யு டர்ன் (கன்னட படம்) - விமர்சனம்

திகில் திருப்பம்!

விமர்சனம் 21-May-2016 3:41 PM IST Top 10 கருத்துக்கள்

‘லூஸியா’ படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கன்னட திரையுலகை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பவன்குமார். அதோடு, இப்படத்தின்மூலம் கூட்டுத் தயாரிப்பு என்ற புதிய சினிமா யுக்தியையும் சாத்தியப்படுத்தினார். அவரின் அடுத்த படைப்பு ‘யு டர்ன்’. தனது வித்தியாசமான திரைக்கதை அமைப்பின் மூலம் இந்த யு டர்னிலும் ‘திரும்பி’ப் பார்க்க வைத்திருக்கிறாரா பவன்குமார்?

கதைக்களம்

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பெங்களூர் பிரிவில் பயிற்சி நிருபராக பணிபுரிபவர் ரச்சனா (ஷ்ரதா ஸ்ரீநாத்). பாலம் ஒன்றில் அடிக்கடி நடைபெறும் விபத்து குறித்து விழிப்புணர்வு கட்டுரை எழுதும் புராஜெக்ட் ஒன்றை மேற்கொள்கிறார். அதனால், அந்த பாலத்தின் நடுவே இருக்கும் கற்களை விலக்கிவிட்டு, யாரெல்லாம் ‘யு டர்ன்’ செய்து விதிகளை மீறுகிறார்கள் என்பதைக் கண்காணிக்கிறார். அதோடு, அவர்களின் வண்டி நம்பரை வைத்து, அவர்களின் அட்ரெஸைக் கண்டுபிடித்து, அவர்களை பேட்டி எடுக்கவும் திட்டமிடுகிறார். அப்படி அவர் கையில் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அதில் ஒரு நபரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் செல்கிறார் ரச்சனா. அங்கே யாரும் இல்லாததால் திரும்பவும் தன் ரூமிற்கு வருகிறார்.

அடுத்த கணம், அவரை போலீஸ் கைது செய்கிறது. ரச்சனா பார்க்கச் சென்ற நபர் அவர் வீட்டில் இறந்து கிடந்ததாகவும், கடைசியாக அவரைப் பார்க்க ரச்சனா வந்ததால், அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இருப்பதாகக் கருதியே விசாரணைக்காக வரவைக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸ் தரப்பு கூறுகிறது. தான் எதற்காக அந்த நபரை சந்திக்கச் சென்றேன் என்பதையும், இதுபோல் பலரையும் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் போலீஸிடம் கூறும் ரச்சனா, தன் கையில் வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் போலீஸிடம் ஒப்படைக்கிறார். அவர் கொடுத்த பட்டியலில் இருக்கும் அத்தனை நபர்களுமே சமீபத்தில் இறந்துபோனதையும் கண்டுபிடித்து அதிர்ச்சியாகிறது போலீஸ்.

பாலத்தில் விதிமீறி ‘யு டர்ன்’ செய்த அனைவருமே ஏன் இறந்துபோகிறார்கள்? இதற்குப் பின்னணியில் இருப்பது யார்? ரச்சனாவுக்கும் அந்த இறப்புகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? போலீஸ் இந்த கேஸை எப்படிக் கையாளப் போகிறார்கள்? என ரசிகர்களின் மனதில் முண்டியடிக்கும் கேள்விகளுக்கு விடையாக விரிகிறது ‘யு டர்ன்’!

படம் பற்றிய அலசல்

ஒரு பாடல்கூட கிடையாது, இடைச்செருகலாக எந்த காமெடியும் சேர்க்கப்படவில்லை, துளி கவர்ச்சிகூட கிடையாது, சண்டைக்காட்சிகளுக்கும் இடம் இல்லை... ஆனால், 2 மணி நேரம் இருக்கையோடு ரசிகர்களை கட்டிப்போடுகிறார் இயக்குனர் பவன்குமார். நாம் அன்றாடம் செய்யும் ஒரு சாதாரண சாலை விதிமீறல் சம்பவத்தை பின்னணியாக வைத்து, அவர் உருவாக்கியிருக்கும் திரைக்கதைக்கும், அடுத்தடுத்து ரசிகர்களை திகிலடைய வைக்கும் காட்சி அமைப்புகளுக்கும் ஒரு தனி பொக்கே! கதாபாத்திரங்களின் பங்களிப்பும், டெக்னிக்கல் விஷயங்களின் உழைப்பும் ஹாலிவுட் த்ரில்லர் படம் பார்த்த அனுபவத்தைத் தருகின்றன. குறிப்பாக ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒலி வடிவமைப்பு ஆகியவை உயர்தரம்.

சின்னச் சின்ன லாஜிக் விஷயங்கள், யூகித்துவிடக்கூடிய க்ளைமேக்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து படத்தில் குறைசொல்வதற்கு எந்த இடமும் கொடுக்கவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

இப்படத்தின் மிகப்பெரிய பலம் கதாபாத்திர வடிவமைப்பும், அந்தந்த கேரக்டர்களில் நடித்தவர்களின் யதார்த்தமான நடிப்பும்தான். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள்தான். ஆனால், அனுபவசாலிகள் போன்ற நடிப்பை வழங்கி அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக நாயகி ஷ்ரதா ஸ்ரீநாத்தும், சப் இன்ஸ்பெக்டர் நாயக் கேரக்டரில் நடித்த ரோஜர் நாராயணும். அப்பாவித்தனமும், குறும்பும் நிறைந்த மாடர்ன் கேர்ளாக பார்த்தவுடன் பிடித்துப்போக வைக்கிறார் ஷ்ரதா. கோபம், பயம், காதல் என அத்தனை உணர்ச்சிகளையும் கண்கள் மூலம் கடத்தி ரசிகர்களை கட்டிப்போடுகிறார். அவரின் காதலராக வரும் திலீப் ராஜும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

பலம்

1. எளிமையான கதையும், ஆங்காங்கே திருப்பங்களைக் கொண்ட திரைக்கதை அமைப்பும்.
2. நடிகர்களின் பங்களிப்பு
3. டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

ஒன்றிரண்டு லாஜிக் விஷயங்களைத் தவிர்த்து பெரிய குறைகள் எதுவும் இல்லை.

மொத்தத்தில்...

ஒரு சிறிய பட்ஜெட்டில், புதுமுக நடிகர்களை வைத்துக்கொண்டு சுவாரஸ்யமாக படமெடுப்பது எப்படி என இளைய தலைமுறை உதவி இயக்குனர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார் பவன்குமார். தமிழில் வெளிவந்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற ‘யாவரும் நலம்’, ஈரம், பீட்சா, மாயா போன்ற படங்களின் வரிசையில் இந்த ‘யு டர்ன்’ கன்னட படத்தையும் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு வரி பஞ்ச் : திகில் திருப்பம்!

ரேட்டிங் : 6/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;