இது நம்ம ஆளு - விமர்சனம்

டயலாக் டிராமா!

விமர்சனம் 27-May-2016 2:20 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Pandiraj
Production : Chimbu Cine Arts
Starring : Silambarasan, Nayanthara, Andrea Jeremiah, Soori
Music : Kuralarasan
Cinematography : Balasubramaniam
Editing : Praveen K. L

ரியல் லைஃப்பில் ‘பிரேக்அப்’ ஆன காதலர்களை, ரீல் லைஃப்பிலும் காதலர்களாக்கி ‘இது நம்ம ஆளு’ படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். வெள்ளித்திரையில் சிம்பு, நயன் கெமிஸ்ட்ரி எப்படி?

கதைக்களம்

ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் நாயகன் சிம்புவின் வாழ்க்கையில் இரண்டு முறை காதல் கைகூடி சில பல காரணங்களால் ‘பிரேக் அப்’ ஆகிறது. மூன்றாவது, நயன்தாராவை பெண் பார்க்க கிளம்புகிறார் சிம்பு. பார்த்தவுடன் நயன்மீதும் காதல் வயப்படுகிறார். சிம்புவின் பழைய காதல்களால் சின்னச் சின்ன சலசலப்புகள் ஏற்பட்டாலும், ஒருவழியாக சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் நிச்சயமாகிறது. திருமணத்திற்கு மூன்று மாதங்கள் இருப்பதால், இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக காதலிக்கத் தொடங்குகின்றனர். எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த வேளையில், திடீரென புதிய வில்லன் ஒருவர் சிம்பு, நயன் காதலுக்கு குறுக்கே வருகிறார். அவர் யார்? நயன்தாராவை சிம்பு கைபிடித்தாரா இல்லையா? என்பதற்கான விடைதான் ‘இது நம்ம ஆளு’.

படம் பற்றிய அலசல்

இதுவரை பாண்டிராஜ் இயக்கிய அத்தனை படங்களிலும் சிம்பிளான ஒரு நல்ல கதையும், கொஞ்சமேனும் சுவாரஸ்யமான ஒரு திரைக்கதையும், படத்தின் முடிவில் ஆணியடித்தாற்போன்ற ஒரு சமூக கருத்தும் நிச்சயமாக இருக்கும். ஆனால், மேற்கண்ட இந்த மூன்று விஷயங்களுமே ‘இது நம்ம ஆளு’ படத்தில் இல்லை. அவர் இப்படத்தில் களமிறங்கியிருப்பது ஒரேயொரு விஷயத்தை மட்டுமே நம்பி.... அது, சிம்பு, நயன்தாராவின் கெமிஸ்ட்ரி! கூடவே சூரியின் ‘ஒன்லைன்’ காமெடிகள். இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே படத்தை முழுவதுமாக காப்பாற்றியிருக்கின்றன.

மொத்த படத்தையும் உரையாடல்கள் மூலமே சுவாரஸ்யப்படுத்த முயன்றியிருக்கிறார் பாண்டிராஜ். ஓரளவுக்கு அது சுவாரஸ்யமாகவே இருந்தாலும், நீண்ட நெடும் உரையாடல்களாக இருப்பதால் ஒரு கட்டத்திற்குமேல் அலுப்புத்தட்டுகிறது. சிம்புவும், நயனும் கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேல் ஃபோனிலேயே பேசிக் கொள்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஆபத்பாந்தவனாக ரசிகர்களை காப்பாற்றியிருப்பது சூரிதான். அவரின் சின்னச் சின்ன டைமிங் வசனங்கள் காட்சிகளை கலகலப்பாக்கியிருக்கின்றன.

குறளரசனின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளன. ‘மாமன் வெயிட்டிங்..’ பாடலில் திரைக்கு முன்பே ஆடித்தீர்த்துவிட்டார்கள் எஸ்.டி.ஆர். ரசிகர்கள். பின்னணி இசையில் குறளரசனுக்கு பெரிய வேலையில்லை. படம் முழுக்க ஒரே ட்யூனிலேயே நகர்த்தியிருக்கிறார். ஒளிப்பதிவு ஓகே.

நடிகர்களின் பங்களிப்பு

சிம்பு இப்படத்தில் ஏற்றிருக்கும் சிவா கேரக்டர், அவரின் ரசிகர்களைவிட ரசிகைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். பஞ்ச் டயலாக் இல்லை, அதிரடி சண்டைகள் கிடையாது... க்யூட் லவ்வர் பாயாக அசத்தியிருக்கிறார் சிம்பு. அவரின் ‘ஸ்கிரீன் பிரசென்ஸ்’தான் திரைக்கதையின் ‘வீக்னெஸை’ மறக்கடிக்கச் செய்கிறது. பாடல்களில் வழக்கம்போல் அதே பழைய ஸ்டைல் சிம்பு. நயன்தாராவின் என்ட்ரிக்கு தியேட்டர் அதிர்கிறது. வழக்கமாகவே இது நயன்தாராவுக்கு கிடைக்குமென்றாலும், சிம்பு படம் என்பதால் கூடுதல் அப்ளாஸ். நயனும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. ‘ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி’யில் தான் ஒரு புரபொஸர் என்பதை நிரூபித்திருக்கிறார். சுடிதார், சேலை என அவருக்கான காஸ்ட்யூம்களையும் சிறப்பாக தேர்வு செய்திருக்கிறார்கள். சிம்புவின் ஃப்ளாஷ்பேக் காதலியாக ஆன்ட்ரியா. கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். அதற்கும் முந்தைய ஃப்ளாஷ்பேக் காதலியாக தெலுங்கு நடிகை அதா சர்மா. ஒரேயொரு குத்துப்பாடலுக்கு தலைகாட்டி மறைகிறார்.

சிம்புவுடன் நடித்த முதல் படத்திலேயே அதகளம் செய்திருக்கிறார் சூரி. சிம்புவின் நிஜ வாழ்க்கையையே கிண்டலடிப்பதுபோல் அமைந்திருக்கின்றன அவரின் காமெடிகள். ரசிகர்களும் அவரின் ஒரு வரி வசனங்களுக்கு விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். கெஸ்ட்ரோலில் சந்தானம், ஜெய் ஆகியோர் தலைகாட்டி மறைகிறார்கள். சிம்புவின் அப்பாவாக ஜெயப்பிரகாஷ், நயனின் அப்பா அம்மாவாக உதய் மகேஷ், தீபா ராமானுஜம் மனதில் நிற்கிறார்கள்.

பலம்

1. சிம்பு, நயன் கெமிஸ்ட்ரி
2. சூரியின் காமெடிகள்
3. பாடல்கள்

பலவீனம்

1. திரைக்கதையில் கவனம் செலுத்தாமல், வசனங்கள் மூலமே படத்தை நகர்த்த முயன்றியிருக்கும் பாண்டிராஜின் இயக்கம்
2. இழுவையான க்ளைமேக்ஸ்

மொத்தத்தில்...

பாண்டிராஜ் படத்தை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும், சிம்பு ரசிகர், ரசிகைகளைப் பொறுத்தவரை ‘இது நம்ம ஆளு’ப்பா என சொல்லுமளவுக்கான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில்... பேச்சைக் குறைத்து, திரைக்கதையில் சுவாரஸ்யத்தைப் புகுத்தியிருந்தால் எல்லோரும் சொல்லியிருக்கலாம் ‘இது நம்ம ஆளு’ என!

ஒரு வரி பஞ்ச் : டயலாக் டிராமா!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;