தெறி - விமர்சனம்

விஜய்யின் ஹிட் ஃபார்முலா!

விமர்சனம் 14-Apr-2016 6:38 PM IST Chandru கருத்துக்கள்

‘ராஜா ராணி’ படம் மூலம் அறிமுக இயக்குனராக முத்திரை பதித்த அட்லியின் இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்திருக்கும் ‘தெறி’ படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோவை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் இளம் இயக்குனர் அட்லி?

கதைக்களம்

தன் ஒரே மகள் நைனிகாவுடன், கேரளாவில் ஜோசப் குருவிலா என்ற பெயரில் அமைதியாக வாழ்ந்து வருகிறார் விஜய். நைனிகா படிக்கும் ஸ்கூல் டீச்சர் எமி ஜாக்ஸனுக்கும், விஜய்க்கும் நட்பு ஏற்படுகிறது. ஒரு சம்பவம் காரணமாக, எமி ஜாக்சன் சில ரவடிகள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அதில் விஜய்யும் உள்ளே வருகிறார். அப்போது அங்கிருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், விஜய்யை ஐ.பி.எஸ். டிரைனிங்கில் பார்த்ததாகக் கூற, விஜய் அதை மறுத்து அங்கிருந்து நழுவுகிறார். அதன் பிறகு விஜய் பற்றிய விவரங்களை எமி ஜாக்சன் நெட்டில் துலாவ, விஜயகுமார் என்ற ஐ.பி.எஸ். அதிகாரிதான் ஜோசப் குருவிலா என்பது தெரிய வருகிறது.

தான் ஒரு போலீஸ் என்பதை விஜய் ஏன் மறைக்கிறார்? நைனிகாவுக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்? விஜயகுமார் ஐ.பி.எஸ்ஸின் ஃப்ளாஷ்பேக் என்ன? என்பதே இந்த ‘தெறி’.

படம் பற்றிய அலசல்

அரதப்பழசான ஒரு கதையை கையிலெடுத்து, விஜய் ரசிகர்களையும், ஃபேமிலி ஆடியன்ஸையும் குறிவைத்து மாஸ் + சென்டிமென்ட் காட்சிகளை திறம்பட கையாண்டு ஒரு பொழுதுபோக்குப் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் அட்லி. அவரின் முயற்சிக்கு படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் பெரிய அளவில் கைகொடுத்துள்ளன. குறிப்பாக படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும். பாடல்களில் ஏமாற்றியுள்ள ஜி.வி.பிரகாஷ், சண்டைக்காட்சிகளிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும் அற்புதமான இசையை வழங்கி அசத்தியிருக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. சண்டைக் காட்சிகளில் அவரின் கேமரா பல கோணங்களிலும் ‘மாஸ்’ காட்டியிருக்கிறது. எடிட்டர் ரூபனின் பங்களிப்பும் பாராட்டிற்குரியது.

டெம்ப்ளேட் கதைக்களம், முக்கியக் காட்சிகளை முன்கூட்டியே யூகித்துவிடக்கூடிய திரைக்கதை அமைப்பு, படத்தின் ஓட்டத்திற்கு தடையாக இருக்கும் பாடல்கள் ஆகியவை ‘தெறி’க்கு மைனஸாக அமைந்துள்ளன. இந்த குறைகளையும் தவிர்த்திருந்தால், உண்மையில் பெரிதாக ‘தெறி’க்க விட்டிருப்பார் அட்லி.

நடிகர்களின் பங்களிப்பு

நிச்சயமாக விஜய் ரசிகர்களுக்கு ‘தெறி’ படம் சிறப்பு விருந்துதான். அதற்கு காரணம் விஜய்யின் அட்டகாசமான ஸ்கிரீன் பிரசென்ஸ். அறிமுகக் காட்சி மட்டுமின்றி, தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறார் விஜய். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் விஜய்யின் மெனக்கெடல்கள் அபாரம். கூடவே இப்படத்தில் ரொமான்ஸ், சென்டிமென்ட் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ். கொஞ்ச நேரமே வந்தாலும் சமந்தாவின் பங்களிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. பாடல்களுக்கு ஆடுவதோடு நின்றுவிடாமல் நடிக்கவும் செய்திருக்கிறார் சமந்தா. படத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் என்றால் நிச்சயமாக அது மீனாவின் மகள் நைனிகாதான். குழந்தைத்தனம் மாறாமல் அத்தனை இயல்பாக நடித்திருக்கிறார் நைனிகா. முதல் படத்திலேயே நடிப்பில் சென்சுரி அடித்திருக்கிறது இந்த க்யூட் பேபி!

மலையாள டீச்சராக வரும் எமி ஜாக்சனுக்கு பெரிய வேலை கொடுக்கப்படவில்லை. அவர் ஆடிய ஒரே ஒரு குத்துப்பாடலையும் வெட்டி, படம் முடிந்த பிறகு ஒட்டியிருக்கிறார்கள். சுனைனா ஒரு காட்சியில் தலைகாட்டி மறைகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இயக்குனர் மகேந்திரனின் வில்லன் கதாபாத்திரம் இடைவேளை சமயத்தில்தான் படத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. ‘அபாரம்’ எனச் சொல்லுமளவுக்கு இல்லையென்றாலும், கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார் மகேந்திரன். ‘மொட்டை’ ராஜேந்திரன் படம் முழுவதும் ஆங்காங்கே தலைகாட்டி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். விஜய்யின் அம்மாவாக ராதிகா அசத்தியிருக்கறார். பிரபு போலீஸ் யூனிஃபார்மில் வந்து போகிறார்.

பலம்

1. விஜய் + நைனிகா
2. ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங்
3. சண்டைக்காட்சிகள்

பலவீனம்

1. டெம்ப்ளேட் கதையும், எளிதில் யூகிக்கக் கூடிய திரைக்கதை அமைப்பும்
2. பாடல்கள்

மொத்தத்தில்...

ஒரு வித்தியாசமான படத்தை எதிர்பார்த்து வந்தால் ‘தெறி’ உங்களை ஆச்சரியப்படுத்தாது. மாறாக, ஒரு என்டர்டெயின்மென்ட் விஜய் படத்தை எதிர்பார்த்து வந்தால் நிச்சயமாக ‘தெறி’ உங்களை ஏமாற்றாது!

ஒரு வரி பஞ்ச் : விஜய்யின் ஹிட் ஃபார்முலா!

ரேட்டிங் : 5.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;