ஃப்ளாஷ்பேக் : தமிழ்சினிமாவில் நீதிமன்றம்!

ஃப்ளாஷ்பேக் : தமிழ்சினிமாவில் நீதிமன்றம்!

கட்டுரை 27-Apr-2016 2:49 PM IST Chandru கருத்துக்கள்

முதல்முறையாக வக்கீல் யூனிஃபார்ம் அணிந்திருக்கும் உதயநிதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மனிதன்’ படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கிறது. ‘என்றென்றும் புன்னகை’ அஹமது இயக்கியிருக்கும் இப்படம், ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் ரீமேக். நீதிமன்றத்தையும் அதைச் சார்ந்த விஷயங்களையும் கதைக்களமாகக் கொண்டுள்ள ‘மனிதன்’ படம் இந்த வாரம் வெளியாவதை முன்னிட்டு, இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இதேபோன்ற கதைக்களத்தை மையமாக வைத்து ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்ட 5 தமிழ் படங்களை பின்னோக்கிப் பார்க்கலாம்.

1. கௌரவம் (1973)

சிவாஜியின் கேரியரில் பெரிதும் பேசப்பட்ட படங்களில் இந்த கௌரவத்திற்கும் முக்கிய இடமுண்டு. ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் இயக்கிய இப்படத்தில், ரஜினிகாந்த் என்ற பிரபல வக்கீலாகவும், அவரிடம் ஜுனியராகப் பணிபுரியும் கண்ணனாகவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் சிவாஜி. கொலை ஒன்றைச் செய்த குற்றவாளி ஒருவனை நிரபராதி என நிரூபிக்க ரஜினிகாந்த் களத்தில் குதிக்க, நியாயத்தை மீட்டெடுப்பதற்காக அதே வழக்கில் கண்ணனும் ஆஜராவார். இந்த வழக்கில் யார், எப்படி ஜெயிக்கிறார்கள்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ். ‘நீயும் நானுமா... கண்ணா நீயும் நானுமா...?’ என்ற பாடலை இப்போது கேட்டாலும் சிவாஜியின் மிரட்டலான நடிப்பு கண்முன் வந்துபோகும். அந்தகாலத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படம் இது! இப்போதும் தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகும்.

2. விதி (1984)தெலுங்கில் வெற்றிபெற்ற ‘நியாயம் காவாலி’ படத்தின் தமிழ் ரீமேக்தான் விதி. கே.விஜயன் இயக்கிய இப்படத்தில் மோகன், பூர்ணிமா, சுஜாதா, ஜெய்சங்கர் ஆகியோருடன் பாக்யராஜும் கெஸ்ட்ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் கதைப்படி, பிரபல வழக்கறிஞர் ஜெய்சங்கரின் மகன் மோகன் ஒரு ப்ளே பாய். தான் சந்திக்கும் அழகான பெண்களை காதல் வலையில் விழ வைத்து, அவர்களை ஏமாற்றி, தன் ஆசையைத் தீர்த்துக்கொள்வதே இவரின் முக்கிய வேலை. இந்த சதியில் பூர்ணிமாவும் தெரியாமல் சிக்கி, மோகனால் கற்பமாக்கப்படுகிறார். தன் குழந்தைக்கு அப்பா மோகன்தான் என்பதை நிரூபிக்க வக்கீல் சுஜாதாவிடம் தஞ்சமடைகிறார். தன் மகனை விடுவிக்க ஜெய்சங்கர் ஆஜராகிறார். முடிவில் ஜெயித்தது பாசமா? நியாயமா? என்பதே படத்தின் கதை. ‘டைகர்’ தயாநிதி என்ற லாயர் கேரக்டரில் ஜெய்சங்கர் நடிப்பில் அசத்தியிருப்பார். சுஜாதாவுக்கும் இப்படம் நல்ல பெயரை வாங்கித் தந்தது. ஆரூர் தாஸின் வசனங்கள் படத்திற்குப் பெரிய பலம். இதுவும் மோகன் கேரியரில் ஹிட் படம்தான்!

3. பாசப்பறவைகள் (1988)அண்ணன், தங்கை பாசத்தை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட இப்படமும் நீதிமன்றத்தை களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான். அண்ணனாக சிவகுமாரும், தங்கையாக ராதிகாவும் பாசத்தை பொழிந்து தள்ளியிருப்பார்கள். இவர்களோடு மோகன், லக்ஷ்மி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் இடம்பெற்ற ‘தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே...’ பாடல் சூப்பர்ஹிட் ரகம். பூம்புகார் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் கலைஞர் கருணாநிதி. இயக்கம் கொச்சின் ஹனீபா (சலீம் அஹமது கோஷ்). பிரச்சனை ஒன்றில், ராதிகாவின் கணவர் மோகன் கொலை செய்யப்படுகிறார். அந்தப்பழி சிவகுமார் மீது விழ, தன் அண்ணனையே தண்டிக்கக் களமிறங்குகிறார் வக்கீல் ராதிகா. ராதிகாவிற்கு எதிராக இன்னொரு வக்கீலும் சிவகுமாரின் மனைவியுமான லட்சுமி ஆஜராகிறார். தன் கணவன் மீது விழுந்த கொலைப்பழியை லட்சுமி எப்படி நீக்குகிறார் என்பதே இப்படத்தின் பரபர இறுதிக்காட்சி.

4. பிரியங்கா (1994)‘தாமினி லைட்னிங்’ பாலிவுட் படத்தை தமிழில் ‘பிரியங்கா’வாக இயக்கினார் நீலகண்டா. பணக்காரரான ஜெயராம், ரேவதியை காதலித்து திருமணம் செய்கிறார். அவரின் தம்பியும், அவருடைய நண்பர்கள் சிலரும் வேலைக்கார பெண் ஒருவரை கற்பழித்துவிட, அதை நேரில் பார்த்துவிடுகிறார் ரேவதி. குற்றம் செய்தது தன் கணவனின் தம்பி என்பது தெரிந்தும், அவர்மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார் ரேவதி. இதனால் ஜெயராம் குடும்பத்தினரால் ரேவதி ஒதுக்கி வைக்கப்படுவதோடு, எந்த வழக்கிலும் தோற்காத லாயரான நாசரை இந்த வழக்கில் வாதாட வைக்கிறார்கள். தனது வாதத் திறமையால் ரேவதியை மனநிலை பாதிக்கப்பட்டவராக சித்தரிக்க வைத்து, ஜெயராமின் தம்பியை வழக்கிலிருந்து விடுவிக்கிறார் நாசர். பின்னர், அப்பாவி ரேவதிக்காக இந்த வழக்கை மீண்டும் தூசிதட்டுகிறார் வக்கீல் பிரபு. அவர் என்ன செய்தார் என்பதே இப்படத்தின் கதைக்களம். வக்கீல் ருத்ரைய்யாவாக நாசரும், அர்ஜுன் என்ற வக்கீலாக பிரபுவும் நடிப்பில் அசத்தியிருந்தார்கள்.

5. தெய்வத் திருமகள் (2011)யுடிவி தயாரிப்பில், விஜய் இயக்கிய இப்படத்தில் மனநிலை சரியில்லாதவராக விக்ரமின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. வெகுளி அப்பா விக்ரமிடமிருந்து, தன் பேத்தி நிலாவை பிரிப்பதற்காக புகழின் உச்சத்தில் இருக்கும் லாயர் நாசரை நாடுகிறார் விக்ரமின் மாமனார். விக்ரமிற்காக வழக்கில் ஆஜராகிறார் ஆரம்பநிலை வக்கீலான அனுஷ்கா. இறுதியில் விக்ரமின் மகளை அனுஷ்கா தன் வாதத் திறமையால் எப்படி மீட்கிறார் என்பதே இப்படத்தின் கதைக்களம். விக்ரமின் மகள் நிலாவாக பேபி சாரா நடிப்பில் அனைவரையும் விஞ்சினார். குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், பரபரப்பாக வாதம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், விக்ரமுடன் சைகையால் சாரா பேசும் காட்சிகள் தியேட்டரை கண்ணீர் குளமாக்கின. பாசத்தை முன்னிறுத்தும் படமென்றாலும், நீதிமன்றமே இப்படம் நகரும் முக்கிய கதைக்களம்.

வழக்கையும், வாதாடுவதையும் வைத்து கதைகள் உருவாக்கப்பட்ட மேற்கண்ட 5 படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது உண்மை. அந்தவகையில் இந்த வாரம் வெளிவரும் உதயநிதியின் ‘மனிதன்’ படமும் பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மனிதன் புதிய டிரைலர்


;