வாகா - இசை விமர்சனம்

Wagah

இசை விமர்சனம் 19-Apr-2016 11:26 AM IST Chandru கருத்துக்கள்

தன் அறிமுகப்படமான ‘கும்கி’க்கு சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் டி.இமானுடன் ‘வாகா’ படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார் நடிகர் விக்ரம்பிரபு. கும்கி, வெள்ளக்காரதுரை படங்களுக்கு ஹிட் பாடல்களைத் தந்த டி.இமான் இந்த முறையும் அந்த மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறாரா?

சொல்லத்தான் நினைக்கிறேன்...
பாடியவர் : திவ்யாகுமார்
பாடலாசிரியர் : வைரமுத்து


ஹிந்துஸ்தானி ஸ்டைலில் கொஞ்சம் வித்தியாசமாக இப்பாடலை உருவாக்கியிருக்கிறார் டி.இமான். பொதுவாக இமானின் ஆல்பத்தில் இதுபோன்ற பாடல்களைக் கேட்பது அபூர்வம்தான். ‘ஆசை சொல்ல பாஷை வேண்டாம்’ என்ற வைரமுத்துவின் வரிகள், நம்மூர் நாயகன், வடநாட்டு நாயகியிடம் காதலைச் சொல்லத்துடிக்கும் ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது. டிரம்ஸ், கிடார், ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தி கொஞ்சம் ஜாலியான பாடலாக இதை உருவாக்கியிருக்கிறார் டி.இமான். திவ்யாகுமாரின் குரல் தனித்து தெளிவாக ஒலிக்கிறது.

ஏதோ மாயம் செய்கிறாய்...
பாடியவர் : ஜித்தின் ராஜ், விக்ரம் பிரபு
பாடலாசிரியர் : மோகன்ராஜ்


‘என் மனசுல நேத்து வரைக்கும் எதுமே இல்ல... ஆனா, அவ வந்ததுக்கப்புறம் இப்ப எடமே இல்ல... வெறுமையா இருந்த நான் முழுமையா ஆன ஒரு நிறைவு... சுத்தியும் பனியா இருந்தாலும் மனசு வேர்க்குது’ என்ற மோகன்ராஜின் கவிதை வரிகளை விக்ரம் பிரபு வாசிப்பதோடு ஆரம்பிக்கிறது இப்பாடல். இமானின் நீண்ட மெலடிப் பட்டியலில் இதற்கும் நிச்சயம் இடமிருக்கும். வெஸ்டர்ன் ஸ்டைலில் கொஞ்சம் அதிரடியாக இப்பாடலுக்கான இசையை உருவாக்கியிருந்தாலும், வரிகளும், ஜித்தின் ராஜின் குரலும் உணர்ச்சிகளை நெஞ்சுக்குள் மெலடியாகக் கடத்துகிறது. கேட்டவுடன் பிடிக்கும் ரகம்!

ஆசை காதல் ஆருயிரே...
பாடியவர் : வந்தனா ஸ்ரீனிவாஸன்
பாடலாசிரியர் : வைரமுத்து


ஆல்பத்தின் முதல் இரண்டு பாடல்களை ஆண் பாடகர்களின் சோலோவாக கொடுத்த இமான், இந்த 3வது பாடலை பெண் குரலில் ஒலிக்கும் சோலோவாக உருவாக்கியிருக்கிறார். வந்தனா ஸ்ரீனிவாஸனின் அற்புதமான ஹம்மிங்குடன் துவங்குகிறது இந்த மெலடி. கர்நாடிக் ஸ்ட¬லில் ஆரம்பிக்கும் இப்பாடல் போகப்போக இமானின் இசையில் நாம் ஏற்கெனவே எங்கோ கேட்ட பாடல் போன்ற உணர்வைத் தருகிறது.

ஆணியே புடுங்க வேணான்டா...
பாடியவர் : ஷெண்பகராஜ்
பாடலாசிரியர் : அருண்ராஜா காமராஜ்


வடிவேலுவின் பிரபல காமெடி டயலாக்கையே பாடலின் ஆரம்ப வரியாகத் தாங்கி நிற்கும் இப்பாடல், ஜாலி மூடில் அதிரடியாக ஒலிக்கிறது! ஆச்சரியம்... ஆல்பத்தின் இந்தப்பாடலுக்கும் ஸோலோ வாய்ஸ்தான்! இடையிடையே கோரஸ் மட்டும். குத்து இசையையும், ஹிப் ஹாப்பையும் கலந்துகட்டின இசையைக் கொடுத்திருக்கிறார் டி.இமான். கேட்பதற்கு பெரிய சுவாரஸ்யத்தைத் தரவில்லையென்றாலும், ஷெண்பகராஜின் குரலில் தொறிக்கும் எனர்ஜி பாடலை போரடிக்காமல் நகர்த்துகிறது. காட்சிகளோடு பார்க்கும்போது கூடுதல் உற்சாகத்தைத் தரலாம்.

இந்த நான்கு பாடல்களோடு, ‘லவ் ஃபார் அவர் நேஷன்’ என்ற தீம் இசையையும், ‘சொல்லத்தான் நினைக்கிறேன்...’, ‘ஆசை காதல் ஆருயிரே...’ பாடல்களின் கரோக்கி வெர்ஷனையும் தாங்கி வெளிவந்திருக்கிறது ‘வாகா’ ஆல்பம். புதிய முயற்சிகள் எதுவும் இல்லையென்றாலும் டி.இமானின் மெலடிகளுக்காக மட்டும் இந்த ‘வாகா’விற்கு ‘ஓகே’ சொல்லலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;