கூத்து கலைஞர்கள் பற்றிய காமெடி படம் ‘சும்மாவே ஆடுவோம்’

‘திருட்டு விசிடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ‘காதல்’ சுகுமாரின்  இரண்டாவது படம் ‘சும்மாவே ஆடுவோம்’

செய்திகள் 7-Jun-2016 1:17 PM IST VRC கருத்துக்கள்

‘திருட்டு விசிடி’ படத்தை தொடர்ந்து ‘காதல்’ சுகுமார் இயக்கும் படம் ‘சும்மாவே ஆடுவோம்’. ‘ஸ்ரீரங்கா புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் டி.என்.ஏ.ஆனந்தன் தயாரிக்கும் இப்படத்தில் அருண் பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார். சர்வதேச அளவில் புகழ் பெற்ற நீச்சல் வீரரான அருண் பாலாஜி நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் சாதனையை முறியடித்தவர் ஆவார். நாயகியாக ‘மாங்கா’ படப் புகழ் லீமா பாபு நடிக்கிறார். இவர்களுடன் டி.என்.ஏ.ஆனந்தன், அர்ஜுன், பாலா சிங், பாண்டு, ராபர்ட், யுவராணி, கொட்டாச்சி, போண்டா மணி, உதயா, மனோ, ரவி, சுஜித் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘காதல்’ சுகுமார் படம் குறித்து கூறுகையில், ‘‘கூத்து கலை என்பது ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தாலும் தற்போது நலிவடைந்துள்ளது. அந்த கலையை நம்பியிருக்கும் கலைஞர்களின் தற்போதைய நிலையைத்தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். நலிவடைந்த கூத்து கலைஞர்களை பற்றிய கதை என்பதால் இதை ஒரு டாக்குமெண்டரி போல சொல்லாமல் முழுக்க முழுக்க நகைச்சுவையாக் சொல்லியிருக்கிறோம்.

கதைப்படி மதுரையில் உள்ள ஜமீன் ஒருவர் கூத்து கலைஞர்களுக்காக ஒரு கிராமத்தை இலவசமாக கொடுக்கிறார். அதன் படி கூத்து கலைஞர்கள் வாழும் அந்த கிராமத்திற்கு கூத்துப்பேட்டை என்ற பெயர் வருகிறது. கூத்து தொழில் விட்டால் வேறு ஏதும் தெரியாத அந்த மக்கள் நவீன கால வளர்ச்சிக்கு போட்டி போட முடியாமல் தடுமாறும் நேரத்தில், ஜமீன் அவர்களுக்கு இலவசமாக கொடுத்த அந்த கிராமத்திற்கு பெரும் ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை தான் காமெடியாக சொல்லியிருக்கிறோம். மூன்று காலகட்டத்தில் நடப்பது போல இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கோபி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை வில்லியம்ஸ் கவனிக்க, பாடல்களை முருகன் மந்திரம், அஸ்மின் எழுதியுள்ளனர். படக்குழுவினர் இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் திருட்டு VCD ரெய்டு - வீடியோ


;