மருது - இசை விமர்சனம்

மருது - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 30-Apr-2016 12:24 PM IST Chandru கருத்துக்கள்

‘குட்டிப்புலி’யில் ஜிப்ரான், ‘கொம்பனி’ல் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பாடல்களைத் தந்த இயக்குனர் முத்தையா விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மருது’வுக்காக டி.இமானுடன் கைகோர்த்திருக்கிறார். இமானின் நாட்டுப்புற பாடல்கள் எப்படி?

சூறாவளிடா...
பாடியவர் : ஜினேஷ் பாபு
பாடலாசிரியர் ; யுகபாரதி


மிரட்டும் உறுமி இசையுடன் ஆரம்பிக்கும் இப்பாடல், ‘கொம்பனி’ல் இடம்பெற்ற ‘கம்பிக்கர வேட்டி...’ பாடலை நினைவுபடுத்துகிறது. ஒருவேளை, படத்தில் இப்பாடலும் ஹீரோவுக்கான பில்டப் பாடலாக இடம்பெற்றிருக்கலாம். ஏற்கெனவே இதுபோன்ற பாடல்களை நாம் நிறைய படங்களில் கேட்டிருப்பதால் பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை. ‘நிமிர்ந்து நின்னா கருது... நேர்மையின்னா மருது’ என ஹீரோவின் குணத்தை வரிகள் மூலம் ரசிகர்களுக்கு கடத்த முயற்சி செய்திருக்கிறார் யுகபாரதி. ஆவரேஜ் ரகம்!

ஒத்த சட ரோசா...
பாடியவர் : சாய் சரண், ஏவி பூஜா
பாடலாசிரியர் ; யுகபாரதி


சாய் சரணின் துள்ளலான குரலில் ஒலிக்கிறது இந்த ‘பெப்பி’ ரகப் பாடல். ஸ்ரீதிவ்யாவை நினைத்து விஷால் பாடும் இந்த காதல் பாடலின் சரணம் வித்தியாசமாக இருந்தாலும், பல்லவி ஏற்கெனவே இமான் இசையில் கேட்ட பாடல்களை நினைவுபடுத்துகிறது. கிராமத்து பாமரனின் கவிதைபோல் இருக்கிறது யுகபாரதியின் வரிகள். காட்சிகளோடு பார்க்கும்போது கூடுதல் உற்சாகம் தரலாம்.

கருவக்காட்டு கருவாயா...
பாடியவர் : வந்தனா ஸ்ரீனிவாசன், ஜித்தின் ஜெயமூர்த்தி
பாடலாசிரியர் ; வைரமுத்து


ஆல்பத்தின் அசத்தலான மெலடிப் பாடல் என்று இதை தாராளமாகச் சொல்லலாம். முத்தையாவின் முந்தைய இரண்டு படங்களிலும் இதேபோன்ற பாடல் ஒலித்திருந்தாலும், இந்த ‘கருவக்காட்டு கருவாயா’வும் கேட்டவுடன் பிடித்துப்போகிறது. காரணம், வந்தனா ஸ்ரீனிவாசனின் தேன் குரலும், வைரமுத்துவின் மண்வாசம் மாறாத வரிகளும்தான். குத்து இசைக்கு பேர்போனவர் என்பதால் இமான் இப்பாடலில் புகுந்து விளையாடியிருக்கிறார்.

அக்கா பெத்த ஜக்காவண்டி...
பாடியவர் : அனிருத் ரவிச்சந்தர், நிரஞ்சனா ரமணன்
பாடலாசிரியர் ; யுகபாரதி


அனிருத் குரலில் குத்துப்பாடல் எனும்போதே கேட்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது இந்த ‘அக்கா பெத்த ஜக்காவண்டி’. எதிர்பார்த்தபடியே எனர்ஜியாக ஒலித்து உற்சாக ஆட்டம் போட வைக்கிறது பாடலின் இசையும், பாடகர்களின் குரலும். அனிருத்திற்கு இணையாக அதிரடியாகப் பாடி அசத்தியிருக்கிறார் நிரஞ்சனா ரமணன். பி அன்ட் சி ரசிகர்களின் பல்ஸ் பிடிக்கும் பாடல்!

இந்த 4 பாடல்களோடு, ‘மருது... மருது...’ என்ற தீம் இசையும், இரண்டு பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் ‘மருது’ ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. வித்தியாச முயற்சிகள் எதுவும் இந்த ஆல்பத்தில் செய்யப்படவில்லை. இந்தக் கதைக்கு இந்தப் பாடல்கள் போதும் என இயக்குனரும், இசையமைப்பாளரும் முடிவு செய்துள்ளதற்கு ரசிகர்களிடம் எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை. ‘கருவக்காட்டு கருவாயா’ தவிர மற்ற பாடல்களில் பெரிய சுவாரஸ்யம் எதுவுமில்லை. இமானின் ஆவரேஜ் ஆல்பமாகவே ஒலிக்கிறது இந்த ‘மருது’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;