மருது - விமர்சனம்

ஆக்ரோஷமானவன்

விமர்சனம் 20-May-2016 4:21 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Muthaiah
Production : Gopuram Films
Starring : Vishal, Sri Divya
Music : D. Imman
Cinematography : Velraj
Editing : Praveen K. L

‘குட்டிப்புலி’யில் அம்மா - மகன் சென்டிமென்ட்டையும், ‘கொம்பன்’ படத்தில் மாமா - மருமகன் உறவுமுறையையும் படமாக்கி நெகிழ வைத்த இயக்குனர் முத்தையா, இப்போது ‘மருது’ படம் மூலம் பாட்டி - பேரனை வைத்து கதை சொல்லியிருக்கிறார். மருது... பாசக்காரனா? இல்லை ரோஷக்காரனா?

கதைக்களம்

கூலிவேலை செய்துவரும் விஷால் தன் பாட்டி ‘கொளப்புள்ளி’ லீலா மீது உயிராக இருப்பவர். பக்கத்து ஊரிலிருக்கும் ஸ்ரீதிவ்யாவைப் பார்த்ததும், அவரை தன் வீட்டு மருமகளாக்க ஆசைப்படும் விஷாலின் பாட்டி, ஸ்ரீதிவ்யாவை காதலிக்க அவரைத் தூண்டிவிடுகிறார். மெல்ல மெல்ல இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.

இன்னொருபுறம், ஸ்ரீதிவ்யாவின் ஊரில் ரௌடித்தனம் செய்துவரும் ஆர்.கே.சுரேஷ், ஊர் பெரியவரான ராதாரவி மூலம் மெல்ல மெல்ல லோக்கல் அரசியலில் களமிறங்குகிறார். ஒரு சந்தர்பத்தில் ஸ்ரீதிவ்யாவின் குடும்பத்திற்கும், ஆர்.கே.சுரேஷுக்கும் இடையே பகை வளர்கிறது. இதனால் ஸ்ரீதிவ்யாவின் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

ஸ்ரீதிவ்யா குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே, அவரையும் விஷாலையும் இணைக்க திட்டம் தீட்டியுள்ளார் விஷாலின் பாட்டி. அது ஏன்? விஷாலின் பாட்டிக்கும் ஸ்ரீதிவ்யாவின் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்? ஆர்.கே.சுரேஷை விஷால் என்ன செய்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாக விரிகிறது ‘மருது’ படத்தின் இரண்டாம்பாதி.

படம் பற்றிய அலசல்

ஒரு வழக்கமான வெட்டுக்குத்து கிராமத்துக் கதை. அதில் ‘ட்விஸ்ட்’ என்ற பெயரில் சிலபல விஷயங்களைச் சேர்த்து சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார் முத்தையா. முதல்பாதியில் காதல், காமெடி என கதை மெல்ல நகர்வதாலும் படம் ரசிகர்களை சோர்வடைய வைக்கவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் அடிதடி, அரிவாள் வெட்டு என ஓவர் வயலன்ஸை திரைக்கதையில் நுழைத்து, ரசிகர்களை பதம் பார்க்கிறார்கள். அழகான ஸ்ரீதிவ்யாவும், சூரியின் கலகல காமெடி மட்டுமே படத்தின் ஆகச்சிறந்த ஆறுதல் விஷயங்கள். வேல்ராஜின் ஒளிப்பதிவு, அனல் அரசின் சண்டைக்காட்சிகளை கச்சிதமாக படம்பிடித்துள்ளது. அதற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது இமானின் பின்னணி இசை. ஆனால், பாடல்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

விஷாலுக்கேற்ற சரியான கதாபாத்திரம் மருது. முறுக்கேறிய உடம்பு, பாசமான பார்வை, ஆக்ரோஷமான வீரம் என கிராமத்து ஆளாகவே மாறியிருக்கிறார். நடிப்பதை விட அடிப்பதற்கே அதிகம் பயன்பட்டிருக்கிறார் விஷால். பாவாடை, தாவணி, தலைநிறைய மல்லிகைப் பூ என வில்லேஜ் கேரக்டருக்கு அச்சுஅசலாகப் பொருந்தியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா. கதையோடு வரும் ஹீரோயின் கேரக்டர். அதனால் நடிக்கவும் செய்திருக்கிறார். ‘கொக்கரக்கோ’ கேரக்டரில் வரும் சூரி, ரசிகர்களை ‘கெக்கபிக்கே’வென சிரிக்க வைக்கிறார். ஒரு காட்சியில் கதறி அழவும் செய்கிறார். ராதாரவிக்கு கொடுத்த பில்டப்பிற்கேற்ற கேரக்டர் தரப்படவில்லை. ஆர்.கே.சுரேஷ் அதிரடி வில்லனாக மிரட்டியிருக்கிறார். பார்த்தாலே பயம் வரும் அளவுக்கு கொடூரமான மனிதராக ‘மருது’வில் வலம் வந்திருக்கிறார். குறும்பும், பாசமும் கலந்த துறுதுறு பாட்டியாக ‘கொளப்புள்ளி’ லீலா கலக்கியிருக்கிறார். ‘டப்பிங்’ மட்டும் அவரது வாயசைப்புக்கேற்றபடி அமையவில்லை.

பலம்

1. நடிகர்களின் பங்களிப்பு (குறிப்பாக சூரியின் காமெடி)
2. ஒளிப்பதிவும், சண்டை இயக்கமும்

பலவீனம்

1. பழைய ஃபார்முலா கதை
2. இரண்டாம்பாதி திரைக்கதை அமைப்பு

மொத்தத்தில்...

ஒரே மாதிரியான கதைக்களம், பார்த்துப் பழகிப்போன காட்சியமைப்புகள் என முத்தையாவின் முந்தைய படங்களையே நினைவுபடுத்துகிறது இந்த ‘மருது’. அடுத்த படத்தில் புதிய ஃபார்முலாவில் முத்தையா கதை சொல்வார் என நம்புவோம்.

ஒரு வரி பஞ்ச் : ஆக்ரோஷமானவன்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - ஐயோ அடி ஆடியோ பாடல்


;