நட்சத்திர கிரிக்கெட் ஹைலைட்ஸ்!

நட்சத்திர கிரிக்கெட் ஹைலைட்ஸ்!

கட்டுரை 18-Apr-2016 10:46 AM IST Chandru கருத்துக்கள்

ரஜினியின் ‘டாஸ்’, கமலின் ‘டிரம்ஸ்’, சூர்யாவின் ‘கப்’, விக்ரமின் ‘மெகா கேக்’ : நட்சத்திர கிரிக்கெட் ஹைலைட்ஸ்!

பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளான ‘நட்சத்திர கிரிக்கெட் போட்டி’யை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம். அறிவிக்கப்பட்டது போலவே ரஜினி, கமல் இருவரும் ஸ்டேடியத்திற்கு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். நேற்று, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடந்து முடிந்த இப்போட்டியின் சிற்சில ஹைலைட்ஸ் இங்கே உங்களுக்காக...

* இப்போட்டியை நேரில் வந்து கண்டுகளிப்பதற்காக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட, மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். தெலுங்கு நடிகர்கள் பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, ஸ்ரீகாந்த், மலையாள நடிகர்கள் மம்முட்டி, நிவின் பாலி, கன்னட நடிகர்கள் சுதீப், சிவராஜ் குமார் உட்பட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். தமிழ்திரையுலகைப் பொருத்தவரை ரஜினி, கமல், சூர்யா, விக்ரம், தனுஷ் கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், விஜய்சேதுபதி, ஜீவா, அருண் விஜய், விக்ராந்த், நாசர், பிரபு, கார்த்திக், ராம்கி, நகுல் உட்பட ஏராளமான நடிகர்களும், நடிகைகள் சமந்தா, தமன்னா, சினேகா, ஸ்ரேயா, நமீதா, கார்த்திகா, ராகுல் ப்ரீத் சிங், சுவாதி, ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் உட்பட பல நடிகைகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அதேபோல் இசையமைப்பாளர்கள் டிரம்ஸ் சிவமணி, ஸ்ரீகாந்த் தேவா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டு இசையமைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

* முதல்போட்டியில் திருச்சி டைகர்ஸ் & சென்னை சிங்கம்ஸ்’ அணியினர் மோதினர். இந்த போட்டியினை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ‘டாஸ்’ போட்டு துவக்கி வைத்தார். இப்போட்டியில் ‘சென்னை சிங்கம்ஸ்’ அணியினர் வெற்றிபெற்றனர். அதன்பிறகு ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியாக முதல் சுற்றுப் போட்டிகளும், அரை இறுதிப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

* இறுதிப்போட்டியில் ஜீவாவின் ‘தஞ்சை வாரியர்ஸ்’ அணி, சூர்யாவின் ‘சென்னை சிங்கம்ஸ்’ அணியினருடன் மோதினர். இப்போட்டியில் சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

* போட்டியின் நடுவே நடிகர்கள் விக்ரம், விஷால், கார்த்தி, மம்மூட்டி, வெங்கடேஷ், சுதீப் அனைவரும் பாரம்பரிய இசை வாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து வாத்தியக் கருவிகளை வாசித்து ரசிகர்களை மகிழ்வித்தனர்.

* அதேபோல் போட்டி முடிந்தபிறகு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து உலகநாயகன் கமலும் டிரம்ஸ் வாசிக்க அரங்கத்தில் இருந்த அனைவரும் உற்சாக கூக்குரலிட்டனர்.

* நேற்று நடிகர் விக்ரமின் பிறந்தநாள் என்பதால், ஸ்டேடியத்திற்கு மிகப்பெரிய கேக் ஒன்று வரவழைக்கப்பட்டிருந்தது. அனைத்து நடிக, நடிகையர்களுக்கு முன்பாக விக்ரமின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேக் வெட்டி முடிந்தபின் நடிகர் விக்ரம் பேசியதாவது ‘‘எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த, உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கும், எனது ரசிகர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். நான் ரசிக்கும் நடிகர்களுக்கு ரசிகனாகத் தான், நான் இங்கே வந்திருக்கிறேன். இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!’’ என நெகிழ்ந்தார்.

* நிகழ்ச்சியின் முடிவில் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் நன்றி தெரிவித்துப் பேசுகையில், ‘‘நாங்கள் இந்த நிகழ்ச்சியை துவங்கும் பொழுது நிறைய கேள்விகளை எதிர்கொண்டோம். அதையெல்லாம் மீறி இன்று இந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். அதற்கு நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். முக்கியமாக நடிகர் ரமணாவின் யோசனைதான் இந்தப் போட்டிக்கான தொடக்கம். அதற்காக அவருக்கு எங்கள் அனைவரது சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார், உலக நாயகன் கமலஹாசன் சார், விக்ரம் சார்,மம்முட்டி சார், பாலகிருஷ்ணா சார், வெங்கடேஷ் சார், சுதீப் சார், சிவராஜ்குமார் சார், திரையுலகின் மூத்த நட்சத்திரங்கள் மற்றும் எட்டு அணிகளின் கேப்டன்கள், ஸ்பான்சர்கள், புரொடக்‌ஷன் மேனேஜர்கள், ஐசரி கணேஷ் சார், டான்சர்ஸ், பாரம்பரிய இசைக்கலைஞர்கள், சென்னை கார்ப்ரேஷன், காவல்துறை, எல்லாவற்றிற்கும் மேலாக ரசிகர்கள், இவர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். சன் டிவி நிறுவனத்திற்கு எங்களது நன்றி. உங்கள் அனைவரது ஆசிகளுடன் நடிகர் சங்க கட்டடத்தினை சிறப்பாகக் கட்டுவோம் என உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறோம்!’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;