தொடரி - இசை விமர்சனம்

மைனா, கும்கி, கயல் ஆகிய படங்களின் மூலம் ஹாட்ரிக் ஹிட் கூட்டணி அமைத்த இயக்குனர் பிரபுசாலமனும், இசையமைப்பாளர் டி.இமானும் இணைந்து இப்போது ‘தொடரி’யோடு வந்திருக்கிறார்கள்.

இசை விமர்சனம் 8-Jun-2016 1:55 PM IST Chandru கருத்துக்கள்

மைனா, கும்கி, கயல் ஆகிய படங்களின் மூலம் ஹாட்ரிக் ஹிட் கூட்டணி அமைத்த இயக்குனர் பிரபுசாலமனும், இசையமைப்பாளர் டி.இமானும் இணைந்து இப்போது ‘தொடரி’யோடு வந்திருக்கிறார்கள். பாடல்களுக்கு வரிகள் தந்துள்ளார் யுகபாரதி. இந்த ரயிலின் இசைப்பயணம் எப்படி?

போன உசிரு வந்திருச்சு...
பாடியவர்கள் : ஹரிச்சரண், ஷ்ரேயா கோஷல்

‘இது டி.இமான் இசை’ என்ற கேட்டவுடன் சொல்லிவிடலாம் ரகப் பாடல் இந்த ‘போன உசிரு வந்திருச்சு..’. ஆனாலும், ஷ்ரேயா கோஷல், ஹரிச்சரணின் அற்புதமான குரல்களுக்காகவே இந்த மெலடியை மீண்டும் மீண்டும் கேட்கலாம். ஆரம்பத்தில் புல்லாங்குழலின் ஓசை, இடையிடையே மனதை வரும் வயலின் என பாடல் முழுவதும் இசை மூலம் மனசுக்குள் மணியடிக்கிறார் டி.இமான்.

ஊரெல்லாம் கேட்குதே...
பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல், மரியா ராய்

நாயகியின் அறிமுகப் பாடலாக ‘தொடரி’யில் இடம் பிடித்திருக்க வாய்ப்புள்ள இந்த பாடலும் ஷ்ரேயா கோஷலின் அற்புதமான குரலிலேயே ஒலிக்கிறது. வெஸ்டர்ன் கிடார் இசையுடன் கொஞ்சம் வித்தியாசமாகத் துவங்கும் இப்பாடல், போகப்போக கொஞ்சம் குத்து ஸ்டைலில் ஒலிக்கிறது. பாடலின் இரண்டாவது பகுதியில் சென்ட மேளம், பறை என அதிரடியாக ஒலிக்கிறது இமானின் இசை. மரியாவின் ஆங்கில குரலோடு முடிகிறது பாடல். யுகபாரதியின் வரிகளில் குமரிப் பெண்ணின் துள்ளல் இளமை! ஜாலி ரகம்.... எனவே, காட்சிகளோடு பார்க்கும்போது கூடுதல் உற்சாகம் தரலாம்.

மனுசனும் மனுசனும்...
பாடியவர் : கானா பாலா

கொஞ்சம் வித்தியாசமான ஸ்டைலில் கானா பாலா பாடியிருக்கும் இந்த ஜாலிப்பாடல் குத்து ரக ஒலிக்கிறது. வரிகள் ஒலிக்கும்போது, அவை தெளிவாகக் கேட்கும்படியாக இசையின் வீரியத்தை குறைத்து ஒலிக்கவிட்டிருக்கிறார் இமான். ‘மனுசனும் மனுசனம் பேசிய காலம் போயே போச்சு... அவன் முழிச்சதும் முழிக்கிற முகமோ இப்போ செல்போன் ஆச்சு...!’’ என யதார்த்த வரிகள் மூலம் இன்றைய மனித உறவின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார் யுகபாரதி.

அடடா இது என்ன...
பாடியவர்கள் : ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீனிவாசன்

‘தொடரி’ ஆல்பத்தில் மீண்டும் ஒரு அற்புதமான மெலடி டூயட்டை ஒலிக்கவிட்டிருக்கிறார் இமான். இந்த முறை ஹரிச்சரணுடன் கூட்டணியமைத்துப் பாடியிருப்பவர் வந்தனா ஸ்ரீனிவாசன். மனதுக்கு இதமாக ஒலிக்கிறது இருவரின் குரல்களும். இளையராஜாவின் பழைய பாடல்களை கேட்பதுபோன்ற அற்புதமான உணர்வைத் தந்திருக்கிறது இமானின் இசை.

லவ் இன் வீல்ஸ்...
பாடியவர்கள் : சின்ன பொண்ணு, நாதன்

ஆல்பத்தின் கடைசிப் பாடலாக ஒலிக்கிறது இந்த ‘லவ் இன் வீல்ஸ்...’ தீம் இசை. பாடலின் ஆரம்பத்தில் வரும் குழந்தையின் அழுகையும், அதனைத் தொடர்ந்து வரும் சின்னப்பொண்ணுவின் ‘ஆராரோ ஆராரிரரோ’வும் கேட்பவர்களை புல்லரிக்க வைக்கிறது. தடதடக்கும் இசைக்கு நடுவே வரும் புல்லாங்குழலின் ‘ஃபீல்குட்’ இசை உயிரை உறிஞ்சுகிறது. ‘மொத்த கதையையும் இந்த ஒத்த பாடலின் இசையே’ சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறது. படத்தின் முக்கிய தருணமொன்றில் ஒலிப்பதற்காக இதனை பிரபுசாலமன் இமானிடமிருந்து கேட்டு வாங்கியிருக்கலாம்.

மொத்தத்தில்... இந்த கூட்டணியின் பாடல்கள் இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்தை ‘தொடரி’யும் பறைசாற்றியுள்ளது. ஆனாலும், ஒவ்வொரு முறையும் கேட்பதற்கு சலிப்பதே இல்லை. அதுவே இவர்களின் வெற்றி ரகசியம். இமானின் இசை பிரபுசாலமானின் காட்சிகளோடு பார்க்கும்போது நிச்சயம் வேறொரு புதிய அனுபவத்தைத் தரும் என நம்புவோம்.

‘தொடரி’ ரயிலின் ஓசையல்ல... அது காதலின் இசை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;