சம்பளம் வாங்காமல் நடிப்பாரா அஜித்? சூடுகிளம்பும் நட்சத்திர கிரிக்கெட் விவகாரம்

சம்பளம் வாங்காமல் நடிப்பாரா அஜித்? சூடுகிளம்பும் நட்சத்திர கிரிக்கெட் விவகாரம்

கட்டுரை 7-Apr-2016 5:26 PM IST Top 10 கருத்துக்கள்

இன்றைய தேதியில் சமூக வலைதளங்களில் ‘ஹாட் டாப்பிக்’காக சுற்றிக் கொண்டிருப்பது நட்சத்திர கிரிக்கெட் விவகாரம்தான். ஒட்டுமொத்த திரையுலக நட்சத்திரங்களும் இணைந்து, நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டி, அதன் மூலம் வரும் வருமானத்தை நலிந்த கலைஞர்களுக்கு செலவிடவேண்டும் என்ற கொள்கைக்காக கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்து, அது குறித்த அறிவிப்பையும் முறையாக வெளியிட்டனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்த்திரங்களான ரஜினி, கமல் இருவருமே இந்த கிரிக்கெட் போட்டி நடைபெறும் சமயத்தில் நேரில் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கை வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே நடிகர் அஜித் இந்த நிகழ்ச்சிக்கு வருவாரா? மாட்டாரா? என மீடியாக்கள் தங்களுக்குள் பட்டிமன்றத்தைத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து, ‘நடிகர்கள் தங்கள் சொந்த நலனுக்காக கஷ்டப்படும் ரசிகர்களிடம் காசு பிடுங்குவதா...? கட்டிடம் கட்ட என் பங்கு 10 லட்ச ரூபாய்... ஒவ்வொரு நடிகரும் இதுபோல் கொடுத்தாலே கட்டிடம் கட்டிவிடலாம்..’ என்ற ரீதியில் நடிகர் அஜித் தரப்பிலிருந்து கூறப்பட்டதைப் போல தகவல் ஒன்று சமூக வலைதளங்கில் காட்டுத் தீ போல பரவியது. ஆரம்பத்தில் இது உண்மையா? நடிகர் அஜித் இப்படி கூறினாரா? என எந்த உறுதிப்படுத்தலும் இல்லாமல் ரசிகர்கள் பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர். நடிகர் அஜித் தரப்பிலிருந்தும் இந்த செய்தி குறித்து மறுப்போ, ஆட்சேபனையோ தெரிவிக்கப்படவில்லை.

ஒருபுறம் இதுகுறித்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருந்தாலும், இன்னொருபுறம் நடிகர் சங்கம் தங்களின் நிகழ்ச்சிக்கான வேலைகளில் பரபரப்பாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது நடிகர் சங்கத்திற்கு ஆதரவான கட்டுரை ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அது இங்கே... அப்படியே...

( நடிகர் சங்கமும், நட்சத்திர கிரிகெட்டும்
வணக்கம்:

ஒரு பால் வியாபாரம் செய்பவர் பால் விற்பனை செய்து அதன் மூலம் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்கிறார். ஒரு தொலை தொடர்பு தகவல் சேவை மையம்POST PAID ,PREPAID, NET PACK, CALLER TUNE வசதிகளை அறிமுகம் செய்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். அதே போல தான் நடிகர்கள் நடிகைகள் நலிந்த நாடக நடிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களின் வாழ்வு மேம்பட நட்சத்திர கிரிகெட் ஏற்பாடு செய்து அதன் மூலம் நலிந்த நாடக நடிகர்களின் வருமானத்திற்கு வழி செய்ய ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள்.

நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைகோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று. இத நட்சத்திர கிரிகெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தனது சொந்த செலவிலே கட்ட முடியும், ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர்.

ஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியை காட்டவும், பொது குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களை கொண்டு தனது திரை குடும்பத்தையே விட்டுகொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள். கலை துறை சார்ந்த எந்த ஒரு விழாக்களை முதலில் புறக்கணித்து வருபவர்களும் அவர்களே. நட்சத்திர கிரிக்கெட்டால் மக்களின் பணம் சுரண்ட படுகிறது, நடிகர் சங்கம் பிச்சை எடுக்கிறது என்று தனது ரசிகர்களை தூண்டிவிட்டு விளம்பரம் செய்வதால் என்ன பயன்?நடிகர் நடிகைகள் பிச்சைகாரர்கள் அல்ல. அவர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி நாடக நடிகர்கள் வாழ்வு முன்னேற அன்றைய தங்களது வருமானத்தை விட்டுவிட்டு நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனர். தனது ரசிகர்களுக்குகூட முக்கியத்துவம் தராத ஒரு சில நடிகர்களுக்கு, நாடக நடிகர்களின் முக்கியத்துவம் தெரிய வாய்ப்பு இல்லை.

ஒரு சில நடிகர்களின் ரசிகர்கள் யார் எந்த நல்லது செய்தாலும் முதலில் அவர்களை கேலி செய்வதற்கு ஒதுக்கும் நேரத்தில் நலிந்த நாடக நடிகர்களின் வாழ்க்கை அறிய வேண்டும். தன்னால் செய்ய முடியாத நல்ல காரியங்களை நல்ல மனம் படைத்த சில நடிகர்கள் செய்யும் போது அவர்களை வாழ்த்த வேண்டாம். அவர்களை வருந்த செய்யாமல் இருந்தாலே போதும். பழங்காலத்தில் நாம் செய்யும் உதவி யாருக்கும் தெரியாதவாறு செய்யவேண்டும் என்றனர். ஆனால் இக்கால சூழ்நிலையில் நாம் செய்யும் உதவி அடுத்தவருக்கு தெரியவேண்டும், அப்போதுதான் அதை அறிந்து நான்கு பேர் மற்றவருக்கு உதவுவார்கள். இங்குள்ள அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பதை அந்த நடிகர்கள் அறியவேண்டும். அந்த ரசிகர்களுக்கு பகுத்தறிவு, வேலை, நல்ல மனம் உள்ளதால் அவர்கள் அவர் வழியில் செல்கின்றனர்.. அவர்களுக்கு அடுத்தவர்களை குறை குறைவோ, பழி சொல்லவோ அவசியம் இல்லை. சில நடிகர்கள் சொல்லுமாறு நடிகர் சங்க கட்டிடம் நடிகர்களின் சொந்த செலவில் கட்டப்படவேண்டும் மக்களை சுரண்ட கூடாது என்கின்றார்களே. அவர்கள் நடித்த படம் பார்க்க ரசிகர்கள் பணம் கொடுத்து நுழைவு சீட்டு வாங்கிய பிறகுதானே திரையரங்கம் உள்ளே விடுகிறார்கள்? அந்நேரம் அந்த நடிகர்கள் என் ரசிகர்களிடம், மக்களிடம் காசு வாங்காதீர் என்று அறிக்கை விட வேண்டியது தானே? அல்லது தங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்ட பட கூடாது என்று நினைத்தால் இலவசமாக படம் நடித்து திரையிட வேண்டியது தானே?

இந்திய கிரிகெட் அணி விளையாட்டை காண நுழைவு கட்டணம் பெற்று தான் செல்லவேண்டும். அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப் படுகிறது என்று குற்றம் சாட்டுவார்களோ? தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்தபடியே தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறியமுடியும்? சினிமா என்பது ஒரு பொழுது போக்கு? அவர்கள் அவர்களது திரை குடும்ப தேவைகளை சரிசெய்ய அனைத்து நடிகர்களும் ஒன்றுகூடி நட்சத்திர கிரிகெட்டில் பங்கு கொள்கின்றனரே தவிர அவர்களது சொந்த செலவுக்கு அல்ல. என்பதை அறியவேண்டும்.

விவாதம் செய்யும் நடிகர்கள் ஒரே ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவேண்டும் முதலில்அவர்கள் அவர்களின் திரை குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்று யோசித்து பார்க்க வேண்டும். )

எதிரெதிர் துருவங்களில் இருக்கும் இந்த இரண்டு கட்டுரைகளையுமே படித்த ஒரு சில நடுநிலை சினிமா விமர்சகர்கள் தங்கள் பங்குக்கும் ஒரு சில கேள்விகளை தற்போது எழுப்பி வருகின்றனர். ‘‘அஜித் விஷயத்தில் இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பல சந்தர்ப்பங்களில் நடிகர் அஜித் குறித்து இதுபோன்ற பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளன. அந்த சமயங்களில், அஜித்திற்கு சாதகமான செய்தியென்றால், அது உண்மையாக இருந்தாலும், வதந்தியாக இருந்தாலும் சரி எந்த விளக்கமும் பெரிதாக அஜித் தரப்பிலிருந்து வராது. இல்லையென்றால், ஆறப்போட்டு அதற்கு விளக்கம் கூறப்படும். மாறாக, அஜித்திற்கு எதிரான அல்லது அவரின் இமேஜை கெடுக்கும் வகையிலான வதந்திகள் என்றால் அதனை உடனடியாக மறுத்து அவர் தரப்பிலிருந்து அறிக்கை வெளியாகும். இப்போதும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. தினந்தோறும் தன்னைப் பற்றி வரும் செய்திகளை உடனுக்குடன் பார்த்துவிடுவார் அஜித். அப்படியிருந்தும் இந்த விஷயத்தில் எதற்காக அவர்தரப்பு மௌனம் காக்கிறது என்பது புரியவில்லை. தன் மௌனத்தைக் கலைப்பதுதான் அஜித்திற்கான இமேஜை காப்பதற்கு உதவும். ஏற்கெனவே, சமூகவலைதளங்களில் அஜித்தைப் பற்றி பில்டப் செய்வதற்கென்றே அஜித்தின் விசுவாசிகள் சிலரால் ஒரு டீம் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக வதந்திகள் உலாவி வருகின்றன. தற்போது நடக்கும் விஷயங்களையும் அஜித் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரே ஆனால், அந்த வதந்தி உண்மைதான் என ரசிகர்களும் நம்பத் தொடங்கிவிடுவர். ஒரு சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் அஜித், அந்த சங்கத்தையும், தன்னையும் சம்பந்தப்படுத்தி வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவரின் கடமை!’’ என தங்கள் பங்கு நியாயங்களை சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர் சில நடுநிலையாளர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏண்டா தலையில எண்ண வெக்கல - டிரைலர்


;