2016 : வெளியீட்டிற்கான புதிய நம்பிக்கை தரும் வருடம்!

2016 : வெளியீட்டிற்கான புதிய நம்பிக்கை தரும் வருடம்!

கட்டுரை 11-May-2016 5:19 PM IST Chandru கருத்துக்கள்

ஒரு படத்தை எத்தனை கோடி செலவு செய்து, எவ்வளவு சிறப்பாக உருவாக்கியிருந்தாலும், அதை சரியான நேரத்திற்கு ரிலீஸ் செய்வதற்காக படாதபாடு பட வேண்டிய சூழல்தான் இன்றைய தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது. வாரக்கணக்கு, மாதக்கணக்கு போய்... இப்போது சில படங்கள் வருடக்கணக்காக ரிலீஸ் செய்ய முடியாமல் திணறி வருகின்றன. இந்த 2016ஆம் ஆண்டு, நீண்ட நாட்கள் ரிலீஸ் தள்ளிக் கொண்டிருக்கும் படங்களை மீண்டும் வெளியிடுவதற்கான புதிய நம்பிக்கை ஒன்றை விதைத்திருக்கிறது. அதைப்பற்றிய ஒரு கண்ணோட்டம்தான் இந்த கட்டுரை.

1. ரஜினி முருகன் : ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ கூட்டணியான இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் இணைந்து களமிறங்கிய இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடந்த வருடம் மே மாதம் முடிவடைந்துவிட்டன. அதோடு ஜூலை மாதத்தில் படத்தின் பாடல்களையும் வெளியிட்டார்கள். ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதிப்பிரச்சனைகள் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே இருந்தது. ஒருவழியாக இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான இப்படம் வசூலிலும் பெரிதாக சாதித்தது.

2. பென்சில் : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நாயகனாக முதன்முதலில் ஒப்பந்தமான படம் இந்த ‘பென்சில்’தான். படம் முடிவடைந்து ரிலீஸாவதற்குள்ளாகவே அவரின் நடிப்பில் ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என இரண்டு படங்கள் வெளிவந்துவிட்டன. ஏற்கெனவே பலமுறை ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ஒருவழியாக இந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. முன்பதிவுகளும் துவங்கிவிட்டன.

3. இது நம்ம ஆளு: சிம்பு, நயன்தாரா மீண்டும் கூட்டணி என்ற ஒரு விஷயமே, இந்தப் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாய் எகிற வைத்தது. பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா, சந்தானம், சூரி ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே, விஷாலின் ‘கதகளி’, சூர்யாவின் ‘பசங்க 2’ ஆகிய படங்களை இயக்கி, அவை ரிலீஸும் ஆகிவிட்டன. 2015 டிசம்பரிலேயே வெளியாக வேண்டிய ‘இது நம்ம ஆளு’, இப்போது இந்த மே 20ல் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4. மத கஜ ராஜா : இரண்டு வருடங்களுக்கு முன்பே ரிலீஸாகியிருக்க வேண்டிய படம், படத் தயாரிப்பு நிறுவனத்தின் நிதிப்பிரச்சனைகள் காரணமாக இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது. இந்த ஏப்ரல் 29ல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் மே 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, அதுவும் தள்ளிப்போய் இப்போது வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இத்தனைக்கும், ‘எம்ஜிஆர்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சுந்தர்,சி இயக்கத்தில் விஷால் நடித்த இன்னொரு படமான ‘ஆம்பள’ படமே கடந்த வருடம் பொங்கலுக்கே வெளியாகிவிட்டது.

5. இடம் பொருள் ஏவல் : ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி மீண்டும் நடித்த படம். அதோடு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வைரமுத்து முதன்முதலாக பாடல்கள் எழுதியிருக்கும் படம் என்பதால், கூடுதல் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இப்படமும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவன தயாரிப்புதான். இப்படத்திற்குப் பிறகு, மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஆரம்பிக்கப்பட்ட ‘தர்மதுரை’ படமே மளமளவென ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்த வருடத்தில் இந்த இரண்டு படங்களுமே நிச்சயம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6. வா டீல் : ரத்தின சிவா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த இந்த ஆக்ஷன் படம் ரிலீஸுக்குத் தயாராகி 2 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இப்படத்திற்குப் பிறகு அஜித்துடன் அருண் விஜய் இணைந்த நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் வெளிவந்தே ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இயக்குனர் ரத்தின சிவாவும், விஜய் சேதுபதியை வைத்து ‘றெக்க’ படத்தின் படப்பிடிப்பைத் துவங்கிவிட்டார். இப்போது ‘வா டீல்’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் சூழல் உருவாகியிருக்கிறது.

7. மெல்லிசை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி, ரிலீஸாகாமல் நிலுவையில் இருக்கும் இன்னொரு படம்தான் மெல்லிசை. மியூசிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகியவற்றோடு இந்த மெல்லிசையும் இந்த வருட ரிலீஸாக இருக்கும்.

8. விஸ்வரூபம் 2 : இப்படம் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்விக்கான பதில் நிச்சயம் கமலிடம் மட்டுமே உள்ளது. இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷனில் இருப்பதாக நீண்டநாட்களாகக் கூறப்பட்டு வரும் ‘விஸ்வரூபம் 2’ இந்த வருடம் வந்தால் நன்றாக இருக்கும் என்பதே உலகநாயகன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு.

9. ரெண்டாவது படம் : ‘தமிழ்ப்படம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சி.எஸ்.அமுதனின் 2வது படம்தான் இந்த ‘ரெண்டாவது படம்’. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தனது சுவாரஸ்யமான கலாய்த்தல் காட்சிகள் மூலம் ஒரு கை பார்த்த இயக்குனர் படம் என்பதால், அவரின் அடுத்த படைப்பிற்கு எதிர்பார்ப்பிருந்தது உண்மை. ஆனால், இப்போது இப்படி ஒரு படம் இருப்பதையே ரசிகர்கள் மறந்தவிட்டனர் என்பதே உண்மை. அதை இந்த வருடம் மாற்றிக்காட்டும் என நம்புவோம்!

இது முக்கியப் படங்களின் பட்டியல் மட்டுமே. இன்னும் ரிலீஸாகாமல் இருக்கும் சிறிய பட்ஜெட் படங்களை பட்டியலிட்டால், எண்ணிக்கை முடிவு பெறாமல் நீண்டுகொண்டே இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;