24 - விமர்சனம்

கண்டிப்பாக ‘Watch’சலாம்!

விமர்சனம் 6-May-2016 11:39 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Vikram Kumar
Production : 2D Entertainment
Starring : Suriya, Samantha Ruth Prabhu, Nithya Menen
Music : A. R. Rahman
Cinematography : Tirru
Editing : Prawin Pudi

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ‘டைம் டிராவல்’ கான்செப்ட் படம். இந்தமுறை கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில், முன்னணி ஹீரோ நடிக்க, ஹிட் இயக்குனரின் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கிறது. நொடிக்கு நொடி ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தியுள்ளதா சூர்யாவின் ‘24’?

கதைக்களம்

இரட்டையர்களில், தம்பி சேதுராமன் (சூர்யா) ஒரு சயின்டிஸ்ட். காலத்தை கடக்கும் ‘டைம் டிராவல் வாட்ச்’ ஒன்றை தன் ஆராய்ச்சி மூலம் அவர் உருவாக்குகிறார். அந்த வாட்ச்சை அபகரித்து, உலகையே ஆள ஆசைப்படும் அண்ணன் ஆத்ரேயா (சூர்யா), சேதுராமனின் ஆராய்ச்சிக்கூடத்திற்கு தன் படை பட்டாளங்களுடன் வருகிறார். ஆத்ரேயாவுடன் நடக்கும் போராட்டத்தின் இறுதியில், தான் கண்டுபிடித்த வாட்ச்சை ஒரு பெட்டிக்குள் வைத்து, அதை தன் குழந்தையுடன் சேர்த்து, ரயிலில் பயணிக்கும் பெண் ஒருவரிடம் (சரண்யா பொன்வண்ணன்) ஒப்படைத்துவிட்டு தப்பிக்க முயலுகிறார். ஆனாலும், அண்ணன் ஆத்ரேயா கையால் கொலை செய்யப்படுகிறார் சேதுராமன்.

வாட்ச் உள்ள பெட்டியைத் திறக்கும் சாவி அண்ணன் ஆத்ரேயா கையில்; பெட்டி, தம்பி சேதுராமன் குழந்தையிடம்... சுமார் 26 வருடங்களுக்குப் பிறகு பெட்டி இருக்கும் இடத்திற்கு சாவி வந்து சேர்கிறது. அது எப்படி? அதன்பிறகு என்னென்ன நடக்கின்றன என்பதே பரபரப்பான ‘24’.

படம் பற்றிய அலசல்

‘டைம் டிராவல்’ கதைகளில், காலத்தைக் கடப்பதற்காக பெரும்பாலும் பெரிய பெரிய இயந்திரங்களே படங்களில் காட்டப்படும். அதை தவிர்த்து, ரொம்பவும் எளிமையாக, ரசிகர்களுக்குப் புரியும்படி ஒரு வாட்ச்சையே முக்கியப் பொருளாக பயன்படுத்திய விதத்தில் ஒரு கதாசிரியராக இயக்குனர் விக்ரம்குமார் பெரிதாக ஜெயித்திருக்கிறார். ‘டைம் டிராவல்’ விஷயத்தை அற்புதமாகக் கையாண்டு, திரைக்கதையில் ஆங்காங்கே உபோயகப்படுத்தியிருக்கும் ‘டவிஸ்ட்’கள் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும்.

சிக்கலான கான்செப்ட்டாக இருந்தாலும், ‘டெக்னிக்கலாக’ அதைச் சொல்லி ரசிகர்களை குழப்பாமல், எளிய காட்சிகள் மூலம் புரிய வைக்க முயற்சித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். அதற்கு மிகப்பெரிய ஒத்துழைப்பைக் கொடுத்திருக்கின்றன படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள். குறிப்பாக படத்தின் முக்கிய காட்சிகளுக்கான விஷுவல் எஃபெக்ட்ஸ் உலகத்தரம். கிராபிக்ஸ் என்பது தனித்துத் தெரியாத அளவிற்கு பிரமாதமாக உருவாக்கியிருக்கிறார்கள். கிராபிக்ஸிற்கு அடுத்தபடியாக படத்தின் கலை வடிவமைப்பு அற்புதம்! ஒளிப்பதிவும், ரஹ்மானின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளன.

படத்தின் பலவீனம் என்று பார்க்கத் தொடங்கினால், முதலில் உறுத்தியது வசனங்கள்தான். நாயகன், நாயகிக்கான காதல் காட்சிகளில் ஒரே டயலாக்கை பலமுறை ரிப்பீட் செய்து ரசிகர்களை சோதித்திருக்கிறார்கள். அதேபோல், டைம் டிராவல் விஷயங்களை ரசிகர்களுக்குப் புரிய வைப்பதற்காக ஒரே காட்சியை இரண்டு மூன்று தடவை காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அந்த காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதேபோல் ரஹ்மானின் பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், படத்தின் ஓட்டத்திற்கு கொஞ்சம் தடையாக அமைந்திருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

வாவ்... சூர்யா! 3 வேடங்கள்... அதில் 5 விதமான கெட்அப்கள். நிச்சயமாக அவரின் கேரியரில் இப்படத்திற்கு தனி இடம் உண்டு. சேதுராமன் மூலம் பரிதாபத்தை ஏற்படுத்தும் சூர்யா, வில்லன் ஆத்ரேயா மூலம் பயம் காட்டுகிறார். வழக்கம்போல் எனர்ஜியான, இளமையான சூர்யாவாக மணி. 3 கேரக்டர்களிலும் 3 விதமான பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி என அசத்தியிருக்கிறார். காதல், சென்டிமென்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் சூர்யா. மொத்த படத்தையும் தாங்கி நிற்பது இந்த மூன்று சூர்யாக்களே!

கதையின் மையக்கருவிற்கு ஹீரோயின் கதாபாத்திரம் அவசியமில்லையென்றாலும், டைம் டிராவல் விஷயங்களை புரிய வைக்கும் காட்சிகளுக்காக சமந்தா பயன்படுத்தப்பட்டிருக்கிறார். தனது துறு துறு நடிப்பின் மூலமும், அசரடிக்கும் அழகின் மூலமும் ரசிகர்களை வசீகரித்திருக்கிறார் சமந்தா. ஆனால், ‘க்ளோசப்’ காட்சிகள் மட்டும் அவருக்கு திருஷ்டிப் பொட்டாக அமைந்துவிட்டன.

அம்மா சரண்யா பொன்வண்ணன்... எத்தனை படத்தில் பார்த்தாலும் சலிக்காத, பாசக்கார அம்மா. தன் பாசத்தை மகன் சூர்யாவிடம் விளக்கும் ஒரு காட்சி போதும்... எந்த கல் நெஞ்சமும் கரைந்துவிடும். சல்யூட் பெர்ஃபாமென்ஸ்! காமெடியனாக ஒன்றிரண்டு காட்சிகளில் தலைகாட்டி மறைகிறார் சத்யன். கிரிஷ் கர்னாட்டிற்கு பெரிய கேரக்டர் எதுவும் இல்லை. சார்லிக்கும் ஒரே ஒரு காட்சிதான். மற்றபடி, ஆத்ரேயாவின் வலதுகரமாக ‘மித்ரன்’ கேரக்டரில் நடித்திருப்பவருக்கு நல்ல வாய்ப்பு. நன்றாகவே செய்திருக்கிறார்.

பலம்

1. 3 சூர்யாக்களின் அதகளமான பெர்ஃபாமென்ஸ்.
2. உயர்தர டெக்னிக்கல் விஷயங்கள், குறிப்பாக விஷுவல் எஃபெக்ட்ஸின் பங்களிப்பு
3. படத்தின் முக்கிய சில ட்விஸ்ட்கள்

பலவீனம்

1. ரிப்பீட் வசனங்கள்
2. திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்கு கொஞ்சம் தடையாக அமைந்துவிட்ட பாடல்கள்

மொத்தத்தில்...

ஒரு மாஸ் ஹீரோவை வைத்து, ஏதோ ஒரு மசாலா படத்தை கொடுத்து வெற்றிபெற முயலாமல், இந்திய சினிமாவில் அதிகம் கையாளப்படாத ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, அதை சுவாரஸ்யமான படமாக கொடுத்த விதத்தில் இயக்குனர் விக்ரம்குமார் தனித்து நிற்கிறார். பெரிய தடங்கல்கள் எதுவுமின்றி 2.40 மணி நேரம், சுவாரஸ்யமாகச் சுழன்றிருக்கிறது இந்த ‘24’ கடிகாரம்!

ஒரு வரி பஞ்ச் : கண்டிப்பாக ‘Watch’சலாம்!

ரேட்டிங் : 6.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;