உன்னோடு கா – விமர்சனம்

பொழுதுபோக்கு!

விமர்சனம் 17-May-2016 12:08 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : RK
Production : Abirami Cinemas
Starring : Aari, Maya, Narayan, Prabhu
Music : C. Sathya
Cinematography : Sakthi Saravanan
Editing : Xavier Thilak

‘அபிராமி’ ராமநாதன் கதை எழுதி, அறிமுக இயக்குனர் ஆர்.கே. திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ‘உன்னோடு கா’ எப்படி?

கதைக்களம்

கோழியிலிருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்பது போன்ற ஒரு பிரச்சனை காரணமாக சிவலிங்கபுரம் என்ற ஊர் இரண்டாக பிரிந்து ஐந்து தலைமுறைகளாக வெட்டு, குத்து, பழிக்குப் பழி என்று இருந்து வருகிறார்கள்! பிரிந்த அந்த ஊரை சேர்ந்த நண்பர்களான பிரபுவும், தென்னவனும் நாம் இவ்வூரில் இருந்தால் ஒருவரை ஒருவர் வெட்டி சாகும் நிலை உருவாகும் என்பதை புரிந்துகொண்டு தங்கள் குழந்தைகளுடன் சென்னை வந்து எதிர் எதிரான வீடுகளில் வாழ்க்கை நடத்துகிறார்கள். நாளடைவில் இந்த விஷயம் தெரிய வரும் பிரபுவின் உறவினர்களும், தென்னவனின் உறவினர்களும் மீண்டும் பகையை வளர்த்து விடுகின்றனர். இந்நிலையில் எதற்கெடுத்தாலும் எலியும், பூனையுமாக இருக்கும் பிரபுவின் மகன் ஆரியும், தென்னவனின் மகள் மாயாவும் திருமணம் செய்து கொண்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று நம்புகின்றனர் பிரபுவும், தென்னவனும்! எலியும் பூனையுமாக இருக்கும் ஆரியும், மாயாவும் வாழக்கையில் இணைந்தார்களா? பிரிந்த ஊர் ஒன்றானதா என்பதற்கு விடை தருகிறது ‘உன்னோடு கா’.

படம் பற்றிய அலசல்

படம் பார்க்க வருபவர்களுக்கு இரண்டு மணிநேரத்துக்கான பொழுது போக்கு விஷயங்கள் கொடுத்தால் போதும் என்ற முடிவோடு லாஜிக் விஷயங்களை எல்லாம் கடைபிடிக்காமல் இதன் திரைக்கதையை உருவாக்கி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ஆர்.கே. இடைவேளை வரை எலியும் பூனையுமாக இருக்கும் ஆரி, மாயாவின் கலாட்டாக்கள், தங்களது பிள்ளைகள் வாழ்க்கையில் இணைய மாட்டார்களா என்று ஏங்கி தவிக்கும் பிரபு - உர்வாசி, தென்னவன் - ஸ்ரீரஞ்சனி தம்பதியரின் எதிர்பார்ப்பு, தான் காதலிக்கும் மிஷா கோஷலின் தந்தை மன்சூரலிகானை ஏமாற்றி அவளை எப்படி கரம் பிடிப்பது என்று துடித்துக் கொண்டிருக்கும் பாலசரவணனின் காமெடி என இடைவேளை வரை படம் கொஞ்சம் நீளமாக பயணித்தாலும் கலகலப்பாக செல்கிறது. இரண்டாம் பகுதியில் சிவலிங்கபுரம் என்ற ஊர் இரண்டாக பிரிய காரணம் இரண்டு கோழிகளும், ஒரு முட்டையும் என்பது தெரிய வரும்போது ஏற்படும் திருப்பங்கள் ரசிக்க வைக்கிறது. படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்களால் வரும் குழப்பங்கள் மற்றும் லாஜிக் மீறல்களை தவிர்த்து பார்த்தால் ‘உன்னோடு கா’ ஓரளவுக்கு ரசிக்க கூடிய படமாகவே அமைந்துள்ளது. சக்தி சரவணனின் ஒளிப்பதிவும், சத்யாவின் இசையும் ‘உன்னோடு கா’விற்கு கை கொடுத்துள்ள முக்கிய விஷயங்களாக அமைந்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

படத்திற்கு படம் ஆரியின் பெர்ஃபார்மென்சில் மெச்சூரிட்டி தெரிகிறது. கீப் இட் அப் ஆரி! தென்னவனின் மகளாக வரும் மாயா, துறுதுறுவென இருக்கிறார், சிரிப்பிலும் நடிப்பிலும் குறை வைக்கவில்லை. பாலசரவணன், மிஷா கோஷல் ஜோடி, பிரபு, ஊர்வசி ஜோடி, தென்னவன், ஸ்ரீரஞ்சனி ஜோடி, ஆகியோருடன் மிஷா கோஷலின் தந்தையாக வரும் மன்சூரலிகான், டிராஃபிக் இன்ஸ்பெக்டராக வரும் மனோபாலா, புரூஸ்லியாக வரும் நாராயண், யோகா மாஸ்டராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், மேரேஜ் புரோக்கராக வரும் சாம்ஸ், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாக வரும் சுப்பு பஞ்சு, தென்னவனின் பங்காளியாக வரும் ராஜாசிங், பிரபுவின் பங்காளியாக வரும் வினோத் சாகர் என படத்தில் ஏராளமானோர் நடித்துள்ளனர்.

பலம்

1. ஜாலி, சீரியஸ் கலந்த திரைக்கதை
2. இசை மற்றும் ஒளிப்பதிவு
3. எதிர்பாரத கிளைமேக்ஸ்

பலவீனம்

1. லாஜிக் விஷயங்களை கவனத்தில் கொள்ளாதது
2. அதிக படியான கேரக்டர்களால் வரும் குழப்பங்கள்
3. முதல் பாதியின் அதிகபடியான நீளம்!

மொத்தத்தில்…

லாஜிக் விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல் இரண்டரை மணிநேரம் பொழுதை கழிக்க விரும்புவோருக்கு ‘உன்னோடு கா’ பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : பொழுதுபோக்கு!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி 2 - டீஸர்


;