மீண்டும் இணையும் விஷால், முத்தையா!

மீண்டும் இணையும் விஷால், முத்தையா!

செய்திகள் 10-May-2016 10:54 AM IST VRC கருத்துக்கள்

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய முத்தையாவின் அடுத்த படம் 'மருது'. ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ சார்பில் அன்புச்செழியன் தயாரித்துள்ள இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் விஷால் பேசும்போது,

‘‘தமிழில் ‘மருது’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘ராயுடு’ என்ற பெயரிலும் இப்படம் இம்மாதம் 20-ஆம் தேதி வெளியாகிறது. நான் நடித்த ‘சண்டைக்கோழி’ படம் இன்றும் திருவிழா சமயங்களில் கிராமங்களில் திரையிடுவதாக விநியோகஸ்தர்கள் சொல்லுவார்கள். அதைபோல இந்த 'மருது' படம் என்னை நகரம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு சேர்க்கும் படமாக அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தினை இப்படத்தில் எனக்கு தந்துள்ளார் இயக்குனர் முத்தையா.

'அவன் இவன்' படத்திற்குப் பிறகு என்னை முழுமையாக அர்ப்பணித்து நடித்த படம் இது. ஒரு காமெடியனாக எல்லோருக்கும் நன்கு தெரிந்த சூரி இப்படம் மூலம் சிறந்த குணசித்திர நடிகராகவும் வலம் வருவார். வில்லனாக நடித்துள்ள ஆர்.கே. சுரேஷ். வெறித்தனமாக நடித்துள்ளார். நாங்கள் இருவரும் நடித்துள்ள கிளைமேக்ஸ் காட்சியில் அவருடைய நடிப்பு பேசப்படும். ஸ்ரீதிவ்யாவுடன் நான் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் படம் இது. கதாநாயகன் யாராக இருந்தாலும் இயக்குனர் முத்தையா அடுத்து இயக்கும் படத்தை எங்களது பட நிறுவனம் தான் தயாரிக்கும்.
.
திருட்டு விசிடியை தடுக்க நான் ஒருவன் தான் இன்றுவரை தனியாளாக போராடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய படத்திற்காக மட்டுமல்ல,எல்லா நடிகர்களுக்காகவும் தான் நான் போராடுகிறேன், பேசுகிறேன். இம்மாதம் 20 ஆம் தேதி ‘மருது’ வெளியாகிறது. கண்டிப்பாக திருட்டு விசிடி வெளியிடுவார்கள். நான் நிச்சயமாக என் நண்பர்களுடன் களமிறங்குவேன்.
திருட்டு விசிடி களைக் கண்டுபிடித்தால் நிச்சயமாக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க செய்வேன். நான் போராடுவதை போல எல்லோரும் ஒரு குழுவாக இணைந்தால் திருட்டு விசிடியை தடுக்க முடியும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;