‘இறைவி’யைப் பார்க்கத் தூண்டும் 5 காரணங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி, இந்தவாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘இறைவி’ படம் பற்றிய 5 முக்கிய விஷயங்கள்...

முன்னோட்டம் 1-Jun-2016 4:37 PM IST Chandru கருத்துக்கள்

கார்த்திக் சுப்புராஜின் 3வது படத்திற்கும் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதோடு இப்படம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உருவாகியுள்ளது. முழுப்படத்திற்கும் ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்துவதற்கு நிச்சயமாக அற்புதமான காட்சிகளை கார்த்திக் சுப்புராஜ் வைத்திருப்பார் என்ற நம்பிக்கை ஒன்றே ‘இறைவி’க்குப் போதுமானது. தமிழகத்தில் மட்டும் 250க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘இறைவி’ குறித்த 5 முக்கிய எதிர்பார்ப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்...

1. கார்த்திக் சுப்புராஜின் இயக்கம் : குறும்பட இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கித் தந்ததில் கார்திக் சுப்புராஜிற்கும் முக்கியப் பங்குண்டு. பீட்சா மூலம் அவர் ஏற்படுத்திய தாக்கம் அந்தளவுக்கு முக்கியமானது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜிகர்தண்டா’ படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரும் படம் என்ற காரணமே ‘இறைவி’ பார்க்கத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

2. மல்டி ஸ்டார் கூட்டணி : பீட்சா, ஜிகர்தண்டாவைத் தொடர்ந்து கார்த்திக்கின் 3வது படத்திலும் விஜய்சேதுபதி தொடர்கிறார். அவரோடு ‘ஜிகர்தண்டா’ அசால்ட் சேதுவும் ‘இறைவி’யில் இணைந்துள்ளார். ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக இப்படத்தில் வித்தியாசமான வேடமொன்றில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருக்கிறார். அதோடு கருணாகரனும் கைகோர்த்திருப்பது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

3. பெண்களுக்கு முக்கியத்துவம் : படத்தின் தலைப்பிற்கேற்ப ‘இறைவி’ முழுக்க முழுக்க பெண்களின் பெருமை சொல்லும் படமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதை பறைசாற்றுவதுபோல் உள்ளது இன்று வெளியிடப்பட்டிருக்கும் ‘மனிதி...’ பாடல் வீடியோவும். அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவரியா என மூன்று ஹீரோயின்கள் வேறு இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இதனால் பெண்கள் மத்தியிலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

4. சந்தோஷ் நாராயணனின் இசை : கார்த்திக் சுப்புராஜின் முதல் படமான ‘பீட்சா’விலும், இரண்டாவது படமான ‘ஜிகர்தண்டா’விலும் இசையின் பங்களிப்பு மிகப்பெரியது. சந்தோஷின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களிடம் தனிப்பட்ட வரவேற்பைப் பெற்றது. அதேபோன்றதொரு சூழ்நிலை இப்போது ‘இறைவி’க்கும் எழுந்துள்ளது. பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதோடு, ‘இறைவி’யின் பின்னணி இசைக்காகவும் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

5. விளம்பர யுக்தி: திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை அபி அன்ட் அபி, ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன. தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றுகூடி ‘இறைவி’யை களமிறக்குவதால் உச்சபட்ச விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. பட ரிலீஸுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நாளிதழ், டிவி விளம்பரங்களை பரவலாக செய்யத் தொடங்கிவிட்டனர். அதோடு ‘இறைவி’ டீம் வெளியிட்ட 3 மேக்கிங் வீடியோக்களுக்கும் நல்ல வரவேற்பு. ‘என் இறைவி’ என்ற பெயரில் தற்போது ட்விட்டரிலும் பிரபலங்களின் மனைவி, அம்மாக்களோடு கூடிய புகைப்படங்களை வைத்து ‘இறைவி’ டீம் செய்துவரும் விளம்பரம் ‘டிரென்டிங்’ ஆகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;