24 - இசை விமர்சனம்

24 - இசை விமர்சனம்

இசை விமர்சனம் 13-Apr-2016 11:48 AM IST Chandru கருத்துக்கள்

‘சில்லுன ஒரு காதல்’ படத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து மீண்டும் சூர்யாவின் ‘24’ படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதபோதும், பாடல்களுக்காகவே பெரிதும் பேசப்பட்ட படம் ‘சில்லுனு ஒரு காதல்’. இதனால் இக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘24’ படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள ‘காலம் என் காதலி’ என்ற பாடலின் சிங்கிள் டிராக் வெளிவந்து பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ள நிலையில், தற்போது ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற பாடல்களின் விவரங்களும் வெளிவந்துள்ளன. வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ள ‘24’ ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் விவரம் இதோ...

1. நான் உன்...
பாடியவர்கள் : அர்ஜித் சிங், சின்மயி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி


மெலடிப் பாடல்களுக்காகவே பாலிவுட்டில் பெரிதும் பேசப்படும் பாடகர் அர்ஜித் சிங்கின் குரலில் அற்புதமாக ஒலிக்கிறது இந்த ‘நான் உன்...’. அர்ஜித் சிங்குடன் இணைந்து பாடி இப்பாடலுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளார் சின்மயி. ஏற்கெனவே கேட்ட ஏதோ ஒரு பாடலைப்போல இருந்தாலும், கேட்டவுடன் மனதில் தங்குகிறது இப்பாடல். பாடல் முழுவதும் மெல்லிய இசையை ஒலிக்கவிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ஆர்.


2. மெய் நிகர...
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், சனா மொய்தத்தி, ஜோனிதா காந்தி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி


இன்றைய தலைமுறை இசைப்பிரியர்களை மனதில் வைத்து வித்தியாசமாக இப்பாடலை உருவாக்கியிருக்கிறார் ரஹ்மான். ‘என்னோடு நீ இருந்தால்...’ பாடல் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்ற சித் ஸ்ரீராமின் அதிரடிக்கும் குரலில் ஒலிக்கிறது இப்பாடல். கூடவே சனா மொய்தத்தி, ஜோனிதா காந்தியின் குரல்களில் ஒலிக்கும் சின்னச் சின்ன வார்த்தைகள் பாடலுக்கு மேலும் உற்சாகத்தைத் தூண்டுகின்றன.

3. புன்னகையே...
பாடியவர்கள் : ஹரிச்சரண், ஷாஷா திருப்பதி
பாடலாசிரியர் : வைரமுத்து


கிளாசிக் வகையறாவைச் சேர்ந்த இப்பாடலை ஹரிச்சரணும், ஷாஷா திருப்பதியும் இணைந்து ‘பாஸ்ட் பீட்’டில் பாடி அசத்தியிருக்கிறார். கர்நாடிக் இசையுடன் ஆங்காங்கே வெஸ்டர்னையும் கலந்து ஒலிக்கவிட்டிருக்கிறார் ரஹ்மான். வைரமுத்துவின் வரிகள் பாடலுக்கு மேலும் வலு சேர்த்துள்ளன. திரையில் பார்க்கும்போது பெரிய அளவில் கவனம் பெற வாய்ப்பிருக்கும் பாடல் இது.

4. ஆராரோ...
பாடியவர் : சக்திஸ்ரீ கோபாலன்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி


படத்தின் நாயகிகளில் ஒருவரான நதியாமேனன் தன் குழந்தைக்காகப் பாடும் தாலாட்டுப் பாடல் இது. தாயன்பின் உணர்வுகளை தன் குரல் மூலம் இழையோடவிட்டிருக்கிறார் சக்திஸ்ரீ கோபாலன். கார்க்கியின் வரிகளும், ரஹ்மானின் மெல்லிசையும் கேட்பவர்களைத் தாலாட்டுகிறது.

5. மை ட்வின் பிரதர்...
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணன், ஹ்ருதய் கட்டானி


ரஹ்மானின் இசையில், ஒரு பவர்ஃபுல் தீம் மியூசிக்கை கேட்டு நிறைய நாட்களாகிவிட்டது. அந்தக் குறையைத் தீர்த்துள்ளது இந்த ‘மை ட்வின் பிரதர்...’ தீம். வில்லன் சூர்யாவுக்கான பின்னணி இசையாக படத்தின் முக்கிய காட்சிகளில் பயன்படுத்தப்படலாம். அதிரடிக்கும் இசையுடன் ‘ஆயுஷ்மான்பவ...’ என்ற வார்த்தையை அலறவிட்டிருக்கிறது ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணன், ஹ்ருதய் கட்டானி டீம்.

6. காலம் என் காதலி...
பாடியவர்கள் : பென்னி தயாள், ஷாஷ்வத் சிங், அபய் ஜோத்புர்கர்
பாடலாசிரியர் : வைரமுத்து


ஏற்கெனவே சிங்கிள் ட்ராக்காக வெளிவந்து ஹிட்டாகியுள்ள பாடல். எலக்ட்ரிக் கிடாரின் இசைகளுக்கிடையே துள்ளலாக ஒலிக்கிறது பென்னிதயாள், ஷாஷ்வத் சிங், அபய் ஜோத்பர்கர் ஆகியோரின் குரல்கள். இடையே ஹிப் ஹாப் இசையையும் கோர்த்துவிட்டிருக்கிறார் ரஹ்மான். வைரமுத்துவின் வரிகள் பாடலுக்கு அர்த்தம் சேர்த்துள்ளன.

ரஹ்மானின் குரலை ‘24’ ஆல்பத்தில் கேட்க முடியவில்லை என்பது மட்டுமே குறை. மற்றபடி படத்தின் கதைக்களத்திற்கு தகுந்த பாடல்களைக் கொடுத்து வழக்கம்போல் நம்மை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறார் ரஹ்மான். 24 X 7 கேட்டுக்கொண்டே இருக்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;