உறியடி – விமர்சனம்

அரசியல் அதிரடி!

விமர்சனம் 28-May-2016 4:51 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Vijay Kumar
Production : Souvenir Productions
Starring : Vijay Kumar, Mime Gopi, Jayakanth, Henna Bella
Music : Masala Coffee
Cinematography : Paul Livingstone
Editing : Abhinav Sunder Nayak

‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சி மூலம் பரிசு பெற்ற விஜயகுமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘உறியடி’ எப்படி?

கதைக்களம்

திருச்சிக்கு அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்கள் விஜயகுமாரும் அவரது மூன்று நண்பர்களும்! கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இவர்கள் கல்லூரி அருகே அமைந்துள்ள தாபாவுக்கு சென்று அடிக்கடி மது அருந்துவதும், சிகரெட் பிடிப்பதும் வழக்கம்! இந்நிலையில் அதே தாபாவுக்கு வந்து மது அருந்தும் உள்ளூர் பெரும்புள்ளியின் மகனுக்கும் இவர்களுக்கும் இடையில் மோதல் உருவாகிறது. ஜாதி கட்சி துவங்கி எம்.எல்.ஏ.வாக துடிக்கும் தாபா உரிமையாளர் ‘மைம்’ கோபி, பெரும் புள்ளியின் மகனுக்கு பக்க பலமாக இருந்து, அந்த மாணவர்களுக்கும் ஆதரவாக இருப்பதை போல் நடித்து அவர்களுக்குள் ஜாதி சண்டை மூட்டி விடுகிறார். இந்த சண்டையில் ஒரு மாணவனின் உயிர் போகும் நிலை உருவாக, மீதி மாணவர்கள் மேற்கொள்ளும் அதிரடி ஆட்டம் தான் ‘உறியடி’.

படம் பற்றிய அலசல்

உள்ளூரில் ஜாதி அரசியலை வளர்ப்பது, அதற்கு மாணவர்களை பகடைக் காயாக பயன்படுத்தி சூழ்ச்சி செய்வது, மதுவாலும் மாதுவாலும் இளம் சமுதாயம் கெடுவது என்று நம் சமூகத்தில் நடைபெறுகிற நிஜ சம்பவங்களை அப்படியே திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய குமார். காதல், டூயட், குத்தாட்டம், டபுள் மீனிங் காமெடி போன்ற கமர்ஷியல் விஷயங்களை நம்பாமல், நிஜத்தில் நடப்பது மாதிரியான காட்சிகளை அமைத்து இப்படத்தை இயக்கியிருக்கும் விஜய குமாரின் துணிச்சலை பாராட்டலாம். இவரே தான் படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளரும் கூட! கல்லூரி நேரம் போக சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது என்று மட்டுமே பயணிக்கும் படத்தின் முதல் பாதி கொஞ்சம் போரடிக்க வைக்கிறது என்றாலும், இடைவேளைக்கு பிறகு அடி தடி, வெட்டு, குத்து, கொலை என்று பரபரப்பாகிறது திரைக்கதை! இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகளில் வன்முறை அதிகம் என்பதாலேயே படத்திற்கு ‘ஏ’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள் போலும்! படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு போன்ற விஷயங்களில் பெரிதாக குறை சொல்ல முடியாது. படத்தின் முதல் பாதி கொஞ்சம் போரடிக்க வைத்தாலும் ‘உறியடி’ விறுவிறுப்பான ஒரு படமாக அமைந்துள்ளது.

நடிகர்ளின் பங்களிப்பு

ஜாதி அரசியலை வைத்து பெரிய இடத்துக்கு வர துடிப்பவராக நடித்திருக்கும் ‘மைம்’ கோபி தவிர படத்தில் நடித்திருக்கும் விஜய்குமார், சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள், ஹென்னா பெல்லா என பெரும்பாலானோரும் புதுமுகங்களே! ஆனால் எல்லோரும் தாங்கள் புதுமுகங்கள் என்பதை தாண்டி நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்!

பலம்

1. படத்தின் கதைக்களமும், காட்சி அமைப்புகளும்!
2. நடிகர்களின் யதார்த்தம் மீறாத நடிப்பு!
3. ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. பொழுது போக்கு அம்சங்கள் இல்லாதது
2. அதிகபடியான வன்முறை காட்சிகள்
3. கொஞ்சம் போரடிக்க வைக்கும் முதல் பாதி

மொத்தத்தில்…

பொழுது போக்கு அம்சங்களை எதிர்பார்த்து போகிற ரசிகரக்ளுக்கு இப்படம் ஏமாற்றம் தர வாய்ப்பிருக்கிறது. அதே நேரம், யதார்த்த பட விரும்பிகளுக்கு இப்படம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : அரசியல் அதிரடி!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி 2 - டீஸர்


;