‘இறைவி’ - விமர்சனம்

எல்லோரையும் கவரவில்லை இந்த ‘இறைவி’

விமர்சனம் 7-Jun-2016 12:49 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Karthik Subbaraj
Production : Thirukumaran Entertainment
Starring : S. J. Surya, Vijay Sethupathi, Bobby Simha, Anjali, Karunakaran
Music : Santhosh Narayanan
Cinematography : Sivakumar Vijayan
Editing : Vivek Harshan

பீட்சா மூலம் அறிமுகமாகி, ‘ஜிகர்தாண்டா’வில் பரவலான வரவேற்பைப் பெற்ற இயக்குனர் கார்திக் சுப்புராஜின் அடுத்த படைப்பு ‘இறைவி’. ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா இந்த ‘இறைவி’?

கதைக்களம்

மூன்று ஆண்களின் நடவடிக்கைகளால் மூன்று பெண்கள் என்னென்ன பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள்... அதன் பிறகு எத்தகைய முடிவுகளை அவர்கள் எடுக்கிறார்கள் என்பதே ‘இறைவி’யின் மையக்கரு.

தன் முதல் படத்தை வெளியிடாமல் சதி செய்யும் தயாரிப்பாளரால் மனம் உடைந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் எஸ்.சூர்யா, கணவனை இழந்த பூஜா தேவரியாவை காதலிக்கும் விஜய்சேதுபதி, சிலை திருட்டின் மூலம் தன் அண்ணன் எஸ்.ஜே.சூர்யாவின் படத்தை வெளியிடத் துடிக்கும் பாபி சிம்ஹா ஆகியோரே அந்த ஆண்கள். கணவன் எஸ்.ஜே.சூர்யாவால் நிம்மதியிழந்து தவிக்கும் கமாலினி முகர்ஜி, வேண்டா வெறுப்பாக தன்னை கல்யாணம் செய்த விஜய்சேதுபதியை நினைத்து வருந்தும் அஞ்சலி, விஜய்சேபதியை காதலித்தாலும் அதை வெளிப்படுத்தாத பூஜா தேவரியா ஆகியோரே அந்த மூன்று பெண்கள். ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு இந்த ஆறு கேரக்டர்களைச் சுற்றி நகர்வதே ‘இறைவி’.

படம் பற்றிய அலசல்

இப்படம் என்ன சொல்ல வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரத்தை கடக்க வேண்டியிருப்பதால், ரசிகர்களின் பொறுமையை சோதித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அவ்வப்போது நம்மை அயர்ச்சியடைச் செய்யும் காட்சிகளையும் படத்தின் உயர்தர டெக்னிக்கல் விஷயங்கள் காப்பாற்றுகிறது. சிக்கலான இந்த திரைக்கதையை நகர்த்துவதில் முழு படத்தையும் தன் தோளில் தாங்கியிருக்கிறார் எடிட்டர் விவேக் ஹர்ஷன். ஒவ்வொரு கேரக்டருக்குமான காட்சிகளை குழப்பமில்லாமல் அருமையாக ‘எடிட்’ செய்து ஒன்று சேர்த்திருக்கிறார் விவேக். எடிட்டிங்கிற்குப் பிறகு படத்தின் ஒளிப்பதிவு இப்படத்தில் பெரும் பங்காற்றியிருக்கிறது. பாடல்களில் பெரிய கவனத்தைப் பெறாவிட்டாலும், பின்னணி இசையில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

இடைவேளையின்போது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பத்தை ‘இறைவி’ கொண்டிருந்தாலும், இரண்டம்பாதியில் அந்த எதிர்பார்ப்பை சரியான விதத்தில் தக்க வைக்கவில்லை. படத்தின் கடைசி 20 நிமிடங்களே மையக்கதையை நோக்கி நகர்கிறது. பெண் கடவுளை குறிக்கும் தலைப்பை படத்திற்கு வைத்திருந்தாலும், முழுக்க முழுக்க ஆண்களின் உலகத்தையே இந்த ‘இறைவி’யில் பிரதிபலித்திருக்கிறார் கார்த்திக். பெண்கள் எடுக்கும் முடிவுகளும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும்படி அமைக்கப்படாதது படத்திற்கு பின்னடைவாக அமைந்துவிட்டது.

நடிகர்களின் பங்களிப்பு

இயக்குனர் கதாபாத்திரத்திற்கு அற்புதமாக பொருந்தியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தன் முந்தைய ‘ஸ்டைலை’ விட்டு முற்றிலுமாக வெளியே வந்து யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா இருவருமே ஏற்கெனவே கார்த்திக் சுப்பராஜால் வார்க்கப்பட்டவர்கள். இதில் தங்களின் நடிப்பை மேலும் பட்டை தீட்டியிருக்கிறார்கள். இப்படி ஒரு ‘போல்டா’ன கேரக்டரில் நடிக்க நிச்சயம் பெரிய ‘தில்’ வேண்டும். வாழ்த்துக்கள் பூஜா தேவரியா! அஞ்சலி, கமாலினி இருவருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். அவர்களின் கேரக்டர்களுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லையென்றாலும், தங்களுக்கான காட்சிகளில் தங்களின் பங்களிப்பை 100% சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள். ராதாரவி, கருணாகரன், சீனு மோகன், வடிவுக்கரசி என ஒவ்வொருவரும் அந்தந்த கேரக்டர்களில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.

பலம்

1. முக்கிய நட்சத்திரங்களின் சிறப்பான நடிப்பு
2. எடிட்டிங்கும் ஒளிப்பதிவும்
3. முக்கிய காட்சிகளுக்கான பின்னணி இசை

பலவீனம்

1. இழுவையான திரைக்கதை அமைப்பு
2. நிறைய இடங்களில் தேவையில்லாத காட்சிகள் வருவது
3. பாடல்கள்

மொத்தத்தில்...

பாலசந்தர், பாலுமகேந்திரா பாணியில் ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியை மோற்கொண்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், அதில் பாதியளவு வெற்றியைத்தான் அவரால் பெற முடிந்திருக்கிறது. திரைக்கதையை சீராக்கி, படத்தை இன்னும் ஷார்ப்பாகவும், தெளிவாகவும் கொடுத்திருந்தால் ரசிகர்கள் ஒரு புதிய அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.

ஒரு வரி பஞ்ச் : எல்லோரையும் கவரவில்லை இந்த ‘இறைவி’

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;