கோ 2 - விமர்சனம்

கோ 2 - வாக்களிக்கலாம்!

விமர்சனம் 13-May-2016 2:04 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Sarath
Production : R. S. Infotainment (Elred Kumar)
Starring : Bobby Simha, Prakash Raj, Nikki Galrani, Bala Saravanan
Music : Leon James
Cinematography : Philip R. Sundar, Venkat M.
Editing : Kevin

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா பாய் ஆகியோர் நடிப்பில் 2011ல் வெளிவந்து வெற்றிபெற்ற படம் ‘கோ’. தற்போது, அதன் 2ஆம் பாகம் என புரமோட் செய்யப்பட்டிருக்கும் ‘கோ2’ படத்தை சரத் இயக்க, ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனமே தயாரித்திருக்கிறது. பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ், பால சரவணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோ2’, அதன் முதல் பாகத்தைப்போல் விறுவிறுப்பாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

ஆதரவற்றோர் இல்லத் திறப்புவிழா ஒன்றிற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சரை திட்டமிட்டு வரவழைக்கும் பாபிசிம்ஹா, அங்கேயே அவரை கடத்தி சிறைப்படுத்துகிறார். முதல்வரை மீட்பதற்காக உள்துறை அமைச்சரால் சிறப்பு போலீஸ் படை ஒன்றையும் உருவாக்குகிறார்கள். அதற்கு தலைமை தாங்கும் ஜான் விஜய், பாபி சிம்ஹாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தன்னுடைய ‘டிமான்ட்’களை போலீஸிடம் தெரிவிக்கிறார் பாபி சிம்ஹா. அது மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அதிர்ச்சிக்குள்ளாக்கும் அளவுக்கு பாபி சிம்ஹா விடுத்த வேண்டுகோள் என்ன? முதல்வரை ஒரு சாதாரண குடிமகனால் எப்படி கடத்த முடிந்தது? ஏன் கடத்தப்பட்டார்? என்பதற்கான விடையாக விரியும் படம்தான் ‘கோ 2’.

படம் பற்றிய அலசல்

2014ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘பிரதிநிதி’ படத்தின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது இந்த ‘கோ2’. அதேபோல், 1998ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளிவந்த ‘தேசியகீதம்’ படத்தையும் கொஞ்சம் நினைவுபடுத்துகிறது. ஆனால், படத்தில் முதல்வரைக் கடத்துவது மையக்கதை அல்ல, அதன்மூலம் சொல்ல வரும் கருத்தையே ரசிகர்கள் முக்கியமாகக் கொள்ள வேண்டும் என படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்கள். அதனால் இப்படத்தின் திரைக்கதையையும், அது ரசிகர்களை எந்தளவுக்கு சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறது என்பதைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.

படத்தின் அடிப்படை கதைக்கும், கதாபாத்திரங்கள் பேசும் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால், வசனங்கள் வலிமையாக இருந்தும் ரசிகர்களிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தத் தவறியிருக்கிறது. அதோடு, படத்தின் முதல் 45 நிமிடங்கள் கொஞ்சம் ஸ்லோவாகவும், சுவாரஸ்யமில்லாமலும் நகர்கிறது. ஆனால், அதன் பிறகு படம் வேகமெடுக்கிறது. குறிப்பாக படத்தின் இரண்டாம்பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. க்ளைமேக்ஸையும் ஏற்றுக்கொள்ளும்படி அமைத்திருப்பது புத்திசாலித்தனம். மொத்தமே 2 மணி நேரம் 10 நிமிடங்களில் படத்தை உருவாக்கியிருப்பது, 2 பாடல்களை மட்டுமே பயன்படுத்தியிருப்பது, பட்ஜெட்டிற்கேற்றபடி டெக்னிக்கல் விஷயங்கள் சிறப்பாக செயல்பட்டிருப்பது, நடிகர்களின் பங்களிப்பு ஆகியவை ‘கோ2’விற்கு ப்ளஸ் பக்கங்களாக அமைந்திருக்கின்றன.

படத்தின் கதாபாத்திர வடிவமைப்பையும், வசனங்களையும் நிகழ்கால அரசியலை நினைவுபடுத்துவதுபோல் உருவாக்கியிருக்கும் இயக்குனரின் தைரியத்திற்கும், அதை புத்திசாலித்தனமாக கையாண்டிருப்பதற்கும் தனி பாராட்டுக்கள்!

நடிகர்களின் பங்களிப்பு

‘ஜிகர்தண்டா’விற்குப் பிறகு பாபி சிம்ஹாவின் நடிப்பில் வெளிவந்த படங்களில், ‘அசால்ட் சேது’வின் பாதிப்பு பெருமளவு இருந்து வந்தது. அந்தக்குறையை இந்த ‘கோ2’வின் மூலம் ஓரளவு நிவர்த்தி செய்துவிட்டார் பாபி சிம்ஹா. இனிவரும் படங்களில் பாபி சிம்ஹாவிடமிருந்து பெரிய வித்தியாசத்தை படத்திற்குப் படம் எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது. வழக்கமான ஹீரோயின்கள் செய்யும் வேலைகளோடு, கொஞ்சம் கதையிலும் பயணிக்க வாய்ப்புள்ள கேரக்டர் நிக்கி கல்ராணிக்கு. அழகிலும், நடிப்பிலும் ரசிகர்களைக் கவர்கிறார். படம் முழுக்க உட்கார்ந்தபடியே வசனம் பேசி நடிக்க வேண்டிய சூழல் பிரகாஷ் ராஜிற்கு. முகபாவனைகள் மூலமே அசத்தியிருக்கிறார் மனிதர்! இதுபோன்ற கேரக்டர்கள் பிரகாஷ் ராஜிற்கு புதிதில்லை என்றாலும், அவர்தான் இதற்குப் பொருத்தமானவர் என்பதையும் மறுப்பதற்கில்லை. பால சரவணன் வெறும் காமெடியனாக மட்டும் வந்து போகாமல், படத்தின் முக்கிய கேரக்டர்களில் ஒருவராகவும் நடித்திருக்கிறார். அந்தவகையில் ‘கோ2’ அவரின் கேரியரில் முக்கிய படங்களில் ஒன்றாக இடம்பிடிக்கும். இவர்களைத்தவிர, ஜான் விஜய், இளவரசு, நாசர், பரத் ரெட்டி ஆகியோரும் அந்தந்த கேரக்டர்களை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

பலம்

1. விறுவிறுப்பான இரண்டாம்பாதியும், க்ளைமேக்ஸும்
2. நடிகர்களின் பங்களிப்பு
3. டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. கதை
2. படத்தின் முதல்பாதி திரைக்கதை அமைப்பு

மொத்தத்தில்

‘கோ’ படத்தை ‘கம்பேர்’ செய்யாமல், லாஜிக் விஷயங்களைத் தவிர்த்துவிட்டு இந்த ‘கோ 2’ படத்தை அணுகினால் ஒரு சுவாரஸ்யமான படம் பார்த்த திருப்தியை நிச்சயம் தரும். படத்தின் முதல்பாதி காட்சிகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இன்னும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கும் இந்த ‘கோ2’.

ஒரு வரி பஞ்ச்: வாக்களிக்கலாம்!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;