தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி - ஹாலிவுட் பட விமர்சனம்

தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி

விமர்சனம் 28-May-2016 1:13 PM IST Top 10 கருத்துக்கள்

மொபைல் போன் விளையாட்டுக்களில் இன்றளவும் சுட்டிகளின் ஆதர்ச விளையாட்டாக இருப்பது ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’ கேம்தான். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களாலும் அதிகம் விளையாடப்படுவது இந்த கேமின் இன்னொரு சிறப்பம்சம். அந்த விளையாட்டில் இடம்பெற்றிருக்கும் உருவங்களையே ஒரு படத்தின் கதாபாத்திரங்களாக மாற்றி, அதை வெண்திரையில் ரசிகர்களுக்கு போட்டுக்காட்ட வந்திருக்கிறது ‘தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி’. தொடுதிரையில் ஏற்படுத்திய சுவாரஸ்யத்தை வெள்ளித்திரையிலும் தந்திருக்கின்றனவா இந்த சினம் கொண்ட பறவைகள்?

பறவை இனத்தில் பறக்க முடியாத ஒரே பறவை பென்குவின் மட்டுமே. ஆனால், இந்த ஆங்க்ரி பேர்ட்ஸைப் பொறுத்தவரை ஈகிள் பறவைத் தவிர்த்து, வேறெந்த பறவைகளுக்கும் பறக்கும் சக்தியே கிடையாது. அப்படிப்பட்ட பறவைகள் ஒன்றுகூடி ஒரு தனித்தீவில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றன. குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வரும் இந்த பறவைகளுக்கு மத்தியில் ‘ரெட்’ என்றொரு பறவை மட்டும் தனித்து தன்னந்தனியாக வாழ்கிறது. காரணம், எதற்கெடுத்தாலும் கோபப்படும் அதன் குணம். அதனாலேயே மற்ற பறவைகளால் தனித்து விடப்படுகிறது ரெட். தன் தனிமையை போக்கிக் கொள்வதற்காக சிறப்பு வகுப்பு ஒன்றிற்குச் செல்கிறது ரெட். அங்கே... சக், பாம்ப், டெர்ரென்ஸ், மெடில்டா ஆகியோரைச் சந்திக்கிறது. ஆனால் அங்கேயும் ‘ரெட்’டால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அந்தத் தீவிற்கு திடீரென பெரிய கப்பல் ஒன்று வருகிறது. அதிலிருந்து பன்றிகள் சில பறவைகள் தீவிற்குள் நுழைகிறது. பறவைகளை சந்தோஷப்படுத்துவதற்காகவே தாங்கள் வந்திருப்பதாகக்கூறும் அந்த பன்றிகள், பறவைகளுக்கு ஆடல், பாடல், மேஜிக் என பல விஷயங்களைச் செய்து சந்தோஷப்படுத்தத் துவங்குகிறது. ஆனால், பன்றிகள் மேல் சந்தேகம் கொள்ளும் ரெட் அவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால், ரெட் கூறுவதை எந்தப் பறவைகளும் கண்டுகொள்ளவே இல்லை. தன் லேட்டஸ்ட் நண்பர்களான பாம்ப், சக் ஆகியோருடன் சேர்ந்து பன்றிகள் வந்த கப்பலை நோட்டமிடுகிறது ரெட். அங்கே அடித்தளத்தில் ஏராளமான பன்றிகள் ஒழிந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைகிறது. அதிலிருந்து வெளியேறும் அந்த பன்றிகள், பறவைகளின் இருப்பிடங்களிலிருக்கும் முட்டைகள் அனைத்தையும் திருடி கப்பலுக்குள் பதுக்குகின்றன. இது எதுவுமே தெரியாமல் பறவைகள் அனைத்தும் ஓரிடத்தில் ஒன்றுகூட பன்றிகளின் ஆட்டம், பாட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கின்றன. திட்டமிட்டபடி அனைத்து முட்டைகளையும் அபகரித்துவிட்டு, அந்த தீவையும் நாசம் செய்துவிட்டு தங்கள் இடத்திற்கு கப்பலில் தப்பிச் செல்கின்றன பன்றிகள்.

ரெட் பேச்சைக் கேட்காததது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை பறவைகள் உணருகின்றன. அதன்பிறகு ‘ரெட்’ தலைமையில் இணைந்து தங்களின் முட்டைகளை மீட்டெக்க கோபத்துடன் புறப்படுகின்றன அனைத்துப் பறவைகளும். பன்றிகள் கூட்டத்திடமிருந்து எந்த வியூகத்தைப் பயன்படுத்தி முட்டைகளை மீட்கின்றன என்பதே இந்த ‘ஆங்க்ரி பேட்ஸ்’.

பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒவ்வொரு பறவைகள் குடும்பத்திற்கும் ஒவ்வொருவிதமான கலர்களையும், உருவத்தில் சின்னச் சின்ன மாறுதல்களையும் தந்து ரசிகர்களுக்கு எந்த குழப்பமுமில்லாமல் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் கிளே கய்டிஸ், பெர்கல் ரெய்லி. படத்தின் நாயகன் ரெட். அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஜெட் வேக ‘சக்’கும், வெடி போட்டு பீதியைக் கிளப்பும் ‘பாம்ப்’பும். அதோடு சிறப்புத்தோற்றமென்றில் தலைகாட்டி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது ஈகிள். க்ளைமேக்ஸில் ஆபத்பாந்தவனாக வந்து கைதட்டல்களையும் அள்ளிச் செல்கிறது இந்த பிரம்மாண்ட ஈகிள்.

படத்தின் முதல்பாதியில் சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருப்பவர்கள், படத்தின் கடைசி 30 நிமிடங்களில் ‘ஆங்க்ரி பேட்ஸ்’ விளையாட்டை பெரிய திரையில் விளையாடவிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பறவையும் பறந்து சென்று பன்றிகளின் கோட்டையை எப்படி தகர்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு அத்தனை சுவாரஸ்யமாய் இருக்கின்றது. ‘கேம்’களில் உள்ள கேரக்டர்களுக்கு உயிர்கொடுத்திருப்பதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது சிஜி. அதோடு ஒவ்வொரு பறவைக்கும் பின்னணி குரல் கொடுத்திருப்பவர்களும் பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

3டி உருவாக்கம், பின்னணி இசை ஆகியவை குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் வண்ணம் உருவாக்கியிருக்கிறார்கள். காமெடி வசனங்கள் படம் நெடுக ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

‘அநியாயத்தைக் கண்டு வெகுண்டெழு’ என்பதே இந்த ‘ஆங்க்ரி பேட்ஸ்’ நமக்குச் சொல்லவரும் செய்தி! ‘டச்’ ஸ்கிரீனை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு பிரம்மாண்ட ஸ்கிரீனில் ‘ஆங்க்ரி பேட்ஸ்’ பார்க்க உங்கள் குழந்தைகளுடன் உடனடியாக கிளம்புங்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;