இறைவி - இசை விமர்சனம்

இறைவி

இசை விமர்சனம் 18-Apr-2016 4:13 PM IST Chandru கருத்துக்கள்

பீட்சா, ஜிகர்தண்டா படங்களைத் தொடர்ந்து ‘இறைவி’ மூலம் ஹாட்ரிக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும். மூன்றாவது முறையும் ஜெயித்திருக்கிறதா இந்த இளமைக் கூட்டணி?

1. ஒண்ணு ரெண்டு...
பாடியவர் : எஸ்.ஜே.சூர்யா
பாடலாசிரியர் : விவேக்


ஆல்பத்தின் முதல் பாடலே ரசிகர்களுக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. ஆம்... இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் போதைக் குரலில் வித்தியாசமாக ஒலிக்கிறது இந்த ‘ஒண்ணு ரெண்டு...’ பாடல். கிளாரிநெட், ஹார்மோனியம் என இப்பாடலுக்கு பயன்படுத்தியிருக்கும் இசைக்கருவிகள் நம்மை அந்தக்காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன. கொஞ்சம் வசன நடையில் இப்பாடலுக்கான வரிகளைத் தந்துள்ளார் விவேக். 3 நிமிடங்களே ஒலிக்கும் இந்தப் பாடலை எஸ்.ஜே.சூர்யா ஸோலோவாகப் பாட, இடையிடையே கோரஸ் மூலம் சுதி சேர்த்திருக்கிறார்கள். கதை நகரும் சூழலோடும், காட்சிகளோடும் பார்க்கும்போதுதான் இப்பாடலின் முழு வீரியம் ரசிகர்களுக்குக் கிடைக்கும்.

2. காதல் கப்பல்...
பாடியவர் : சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : முத்தமிழ்


ஸ்டரிங்ஸ், கிடாரைப் பயன்படுத்தி ‘ஜாஸ்’ டைப்பில் இப்பாடலை உருவாக்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பாடியிருப்பவரும் அவரே. இப்பாடலும் கேட்பதற்கு கொஞ்சம் அந்தக்கால ஸ்டைலில்தான் இருக்கிறது. ‘காலம் காலம் மாறும்... காதல் சாயம் ஊறும்...’ என பாடலின் வரிகளை ரொம்பவும் இயல்பாக எழுதியிருக்கிறார் முத்தமிழ்.

3. சொல்லத் துடிக்குது மனசு...
பாடியவர் : ஆர்.கே.சுந்தர்
பாடலாசிரியர் : முத்தமிழ்


விஜய்சேதுபதி, அஞ்சலி சம்பந்தப்பட்ட திருமணப் பாடலாக ‘இறைவி’யில் இது இடம்பெற்றிருக்கலாம். பாடலின் வரிகளை தமிழ்த் திரைப்படங்களின் தலைப்புகள் மூலமாக உருவாக்கியிருப்பது சற்று வித்தியாசம். தெரிந்து உருவாக்கினார்களா? அல்லது யதேச்சையாக அமைந்ததா எனத் தெரியவில்லை இப்பாடலும் 80களுக்கு முந்தைய காலகட்டத்தையே நினைவுபடுத்துகிறது. ஆர்.கே.சுந்தரின் குரலும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

4. துஷ்டா...
பாடியவர்கள் : மீனாக்ஷி, தீ
பாடலாசிரியர் : விவேக்


படத்தின் தலைப்பிற்கும், கதையின் மையக்கருவை பிரதிபலிக்கும் படத்தின் முக்கிய காட்சி ஒன்றிற்கும் அர்த்தம் கற்பிப்பதுபோல் இந்தப்பாடல் படத்தில் இடம்பெறலாம். மீனாக்ஷி, தீ இருவருமே பாடலின் தன்மையை உணர்ந்து வித்தியாசமான தொணியில் இப்பாடலைப் பாடியிருக்கிறார்கள். உடுக்கை ஒலிகள் அலற, மிரட்டும் வகையில் பின்னணி இசையைக் கொடுத்து பயமுறுத்தியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ‘நீதான் நான் துஷ்ட்டா... உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான்... நீதான் நான் துஷ்ட்டா... உன் பாவத்தின் சம்பளம் மரணம்தான்!’’ என ஆண்களைப் பார்த்து பெண் ஒருவர் மிரட்டுவதுபோல் வரிகளை உருவாக்கியிருக்கிறார் பாடலாசிரியர் விவேக்.

5. ஒத்தையில...
பாடியவர் : அந்தோணி தாசன்
பாடலாசிரியர் : மணி அமுதன்


நாட்டுப்புற பாடல் ஸ்டைலில், வரிகள் தெளிவாக ஒலிக்கும்படி ஒரே ஒரு சப்தத்தை மட்டும் இசையாக இப்பாடலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பாடல் வரிகளும், பாடியவரின் குரலும் தெள்ளத் தெளிவாக மனதில் இறங்குகிறது. காட்சிகளோடு பார்க்கும்போது கண்களில் நீரை வரவழைக்கலாம்.

6. மனிதி...
பாடியவர்கள் : பிருந்தா, அனந்து, சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : விவேக்


கடைசிப் பாடல் மூலம் ஆல்பத்திற்கு அழகு சேர்த்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ‘மனிதி... வெளியே வா...’ என பெண்களைப் பார்த்து அழைக்கும் குரல்களில் அத்தனை உணர்ச்சிகள். ‘மனிதன் என்ற சொல்லுக்குள் அடங்காதே பெண்ணே... உயரம் உனதேதான்... அமர்ந்தால் உயரம் தெரியாது... நிமிர்ந்தே வா பெண்ணே... மனிதி வெளியே வா...’ என அற்புதமான வரிகளைப் படைத்திருக்கிறார் கவிஞர் விவேக். விருதுக்குப் பரிந்துரைக்கலாம் ரகம் பாடல். நல்ல பாடல் தந்த சந்தோஷிற்கு நன்றி!

மொத்தத்தில்... கேட்டு குதூகலிக்கலாம் வகையில் ஒரு ஆல்பத்தை சந்தோஷ் நாராயணன் தரத் தவறியிருந்தாலும், கதைக்களத்திற்கேற்ற அர்த்தமுள்ள இசையையும், பாடல்களையும் தந்திருப்பதற்காக நிச்சயம் பாராட்டலாம். காட்சிகளோடு பார்க்கும்போது பாடலின் வீரியம் பெரிதாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;