்! இவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு! நிவேதா மீது தீரா காதல் கொண்டவராக இருந்தாலும், தன்மானத்துக்காக காதலியை இழக்கும் அட்டகத்தி’ தினேஷும் மனதில் நிற்கிறார். அடிக்கடி எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளுக்கு ஆளாகும் ரமேஷ் திலக் படம் முழுக்க கலகலக்க வைக்கிறார். பாலசரவணன் வரும்போதெல்லாம் சிரிப்பு தான்! ரித்விகாவின் பொறுப்புள்ள அண்ணனாக வரும் கருணாகரனும் பொறுப்பாக நடித்துள்ளார்.

பலம்

1.ஜாலியான திரைக்கதை அமைப்பு
2.கலைஞர்களின் நேர்த்தியான பங்களிப்பு
3. இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

ரித்விகா திருமணம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் தவிர்த்து படத்தில் பெரிதாக எந்த குறையும் இல்லை.

மொத்தத்தில்

குறிப்பாக இளைஞர்கள், இளைஞிகளை டார்கெட் வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் அனைவருக்குமான ஒரு படமாக அமைந்திருப்பதால் தைரியமாக தியேட்டருக்கு விசிட் அடிக்கலாம்!

ஒரு வரி பஞ்ச் : ஜாலியான கூத்து!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;