தி ஜங்கிள் புக் - விமர்சனம்

தி ஜங்கிள் புக் - விமர்சனம்

விமர்சனம் 9-Apr-2016 1:47 PM IST Top 10 கருத்துக்கள்

நாவலாக, கார்ட்டூனாக நாம் ரசித்துப் படித்த, பார்த்த ‘தி ஜங்கிள் புக்’, இப்போது முப்பரிமாணத்தில், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் யுக்தியில் புதிய அனுபவத்தை ஏற்படுத்த திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. எப்படி இருக்கிறது இந்த காட்டுப் பயணம்?

ரொம்பவும் சிம்பிளான கதை. மோக்லியின் தந்தையை ஷேர் கான் எனும் புலி கொன்றுவிட, அவருடன் காட்டுக்குள் வந்த குழந்தை மோக்லி, பகீரா எனும் கருஞ்சிறுத்தையால் மீட்கப்பட்டு அகிலா எனும் நரியின் வசம் ஒப்படைக்கப்படுகிறது. குழந்தை மோக்லி, நரிகளுடன் வாழ்ந்து சிறுவனாக வளர்கிறான். மொத்த காட்டையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைக்கும் புலி ஷேர் கான், மனித இனத்தைச் சேர்ந்த மோக்லியை கொன்றுவிட வேண்டும் என துடியாய் துடிக்கிறது. இதனால், மோக்லியை காட்டிலிருந்து வெளியேற்றி மனிதர்களுடன் இணைக்க வேண்டும் என எண்ணுகிறது பகீராவும், அகிலாவும். அதன்பிறகு பகீராவுடன் தன் பயணத்தைத் தொடங்குகிறான் மோக்லி. இதைத் தெரிந்துகொள்ளும் ஷேர்கான் மோக்லியை கொல்வதற்காக வெறியுடன் வருகிறது. அந்த நேரத்தில் ஷேர்கானுக்கும், பகீராவுக்கும் இடையே நடக்கும் மோதலில் மோக்லி அடர்ந்த காட்டுக்குள் தனியாக பிரிந்து செல்கிறான். அதன்பிறகு மோக்லிக்கு என்ன நேர்கிறது? என்பதை பரபரப்பும், விறுவிறுப்பும், கலகலப்பும் நிறைந்த பயணமாக மாற்றியிருக்கிறது ‘தி ஜங்கிள் புக்’.

சின்ன பயணம்தான்... ஆனால் அதில்தான் எத்தனை சுவாரஸ்யமான காட்சிகள், எத்தனை நெகிழ்ச்சியான தருணங்கள்! ஷேர்கானிடமிருந்து தப்பிச் செல்லும் மோக்லி, அடுத்த காட்சியிலேயே கொடூரமான ‘கா’ எனும் மலைப்பாம்பு ஒன்றிடம் சிக்குகிறான். அந்த பாம்பு எவ்வளவு பெரியது என்பதை, பாம்புச்சட்டையை மோக்லி எடுத்துப் பார்க்கும் காட்சி மூலம் விளக்கி நம்மை மிரளச் செய்கிறார்கள். நல்லவேளையாக பாம்பிடமிருந்து மோக்லியை தப்பிக்க வைக்கிறது பலூ எனும் கரடி. படத்திற்குள் பலூ வந்ததும் அதுவரை பயந்து நடுங்கிக் கொண்டிருந்த குழந்தைகள், கலகலப்பாக சிரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அந்தளவுக்கு, பலூவும் மோக்லியும் அடிக்கும் லூட்டிகளை ரசிக்கும்படியாக உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், அந்த சந்தோஷம் கொஞ்ச நேரமே... மோக்லி மீண்டும் ஒரு ஆபத்தில் சிக்குகிறான். குரங்குகள் கூட்டமொன்றில் மோக்லி சிக்க, அவனை சிறைபிடித்து தங்களின் ராஜான லூயி எனும் பிரம்மாண்ட சிம்பன்ஸியின் வசம் ஒப்படைக்கிறது குரங்கு டீம். அங்கேயும் உதவிக்கு வருகிறார்கள் பலூவும், பகீராவும். விமர்சனத்தில் சாதாரணமாக நாம் சொல்லும் இந்த காட்சிகள், படமாக பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும்.

கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்து படைப்பதோடு நின்றுவிடாமல், சென்டிமென்டாகவும் நம் மனதைத் தொடுகிறது ‘தி ஜங்கிள் புக்’. மோக்லியை திருப்பி அனுப்புவதற்காக பலூ அவனைப் பிடிக்காதது போல நடந்துகொள்ளும் காட்சியும், ‘இது என்னோட இடம்... நான் இங்கதான் இருப்பேன்’ என மோக்லி சொல்லும் க்ளைமேக்ஸ் காட்சியும் கண்களை குளமாக்குகின்றன.

எழுத்துருவில் மிக விலாவரியாக நாம் படித்து ரசித்த ஓர் கதையை, கொஞ்சம் சுறுக்கி ஒன்றரை மணி நேர திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜான் ஃபௌரீ. தங்களின் அற்புதமான திரைக்கதை அமைப்பின் மூலம் ‘தி ஜங்கிள் புக்’கிற்கு உயிர்கொடுத்திருக்கிறார்கள் ஜஸ்டின் மார்க்ஸ் மற்றும் ருட்யார்டு கிப்லிங். இசையால் நம்மை வசமாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜோயல் மெக்நீலி.

இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தையும் மோஷன் கேப்சர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆகியவற்றின் உதவியோடு உருவாக்கியிருக்கிறார்கள் என சூடும் ஏற்றி சத்தியம் செய்தால்கூட நம்ப முடியாது. அத்தனை தத்ரூபமாக விலங்குகளையும், காட்டையும் உருவாக்கியிருக்கிறது சிஜி டீம். நீல் சேதி எனும் சிறுவன் மோக்லியாக நடித்து அசத்தியிருக்கிறான். பில் முர்ரே, பென் கிங்ஸ்லி, இட்ரிஸ் எட்பா, ஸ்கேர்லட் ஜோஹான்ஸன் என ஹாலிவுட் பிரபலங்களின் குரல்களை படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்குப் பயன்படுத்தியிருப்பது கூடுதல் உற்சாகம்.

மொத்தத்தில்... ‘தி ஜங்கிள் புக்’கின் கதையை நாம் ஏற்கெனவே படித்திருந்தாலும், கார்ட்டூனாக பலமுறை பார்த்திருந்தாலும், மீண்டும் ஒருமுறை 3டியில் பார்க்கும்போது அதே பழைய உற்சாகத்தையும், புதிய அனுபவத்தையும் தந்திருப்பதுதான் உண்மை. இந்த காட்டுப் பயணத்தைப் பார்க்க உடனடியாக டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள். இந்த கோடைவிடுமுறைக்கு, நம் நேரத்தை குழந்தைகளுடன் இதைவிட சிறப்பாக செலவிட முடியாது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;