ஜோக்கர் - இசை விமர்சனம்

3

இசை விமர்சனம் 23-Apr-2016 11:45 AM IST Chandru கருத்துக்கள்

‘குக்கூ’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பில், அதன் பாடல்களுக்கும் முக்கியப் பங்குண்டு. தற்போது, ராஜு முருகன் இயக்கியிருக்கும் 2வது படமான ‘ஜோக்கர்’ படத்தின் பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. சந்தோஷ் நாராயணனின் ரயில் ஓசைக்குக் கிடைத்த பாராட்டு, ஷான் ரோல்டனின் ஜோக்கருக்கும் தொடர்ந்திருக்கிறதா?

என்னங்க சார் உங்க சட்டம்...
பாடியவர்கள் : அறந்தை பவா, கே.பெருமாள்
பாடலாசிரியர் : யுகபாரதி


சிங்கிள் டிராக்காக வெளிவந்து சமூக வலைதளங்கில் கவனம் பெற்ற இப்பாடலின் வரிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. எளிமையான இசை, வலிமையான வரிகள், வெள்ளந்தியான கம்பீரமான பின்னணி குரல்கள் என இப்பாடல் இந்த தேர்தல் சமயத்தில் மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்த முயன்றிருப்பது பாடலின் தனிச்சிறப்பு. ‘ஏய்...’ ‘பப்பா பப்பான்...’ போன்ற கோரஸ்கள் பாடலுக்கு மேலும் சுவாரஸ்யத்தைத் தந்திருக்கிறது. ‘சொகுசு காருல தெரு... விவசாயி தூக்குல...’ என பாடல் முழுவதும் வரிகளால் சாட்டை சொடுக்கியிருக்கிறார் யுகபாரதி. சுவாரஸ்யமான பாடல் என்பதையும் தாண்டி இன்றைய சூழலில் அவசியமான பாடல் என்பதே இப்பாடலின் தனித்துவம்.

ஓல ஓல குடிசையில...
பாடியவர்கள் : முருகவேல், கார்த்திகா வைத்தியநாதன்.
பாடலாசிரியர் : யுகபாரதி


80களில் கேட்டு மெய்மறந்த இளையராஜாவை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கிறார் ஷான் ரோல்டன். இந்த டூயட் பாடலுக்கு ஏகப்பொருத்தமாய் அமைந்திருக்கிறது முருகவேல், கார்த்திகா வைத்தியநாதனின் குரல்கள். மிருதங்கமும், ஹார்மோனியமும் இணைந்து நாட்டுப்புறத்திற்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கின்றது. காதலும், அன்பும் கரைந்தோடுகிறது வரிகளில். கேட்டுக்கொண்டே இருக்கலாம்!

ஜாஸ்மினு...
பாடியவர்கள் : சுந்தரய்யர்
பாடலாசிரியர் : யுகபாரதி


கொஞ்சம் ஜாலி கேலியான காதல் பாடல். இப்பாடலின் இசையும் அந்தக்காலத்தையே நினைவுபடுத்துகிறது. சுந்தய்யரின் குரல் பாடலுக்கு பெரிய பலம். ‘கழுத்தோரம் தேமல் இருக்கு... உன் காலெல்லாம் பித்த வெடிப்பு...’ என காதலியைப் பார்த்து காதலன் வர்ணிக்கும் வரிகள் வித்தியாசமாகவும், குறும்பாகவும் யுகபாரதியால் படைக்கப்பட்டிருக்கிறது. அப்பாவியின் அழகான காதலை அற்புதமாய் ரசிகனுக்குக் கடத்தியிருக்கிறது பாடலின் இசை.

செல்லம்மா...
பாடியவர்கள் : எம் லலிதா சுதா, பெருமாள், ஷான் ரோல்டன்
பாடலாசிரியர் : ரமேஷ் வைத்யா


வேற்றுமொழி ஆண் குரல் தாலாட்டுடன் துவங்குகிறது இந்த செல்லம்மா... அதனைத் தொடர்ந்து ஒலிக்கும் லலிதா சுதாவின் ‘செல்லம்மா... என் செல்லம்மா...’ என்ற குரல் கேட்பவர்களை மயங்கித் தூங்க வைக்கிறது. ஹிந்தியும், தமிழும் கலந்து தேனாக வந்து காதனில் பாய்கிறது இப்பாடல். குரல்களுக்கு வழிவிட்டு எளிமையான இசையை வழங்கியிருக்கும் ஷான் ரோல்டனுக்கும், கலாச்சாரம் மாறாத ரமேஷ் வைத்யாவின் வரிகளுக்கும் நன்றிகள் பல!

ஹல்லா போல்...
பாடியவர்கள் : கல்யாணி நாயர், ஷான் ரோல்டன்
பாடலாசிரியர் : யுகபாரதி


உணர்ச்சிகரமான பாடல்... கல்யாணி நாயரின் கம்பீரமான, அதேநேரம் பெண்மையின் இனிமை மாறாத குரலில் கேட்பது பேரானந்தம். ‘ஹல்லா... போல்...’ என பாடல் முழுவதும் அவ்வப்போது குரல் காட்டி மறைகிறார் ஷான் ரோல்டன். எனர்ஜியான இசையை பாடல் முழுவதும் ஒலிக்கவிட்டிருக்கிறார் ஷான். ‘உன் கனவும் என் கனவும் ஒன்றுதான்... வீதிக்கு வா என் தோழா’ என போராட்டக்களத்துக்கு அழைக்கின்றன வரிகள்.

இந்த 5 பாடல்ளோடு ‘மன்னர் மன்னன்...’ என்ற தீம் பாடலும் ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கிறது. ‘பாடல்களே வேண்டாம்...’ என ரசிகர்களின் ரசனை மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், ஒரு படத்தின் கதையோட்டத்தை பாடல்கள் மூலம் எத்தனை அழகாக பிரதிபலிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது ராஜு முருகனின் டீம். இசை, வரிகள், குரல்கள் என பாடல்களைத் தாங்கி நிற்கும் அத்தனை விஷயங்களும் அட்சர சுத்தம். இந்த ‘ஜோக்கர்’ இசை மூலம் ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிப்ஸி டீஸர்


;