கத சொல்லப் போறோம் – விமர்சனம்

சுட்டிகளின் சென்டிமென்ட் கலாட்டா!

விமர்சனம் 20-May-2016 5:23 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : S.kalyaan
Production : Victoria Watchdog Pvt Ltd
Starring : Naren, Kali Venkat, Vijayalakshmi
Music : R.Pavan
Cinematography : Vijay Velukuttiy

‘நாளைய இயக்குனர்’ மூலம் பிரபலமான எஸ்.கல்யாண் இயக்கியிருக்கும் படம் ‘கத சொல்லப் போறோம்’. இதில் என்ன கதை சொல்லியிருக்கிறார்?

கதைக்களம்

ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி தம்பதியருக்கு மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. நரேனிடம் பொய் சொல்லி அந்த குழந்தையை ஒரு பெண்மணி எடுத்து செல்கி
றார். பிறகு தன் குழந்தை களவாடப்பட்ட விவரம் தெரிய வரும் நரேன், போலீசாருடன் அந்த பெண்மணியை தேடி செல்லும்போது, ஒரு லாரி மோதி அந்த பெண்மணி கோமா நிலைக்கு சென்று விடுகிறார். இதனால் தன் குழந்தை எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் 8 ஆண்டுகளாக தேடியும் கிடைக்காமல் இருக்கும் நரேனுக்கு, போலீசார் மூலம் அந்த குழந்தை ஒரு அனாதை ஆசிரமத்தில் இருப்பதாக தகவல் கிடைக்கிறது. அந்த குழந்தை நரேன், விஜயலட்சுமி தம்பதியரின் நிஜ குழந்தை தானா? அந்த குழந்தை எப்படி அனாதை ஆசிரமத்துக்கு சென்றது? அந்த குழந்தை பெற்றோருடன் இணைந்ததா? இதற்கெல்லாம் விடை தரும் படமே ‘கத சொல்லப் போறோம்’.

படம் பற்றிய அலசல்

பெற்றோர்கள் இருந்தும் திருடப்பட்டும் ஒரு குழந்தை எப்படி தவறானவர்களின் கையில் சிக்கி தன் மகிழ்ச்சி, உரிமையை இழந்து வாடுகிறது என்பதை இப்படத்தில் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் எஸ்.கல்யாண். அத்துடன் அநாதை ஆசிரமத்தில் வாழும் குழந்தைகளின் வேதனைகளையும், அவர்களிடத்திலும் நல்ல எண்ணங்கள், குணங்கள் உண்டு என்பதையும் வலியுறுத்தி அவர் அமைத்திருக்கும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அனைவரையும் நெகிழ வைக்கும்! குழந்தைகளை வைத்து குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் திணிக்கப்பட்டது மாதிரி வரும் காதல் காட்சிகள் போரடிக்க வைப்பதோடு கதையில் ஒட்டவே இல்லை. குழந்தைகளின் விளையாட்டுக்கள், கலாட்டா, சென்டிமென்ட் என்று செல்லும் திரைக்கதைக்கு ஆர்.பவனின் பின்னணி இசையும், பாடல்களும் கை கொடுத்துள்ளது. மற்றபடி ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் படத்திற்கு ப்ளஸ்ஸாக அமையவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

குழந்தையை இழந்து தவிக்கும் தம்பதியராக வரும் நரேன், விஜயலட்சுமி இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர். வாட்ச் மேனாக வரும் காளி வெங்கட் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். படத்தில் நடித்திருக்கும் அனைத்து குழந்தைகளையும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் கல்யாண் என்பது அந்த குழந்தைகளின் பெர்ஃபார்மென்ஸ் வெளிப்படுத்துகிறது.

பலம்

1. சென்டிமென்ட் கலந்த திரைக்கதையும், கிளைமேக்ஸ் காட்சியும்
2. குழந்தைகளின் சிறப்பான பங்களிப்பு

பலவீனம்

1. போரடிக்க வைக்கும் காதல் காட்சிகள்!
2. டெக்னிக்கல் விஷயங்கள்

மொத்தத்தில்…

அனாதையாக வளரும் குழந்தைகளின் ஆசைகள், எண்ணங்கள், துன்பங்கள் ஆகியவையை ஓரளவுக்கு யதாரத்தமாக சித்தரித்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் குழந்தைகளை கவர வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : சுட்டிகளின் சென்டிமென்ட் கலாட்டா!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;