‘தி கான்ஜுரிங் 2’ - ஹாலிவுட் பட விமர்சனம்

ஹாரர் பட ரசிகர்களுக்கு திகில் விருந்து!

விமர்சனம் 10-Jun-2016 10:06 AM IST Top 10 கருத்துக்கள்

ஜேம்ஸ் வான் இயக்கத்தில் 2013ல் வெளிவந்த ‘தி கான்ஜுரிங்’ ஹாலிவுட் படம், உலகளவில் ஹாரர் ஜேனருக்கு புத்துணர்வூட்டியது. இந்தியாவில், குறிப்பாக தமிழ்சினிமாவில் அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும்கூட தொடர்ந்து கொண்டிருக்கிறது. சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘தி கான்ஜுரிங்’ படத்தின் 2ஆம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. முதல் பாகம் தந்த திகிலையும், மரண பீதியையும் இந்த இரண்டாம் பாகமும் தந்திருக்கிறதா?

அமானுஷ்ய சக்திகளால் பாதிப்புக்குள்ளாகும் தம்பதிகளின் வீட்டில் தங்கி, அங்கே இருக்கும் தீய ஆவிகளை விரட்டியடிப்பதுதான் வாரென் தம்பதியினரின் வேலை. எட் வாரென், லோரைன் வாரென் இருவருக்கும் ஆவிகள் இருப்பதை உணரக்கூடிய சக்தி இருப்பதால் சர்ச் நிர்வாகம் அவர்களை இதுபோன்ற வழக்குகளை கையாளச் சொல்லி பணிக்கிறது. அப்படி அவர்கள் இதுவரை 80க்கும் மேற்பட்ட வழக்குகளைச் சந்தித்துள்ளனர். அவர்கள் சந்தித்த ஒரு பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உண்மை கதையைத்தான் ‘தி கான்ஜுரிங்’ முதல் பாகமாக எடுத்திருந்தார் ஜேம்ஸ்வான். அந்தவகையில், இந்த இரண்டாம் பாகமும் வாரென் தம்பதியினர் லண்டனிலுள்ள ஒரு குடும்பம் சந்தித்த அமானுஷ்ய பாதிப்புகளைப் பற்றியே பேசுகிறது.

கணவரைப் பிரிந்து வாழும் பெக்கி ஹாட்ஸன் தனது 4 குழந்தைகளுடன் வடக்கு லண்டனில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அதில், ஜேனட் ஹாட்ஸன் ஒரு நாள் இரவில் தன் அக்காவுடன் சேர்ந்து ஆவிகளுடன் பேசுவதற்கு விளையாட்டாக முயற்சி செய்கிறார். அந்த இரவுக்குப் பிறகு, ஜேனட்டிற்கு உண்மையிலேயே வயதான ஆவி ஒருவரின் குரல் கேட்கத் தொடங்குகிறது. அதன் பிறகு அந்த வீட்டில் பல அமானுஷ்ய சப்தங்களும் கேட்கத் தொடங்குகின்றன. வீட்டிலுள்ள பொருட்களையும் அந்த ஆவி சேதமாக்குகிறது. போலீஸ் வந்து விசாரிக்கும் சமயத்திலும் அமானுஷ்ய சம்பவம் நிகழ, அந்த வழக்கு சர்ச் நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறார்கள். இதனால், அந்த வீட்டில் உண்மையிலேயே ஆவிகளின் நடமாட்டம் இருக்கிறதா? இல்லை அந்த குடும்பம் பொய் சொல்கிறதா? என்பதை அறிய வாரென் தம்பதியை அனுப்புகிறது சர்ச் நிர்வாகம். இதன்பிறகு நடக்கும் பரபரப்பான புலனாய்வும், அதையொட்டி நடக்கும் திகில் சம்பவங்களுமே இந்த ‘தி கான்ஜுரிங் 2’.

வழக்கமான ஹாரர் படங்களிலிருந்து ‘தி கான்ஜுரிங்’ தனித்து நிற்பதற்குக் காரணமே உண்மைச் சம்பவங்களை பின்னணியாக வைத்து, அதனை ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான படமாக கொடுப்பதுதான். அந்த வித்தையில் தான் ஒரு வல்லுனர் என்பதை இந்த 2ஆம் பாகத்திலும் நிரூபித்திருக்கிறார் ஜேம்ஸ் வான். ஒரே ஒரு வீடு, அதில் ஏழெட்டு மனிதர்களையும், சிற்சில திகிலூட்டும் காட்சிகளையும் வைத்துக் கொண்டு 2 மணி 13 நிமிடங்கள் படத்தை நகர்த்துவது எத்தனை சவாலான காரியம்? ஆனால், அதனை அசால்ட்டாக செய்து முடித்திருக்கிறது ‘தி கான்ஜுரிங்’ டீம்.

முதல் பாகத்தில் ‘ஹைட் அன்ட் சீக்’ விளையாட்டு ரசிகர்களுக்கு பெரிய சுவாரஸ்யத்தைத் தந்ததுபோல, இந்த 2ஆம் பாகத்தில் ‘பில் வில்கின்ஸ்’ என்ற தாதா ஆவி ஒன்று ரசிகர்களுக்கு ஆட்டம் காட்டுகிறது. வெறும் பயமுறுத்தலோடு நின்றுவிடாமல், வாரென் தம்பதிக்கிடையே இருக்கும் அருமையான காதல், ஹாட்ஸன் குடும்பத்தினரின் பாசம் என குடும்ப ரசிகர்களைக் கவரும் விதத்திலும் படமாக்கப்பட்டிருப்பதால் இந்த பாகமும் அனைத்துத்தரப்பு ரசிகர்களையும் சென்றடையும்.

படத்தில் குறிப்பிடப்படவேண்டிய காட்சி ஒன்று இருக்கிறது... எட் வாரென் தான் கனவில் பார்த்த ஆவி ஒன்றை பெயின்டிங்காக வரைந்து தன் வீட்டில் வைத்திருக்க, ஒரு நாள் அதே ஆவி நேரில் வந்து பயமுறுத்தும். அந்தக் காட்சி ரசிகர்களை சில்லிட வைக்கும். ஆங்காங்கே இதுபோன்று தூக்கிவாரிப்போடும் காட்சிகளை படம் நெடுக வைத்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸையும் பாசிட்டிவாக வைத்திருப்பது பெரிய ஆறுதல். எந்த கொடூர மரணங்களும் நிகழாமல், ஒரு பேய்ப்படத்தால் ரசிகர்களை திகிலடையச் செய்யமுடியும் என்பதற்கு இப்படமே ஒரு சான்று. படத்தின் இறுதியில் உண்மைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் வீடு ஆகியவற்றை புகைப்படங்களாக திரையில் காட்டுகிறார்கள். அந்தந்த மனிதர்களுக்குத் தகுந்ததுபோல எப்படி இத்தனை கச்சிதமாக ஆட்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள் என்ற ஆச்சரியம் நிச்சயம் ரசிகர்களுக்குத் தோன்றும்.

ஜேம்ஸ் வானின் காட்சிப்படுத்தலுக்கு பக்கபலமாய் அமைந்திருப்பவர்கள் இரண்டு பேர். ஒருவர் ஒளிப்பதிவாளர் டான் பர்கெஸ், மற்றொருவர் இசையமைப்பாளர் ஜோசப் பிஷாரா. இசையும், ஒளிப்பதிவும் இப்படத்தின் இரண்டு தூண்கள் என்று நிச்சயமாகக் கூறலாம். அதோடு படத்தில் நடித்திருப்பவர்களும் அற்புதமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். முதல் பாகத்தைப் போலவே, இந்த பாகத்திலும் வாரென் தம்பதியாக வரும் பாட்ரிக் வில்சனும், வேரா ஃபர்மிகாவும் அசத்தியிருக்கிறார்கள். அதேபோல் குழந்தை நட்சத்திரம் ஜேனட் ஹாட்ஸனாக நடித்திருக்கும் மெடிஸன் வுல்பும் யதார்த்தமாக நடித்துள்ளார்.

மொத்தத்தில்... இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களை பயமுறுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பேய்ப்பட விரும்பிகளுக்கு நிச்சயம் சிறப்பு விருந்து காத்திருக்கிறது ‘தி கான்ஜுரிங் 2’வில்.

ஒரு வரி பஞ்ச்: ஹாரர் பட ரசிகர்களுக்கு திகில் விருந்து!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

;