என் பெயரை தவறாகப் பயன்படுத்தாதீர்கள்! - சூர்யா எச்சரிக்கை

என் பெயரை தவறாகப் பயன்படுத்தாதீர்கள்! - சூர்யா எச்சரிக்கை

செய்திகள் 20-May-2016 10:33 AM IST Chandru கருத்துக்கள்

சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு எந்தவித முன்அறிவிப்பு செய்யாமலும், முறைப்படி அவர்களிடம் அனுமதி பெறாமலும் சிலர் தங்களின் சுயநலன்களுக்காக அவர்களின் பெயர்களையும், படங்களையும் பயன்படுத்துவது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களினால் பலர் மனம் வேதனைப்படும்படியான சூழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளில், முன்கூட்டியே ரசிகர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் விளக்கமளித்து சம்பந்தப்பட்ட வதந்திகளுக்கு சில பிரபலங்கள் முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள். தன்பெயரை தவறாகப் பயன்படுத்திய அமைப்பு ஒன்றிற்கு தனது கண்டனங்களையும், அது குறித்த விளக்கம் ஒன்றையும் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் அப்படியே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது....

‘‘அனைருக்கும் வணக்கம்,

மலேசியா தமிழ்ப் பத்திரிகையில் எனக்கே தெரியாத என்னைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ‘மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழா’ என்ற மதம் சார்ந்த நிகழ்வு நடைபெற இருப்பதாகவும், அதில் நான் கலந்துகொள்ள லட்சக்கணக்கில் பணம் கேட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இச்செய்தி பலரால் பகிரப்படுகிறது.

இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய தகவல்கூட எனக்குத் தெரியாது. கலந்துகொள்ளும்படி யாரும் என்னை அணுகவும் இல்லை. கலைஞர்கள் சாதி, மதம், மொழி போன்ற எல்லா எல்லைகளையும் கடந்தவர்கள். கலைத்துறையில் இருக்கிற நான் மதம் தொடர்பாக நடக்கிற ஒரு நிகழ்வில் நிச்சயம் கலந்துகொள்ள சம்மதித்து இருக்க மாட்டேன்.

சமூக வளர்ச்சி, மாற்றம், விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வமாக கலந்துகொள்கிற நான், அதற்காக எப்போதும் பணம் பெற்றதில்லை. பணம் வாங்கிக்கொண்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடாது என்கிற கொள்கை உடையவன் நான். அப்படி இருக்க, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் பணம் கேட்டதாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை.

மலேசியாவில் நடைபெறுவதாக சொல்லப்படும் ‘மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழாவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விழா அமைப்பினர் என் பெயரை தவறாகப் பயன்படுத்தினால், சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற செய்திகள் அடிக்கடி வருவது வருத்தமளிக்கிறது. என்மீது அன்புகொண்ட அனைவருக்கும் என் வேண்டுகோள். இனி இதுபோன்ற தவறான நோக்கத்தோடு இடம்பெறும் செய்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளித்து தொடர்ந்து எனக்கு துணை நிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
சூர்யா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;