எனக்கு இன்னொரு பேர் இருக்கு - இசை விமர்சனம்

2.5

இசை விமர்சனம் 12-May-2016 3:55 PM IST Chandru கருத்துக்கள்

‘டார்லிங்’ படத்தின் வெற்றிக்கு அப்படத்தில் இடம்பெற்ற ஜி.வி.பிரகாஷின் பாடல்களும் ஒரு காரணம். இப்போது டார்லிங் கூட்டணியின் அடுத்த படமான ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்தமுறை எப்படி?

கண்ணை நம்பாதே...
பாடியவர் : ‘கானா’ பாலா
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்


எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து சூப்பர்ஹிட்டான எம்.ஜி.ஆரின் பழைய தத்துவப்பாடலை, இந்தக்காலத்திற்கேற்றபடி ‘ரீமேக்’ செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். கானா பாலாவின் குரல், ஜி.வி.யின் டிரென்டியான இசை, நா.முத்துக்குமாரின் ‘யூத்ஃபுல்’லான வரிகள் என கொஞ்சம் சுவாரஸ்யமான பாடல்தான் இது. அந்தக்காலத்தில் ஒலித்தது தத்துவப் பாடல் என்றால், இது காதல்தோல்விப் பாடல். இப்பாடலுக்கான விஷுவல்கள் இன்னும் உற்சாகமாய் இருந்தால் பெரிதாக வரவேற்பைப் பெறும்.

மைமா...
பாடியவர் : ஜி.வி.பிரகாஷ்குமார்
பாடலாசிரியர் : அருண்ராஜா காமராஜ்


‘குங்குமப் பூவே... கொஞ்சும் புறாவே...’ என பாடல் ஆரம்பித்ததும், ‘இதுவும் ரீமேக்’கா என்ற அதிர்ச்சி ஏற்படுகிறது. நல்லவேளையாக முழுவதும் பழைய பாடல் போல் இல்லாமல், புதிதாக எதையோ முயற்சி செய்திருக்கிறார் ஜி.வி.. பொதுவாக, தன் இசையில் ஜி.வி. பாடும் பாடல்கள் மெலடியாகவே இருக்கும். ஆனால், இந்த ‘மைமா...’ அதிரடிப்பாடலாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு. பாடலுக்கான இசையில் பொரும்பான்மை இடத்தை ஹார்மோனியம் ஆக்ரமித்திருக்கிறது.

டான்ஸ் வித் மீ...
பாடியவர் : பிரியங்கா, ஜி.வி.பிரகாஷ்குமார்
பாடலாசிரியர் : ஏகாதசி


பாஸ்ட் பீட் பஞ்சாபி டியூனில் ஆரம்பித்து, கர்நாடிக் ஸ்டைலில் பாடத்துவங்கி, டெக்னோ பீட் இசைக்குத் தாவி, டிரம்ஸ்களை அதிரவிட்டு, பாடலின் இறுதியில் நாதஸ்வர கச்சேரிச் சென்று பெரிய இசைக் கச்சேரியையே ஒரு பாடலுக்குள் அடக்க முயன்றிருக்கிறார் ஜி.வி. பிரியங்காவுடன் ஜி.வி.யும் இணைந்து இப்பாடலைப் பாடியிருக்கிறார். ஏகாதசியின் வரிகள் பெரிய சுவாரஸ்யம் தரவில்லை. நேரத்தை நகர்த்துவதற்காக இந்தப் பாடல் படத்தில் பயன்படலாம்.

தத்தலக்கா...
பாடியவர் : கிரேஸ் கருணாஸ்
பாடலாசிரியர் : லோகன்


‘ஆலுமா... டோலுமா’ ரேஞ்சுக்கு ஒரு பாடலை உருவாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அது கிரேஸ் கருணாஸ் ஏற்கெனவே பாடிய ‘திண்டுகல்லு... திண்டுகல்லு...’ பாடலையே நினைவுபடுத்துகிறது. ரசிகர்களை ஆட்டம் போட வைக்க வேண்டும் என்பதற்காகவே அதிரடியான இசையில் உருவாக்கப்பட்டிருக்கும் பாடல். படக்குழுவின் எண்ணம் நிறைவேறுமா என்பது ரிலீஸுக்குப் பிறகே தெரிய வரும். புதிதாக எதுவுமில்லையென்றாலும், பாடலைக் கேட்கும்போது உற்சாகம் தொற்றிக் கொள்வதையும் மறுப்பதற்கில்லை.

இந்த 4 பாடல்களோடு, ‘பாட்ஷா’ படத்தின் பஞ்ச் வசனங்களை வைத்து உருவாக்கப்பட்ட தீம் இசை ஒன்றும் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கிறது. மெலடிக்குப் பெயர்போன ஜி.வி.பிரகாஷ், முழுக்க முழுக்க மாஸ் பாடலாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆல்பத்தை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது. பாடல்கள் இசைப்பிரியர்களின் கவனத்தைப் பெறுவது கொஞ்சம் கடினமே..! காட்சிகளோடு பார்க்கும்போது சுவாரஸ்யம் தர வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;