‘24’ இயக்குனர் விக்ரம்குமார் சிறப்புப் பேட்டி!

‘24’ இயக்குனர் விக்ரம்குமார் சிறப்புப் பேட்டி!

கட்டுரை 3-May-2016 3:47 PM IST Chandru கருத்துக்கள்

அலை, யாவரும் நலம் படத்திற்குப் பிறகு ‘24’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் விக்ரம்குமார். இந்தியப் படங்களில் மிகவும் அரிதாக கையாளப்படும் ‘டைம் டிராவல்’ கதையைத் தேர்ந்தெடுத்திருப்பதோடு, படத்தில் சூர்யாவை வித்தியாசமாகப் பயன்படுத்தியிருப்பதும் படம்மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மே 6ஆம் தேதி ரிலீஸாகும் தன் படத்திற்காக பரபரப்புடன் காத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் விக்ரம்குமாருடன் ஒரு சிறப்புப்பேட்டி.

தெலுங்கில் சூப்பர்ஹிட் வெற்றியைக் கொடுத்துவிட்டு, தமிழுக்கு வந்ததற்கு என்ன காரணம்?

பெரிய காரணம் எதுவும் இல்லை. தெலுங்கில் ‘மனம்’ படத்தை இயக்க வாய்ப்பு வந்ததைப்போல, தமிழில் ‘24’ படத்தை இயக்கும் வாய்ப்பு அமைந்தது... அவ்வளவுதான்!

‘24’ படத்துக்கான ஐடியா எப்போது தோன்றியது?

‘யாவரும் நலம்’ படம் இயக்கும்போதே எனக்கு ‘24’ படத்திற்கான கரு மனதில் தோன்றியது. அப்போதிலிருந்தே அதை படமாக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. இப்போது அது கைகூடியிருக்கிறது.

‘24’ ஸ்கிரிப்டிற்கு சூர்யாவை தேர்வு செய்தது எதனால்?

24 வயதிலிருந்து 60 வயது வரை மொத்தம் மூன்று விதமான கேரக்டர்களில் ‘24’ ஸ்கிரிப்டின் நாயகன் தோன்ற வேண்டும். என்னைப் பொறுத்தவரை அதற்குப் பொருத்தமான ஒரே நடிகர் சூர்யா மட்டுமே. அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர். அதனாலேயே ‘24’ படத்திற்காக அவரை அணுகினேன்.

சூர்யாவின் அந்த 3 கேரக்டர்கள் பற்றி...?

மூன்று கேரக்டர்களுக்கும் மூன்றுவிதமான தோற்றங்கள் என்பது மட்டுமல்லாமல், பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி, மேனரிசம் என பெர்சனாலிட்டியிலும் பெரிய வித்தியாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 3 கேரக்டர்களில் மொத்தம் 5 விதமான கெட்அப்களில் சூர்யா தோன்றியிருக்கிறார். ஏற்கெனவே அவர் ஏகப்பட்ட தோற்றங்களில் நடித்து விட்டதால், இப்படத்திற்கான கெட்அப்களுக்காகவே பெரிதாக மெனக்கெட வேண்டியிருந்தது. அதற்காக ஸ்பெஷல் மேக்அப் விஷயங்களையும் பயன்படுத்தியிருக்கிறோம். அந்த 5 கெட்அப்களையும் படத்தில் பார்க்கும்போது சூர்யாவின் உழைப்பு உங்களை பிரமிக்க வைக்கும்.

மீண்டும் சமந்தா, நித்யாமேனன்... ஏதேனும் சிறப்புக் காரணம் உள்ளதா?

இரண்டு பேரும் சிறந்த நடிகைகள். அதுமட்டுமில்லாமல் இரண்டு பேருமே எனக்கு நெருக்கமான ஃப்ரென்ட்ஸ். எல்லாவற்றையும்விட இருவரும் மிகச்சிறந்த அழகிகள். இதற்குமேல் என்ன காரணம் வேண்டும்?

‘24’ புராஜெக்ட்டுக்குள் ஏ.ஆர்.ரஹ்மான்...?

‘மியூசிக் டைரக்டர்’னு யோசிக்கும்போதே முதலில் நினைவுக்கு வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான்தான். என்னைப் பொறுத்தவரை உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் அவரும் ஒருவர். ‘24’ படம் அறிவியல் சார்ந்த ‘டைம் டிராவல்’ படம் என்பதால் இசையில் புதுமையும், இளமையும் அவசியமாக இருந்தது. அதனால், எங்கள் அத்தனை பேரின் முதல் சாய்ஸாகவும் ஏ.ஆர்.ரஹ்மானே இருந்தார்.

படத்தில் ‘VFX’ன் பங்கு?

‘24’ படத்தின் மிகச்சிறந்த அம்சமாக VFX-ன் பங்களிப்பு இருக்கும். மும்பையைச் சேர்ந்த ரிவா என்ற நிறுவனம் படத்திற்கான கிராஃபிக்ஸ் வேலைகளைச் செய்துள்ளது. அதோடு, CG பணிகளை சூப்பர்வைஸ் செய்வதற்காக பிரான்சிலிருந்து ஜூலியன் என்ற வெளிநாட்டுக்காரரும் வரவழைக்கப்பட்டார். ‘இது சிஜியால் உருவாக்கப்பட்டது’ என எந்தக் காட்சியையும் ரசிகர்கள் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பாக பணி செய்திருக்கிறார்கள்.

எடிட்டர் பிரவீன், ஒளிப்பதிவாளர் திருவின் பங்களிப்பு?

‘மனம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் பிரவீனுடன் இணைந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அவர் நம்பர் ஒன் எடிட்டர். அதனால்தான் அவரை இப்படத்திற்கும் தேர்வு செய்தேன். அதேபோல் திருவின் ஒளிப்பதிவும் அபாரம். இப்படத்திற்காக ஸ்பெஷல் லுக்கை அவர் கொடுத்துள்ளார். அவருடன் நான் பணிபுரியும் முதல் படம் இதுதான். ஆனால், இனி அவருடன் தொடர்ந்து பணிபுரிவேன். அந்தளவுக்கு ஜாலியாக பணிபுரிபவர் திரு.

மகாபாரதத்திலேயே ‘டைம் டிராவல்’ பற்றிய விஷயங்கள் இடம்பெற்றிருக்க, ஹாலிவுட்டைப் போல் இங்கே ‘டைம் டிராவல்’ குறித்து படம் எடுக்க யாரும் முன்வருவதில்லையே... ஏன்?

நிச்சயமாக இதற்கு ரசிகர்களை காரணமாக்க முடியாது. அவர்கள் இதுபோன்ற படைப்புகளை பெரிதும் எதிர்பார்க்கவே செய்கிறார்கள். அதற்கான முயற்சிகளை படைப்பாளிகள்தான் எடுக்க வேண்டும் என்பது என் கருத்து.

இரண்டே முக்கால் மணி நேரம் ‘24’ படத்திற்கு சாதகமா? பாதகமா?

ரசிகர்களைப் பொறுத்தவரை ‘Duration’ என்பது பெரிய விஷயமே அல்ல. கதை நன்றாக சொல்லப்பட்டால், படம் சுவாரஸ்யமாக நகர்ந்தால் நிச்சயமாக உட்கார்ந்து பார்ப்பார்கள். சுவாரஸ்யமே இல்லையென்றால் 10 நிமிட குறும்படத்தைக்கூட மக்கள் பார்க்க மாட்டார்கள். குவாலிட்டியாக இருந்தால் நிச்சயம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்ப்பதற்கு மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

‘மனம்’ படத்தைப்போல் சிவகுமார், சூர்யா, கார்த்தியை வைத்து தமிழில் படம் இயக்கும் எண்ணம் ஏதேனும் இருக்கிறதா?

கண்டிப்பாக அந்த ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால் அது ‘மனம்’ படமாகவோ, அல்லது அதைப்போன்றோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மூவருக்காகவும் புதிய கதைக்களம் ஒன்றை யோசிக்க வேண்டும்.

அல்லு அர்ஜுனுடன் இணையும் தெலுங்குப் படம்...?

இப்போதைக்கு பெரிதாக அதைப்பற்றி சொல்ல முடியாது. அது ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - டிரைலர்


;