அமலா பாலை அதிர்ச்சியடைய வைத்த தனுஷ்!

அமலா பாலை அதிர்ச்சியடைய வைத்த தனுஷ்!

செய்திகள் 8-Jun-2016 3:02 PM IST VRC கருத்துக்கள்

‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ பட வரிசையில் தனுஷ் தயாரித்துள்ள படம் ‘அம்மா கணக்கு’
‘காக்கா முட்டை’ ‘விசாரணை’ என விருதுகள் அள்ளிய படங்களை தயாரித்த தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரித்திருக்கும் படம் ‘அம்மா கணக்கு’. தனுஷ் நடித்த ஹிந்தி படமான ‘ராஞ்சனா’ படத்தை இயக்கி, தயாரித்த ஆனந்த் எல்.ராய் தயாரிப்பில், அஸ்வினி ஐயர் இயக்கத்தில் வெளியாகி, ஒரு சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களும் பெற்ற படம் ‘நில் பேட்டே சனாடா’. இப்படத்தின் ரீ-மேக் தான் ‘அம்மா கணக்கு’. தனுஷும், ஆனந்த் எல்.ராயும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ரேவதி, அமலாபால், சமுத்திரக்கனி, குமாரி யுவா முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் இப்படத்தில் அமலா பால் பத்து வயது பெண்ணுக்கு தாயாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது அமலா பால் பேசும்போது,

‘‘திடீரென்று ஒரு நாள் தனுஷ் சார் ஃபோன் செய்து ‘எங்கள் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் ஒரு படம் தயாரிக்கிறது. அதில் நீங்கள் வேலைக்காரி வேடத்தில் நடிக்கணும். அதுவும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கணும்’ என்றார்! இதை கேட்டதும் நான் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன்! அதற்கப்புறம் அவரிடம் ‘எத்தனை வயது குழந்தைக்கு தாயாக?’ என்று கேட்டேன். அப்போது அவர் பத்து வயது குழந்தைக்கு தாயாக என்றார். அவரிடம், ‘என்னை பார்த்தா உங்களுக்கு அப்படியா தோன்றுகிறது?’ என்று கேட்டேன்! திருமணமான நடிகைகளுக்கு இப்படி தான் அமையும் என்று மனதை தேற்றிக்கொண்டு என்ன கதை, யார் ஹீரோ என்று கேட்டேன்! அப்போது தான் இப்படம் ‘நில் பேட்டே சானடா’ படத்தின் ரீ-மேக் என்பதும், அதில் என் கேரக்டர் ரொம்பவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் தெரிய வந்தது. அதன் பிறகு உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் உண்மையிலேயே இப்படத்தில் நடித்ததில் பெருமைப்படுகிறேன்’’ என்றார் அமலா பால்!

தொடர்ந்து தனுஷ் பேசும்போது, ‘‘ நாங்கள் தயாரித்த 'காக்கா முட்டை,' ,'விசாரணை' போன்ற படங்களுக்கெல்லாம் விருதுகள் கிடைத்து பாராட்டப்படுவது கடவுள் அருளால் தான்! நாங்கள் திட்டமிட்டு விருதுகளுக்காகப் படமெடுப்பதில்லை. இந்த 'அம்மா கணக்கு' படத்தை தயாரித்ததில் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ பெருமைப்படுகிறது. ஏனென்றால் இது சமுதாயத்துக்குத் தேவையான கருத்தைச் சொல்லும் படம். பலருக்கும் படிக்கும்போது கணக்குப் பாடம் கடினமாக தெரியும். இது ஏன்? நான் கூட ப்ளஸ்டூவில் கணக்கில் ஃபெயிலானவன்தான். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அவர்கள் படிப்பின் மீது ஒரு கனவுடன் கவலையுடன் இருக்கிறார்கள். ஆனால் பிள்ளைகளுக்கோ படி படி என்றால் பிடிப்பதில்லை. ஏன் பெற்றோர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்று பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை.இந்தப் படம் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி இருக்கும்’’ என்றார்.

இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். ‘ஜிகர்தண்டா’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹிந்தி ‘நில் பேட்டே சனடா’ படத்தை இயக்கிய அஸ்வினி ஐயரே இயக்கியுள்ளார். விரைவில் ரிலீசாகவிருக்கிறது ‘அம்மா கணக்கு’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதோ அந்த பறவை போல டீஸர்


;