ஃபேன் (Fan) - விமர்சனம்

 வெறித்தனமான சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!

விமர்சனம் 15-Apr-2016 5:27 PM IST Top 10 கருத்துக்கள்

ஷாருக்கானுடன் ஷாருக்கானே மோதினால் எப்படி இருக்கும்...? அதுதான் ஃபேன்.

பார்ப்பதற்கு கிட்டத்தட்ட, பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆர்யன் கன்னா (ஷாருக்கான்) போலவே இருக்கும் டெல்லியைச் சேர்ந்த கௌரவ் (ஷாருக்கான்), தன் ஊரில் நடக்கும் ஸ்டேஜ் டிராமாவில் ஆர்யன் கன்னா போல் வேடமிட்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர். கௌரவ் ஆர்யன் கன்னாவின் வெறித்தனமான ரசிகரும் கூட... அப்படிப்பட்ட கௌரவ், ஆர்யன் கன்னாவின் பிறந்தநாளன்று அவரைச் சந்தித்து எப்படியாவது பேசிவிட வேண்டுமென டெல்லியிலிருந்து கிளம்பி மும்பைக்குச் செல்கிறார்.

பிறந்தநாளன்று, ஆர்யன் கன்னாவின் வீட்டு முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருக்க, கௌரவால் ஆர்யன் கன்னாவை நெருங்கவே முடியவில்லை. அதன் பின்பு, ஆர்யன் கன்னாவின் போட்டி நடிகர் ஒருவர், அவரை தவறாகப் பேச, கேரவனுக்குள் சென்று அந்த நடிகரை மிரட்டி ஆர்யன் கன்னாவிடம் மன்னிப்பு கேட்க வைத்து, அதை வீடியோவாகவும் எடுத்துவிடுகிறார். அந்த வீடியோவை ஆர்யன் கன்னாவுக்கு அனுப்ப, அதிர்ச்சியடையும் அவர் கௌரவை போலீஸில் சிக்க வைக்கிறார். பின்னர், ஸ்டேஷனில் ரகசியமாகச் சென்று கௌரவைப் பார்க்கு ஆர்யன், ‘எதற்காக இப்படிச் செய்தாய்?’ எனக் கேட்கிறார். ‘ஒரு ஐந்து நிமிடம் உங்களோடு பேச வேண்டும்... நான் உங்களின் மிகப்பெரிய ஃபேன்’ என கௌரவ் சொல்ல, ‘இது என் வாழ்க்கை... என் நேரம்... உனக்காகவெல்லாம் என்னால் அதை செலவிட முடியாது... நீ உன் இடத்திற்கே போய்விடு’ என அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறார்.

ஆர்யன் கன்னா தன்னை அவமானப்படுத்திவிட்டதாக நினைக்கும் கௌரவ், மெல்ல மெல்ல ‘சைக்கோ’வாக மாறுகிறார். அதன் பிறகு அவர் செய்யும் சில காரியங்கள் ஆர்யன் கன்னாவின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. அது என்ன? சினிமா ரசிகர்களுக்கு இப்படம் என்ன சொல்ல வருகிறது? என்பதே இந்த ஃபேன்.

சிம்பிளான சென்டிமென்டல் கதை. அதை விறுவிறுப்பாக மாற்றுவதற்காக ‘த்ரில்லரா’க உருவாக்கியிருக்கிறார்கள். பாலிவுட் சூப்பர்ஸ்டாராக நடித்திருக்கும் ஷாருக்கான், தன் நிஜ வாழ்க்கையை கதாபாத்திரத்தையே பிரதிபலித்திருக்கிறார். அத்தனை பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்தாலும், ஒரு கோடீஸ்வரர் வீட்டுத் திருமணத்தில் ஆடுவதற்கு பணம் வாங்கிவிட்டு, அவரிடம் திட்டு வாங்குவதுபோன்ற காட்சியில் நடித்திருப்பதற்கு ஒரு ‘கெத்து’ வேண்டும்.

படத்தின் முதல்பாதி விறுவிறுப்பாக பயணிக்கிறது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம்பாதியில் இல்லை என்பதே உண்மை. காரணம், சிற்சில லாஜிக் மீறல்களும், தேவையில்லாத க்ளைமேக்ஸ் சேஷிங் காட்சியும். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஓடும் ‘ஃபேன்’ படத்தில் ஒரு பாடல்கூட இல்லை, கதாநாயகியும் கிடையாது என்பது ஆச்சரியமான விஷயம். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்கியிருக்கிறார்கள். லாஜிக் விஷயங்களிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் பெரிதாக கவர்ந்திருக்கம் இந்த ஃபேன்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்துள்ளன. அதேபோல் ஷாருக்கானை, ஷாருக்கானே சேஷிங் செய்யும் காட்சிகளும் பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளன. இளம் ஷாருக்கானுக்கான மேக்அப், சிஜி வேலைகள் கச்சிதம்!

இரண்டு வேடங்களிலும் ஷாருக்கானின் நடிப்பு அட்டகாசம். ஆர்யன் கன்னாவைப் போல கௌரவ் நடித்து ஏமாற்றும் இடங்களிலும் சரி, க்ளைமேக்ஸில் கௌரவாக ஆர்யன் கன்னா நடிக்கும் இடத்திலும் சரி ஷாருக்கான் கைதட்டல்களை அள்ளியிருக்கிறார். படம் முழுக்க ஷாருக்கானின் ராஜ்ஜியம்தான்.

மொத்தத்தில்... இந்த ‘ஃபேன்’ வெறித்தனமான சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹேப்பி நியூ இயர் - 'நான்சென்ஸ் கி நைட்' வீடியோ சாங்


;