‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ – விமர்சனம்

சிரிப்பு பேய்!

விமர்சனம் 4-Apr-2016 10:44 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : S. Baskar
Production : Avni Movies
Starring : Vaibhav, Oviya, Aishwarya Rajesh, VTV Ganesh, Karunakaran
Music : Siddharth Vipin
Cinematography : Banu Murugan
Editing : N. B. Srikanth

விதவிதமான கதைக் களங்களை கொண்டு ரிலீசாகி வரும் பேய் கதைகளில், செல்ஃபோன் பேய் கதையாக வந்திருக்கும் இந்த ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ எப்படி?

கதைக்களம்

சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு ஜாலியாக வாழ்க்கை நடத்துபவர் வைபவ். ஒரு ஃபோன் கால் மூலம் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷை சந்திக்கும் வைபவ், அவர் மீது காதல் கொள்கிறார். நாளடைவில் ஐஸ்வர்யாவுக்கும் வைபவ் மீது காதல் வருகிறது. இந்நிலையில் ஒரு சாலை விபத்தில் சிக்கி மரணம் அடையும் ஓவியாவின் செல்ஃபோனை வைபவ் களவாடி செல்கிறார். அந்த ஃபோனை வீட்டுக்கு எடுத்து சென்றதிலிருந்து வைபவ் மற்றும் அவரது சகாக்களை பேய் ஆட்டம் ஆட வைக்கிறது அந்த ஃபோனிலிருந்து வரும் ஓவியாவின் பேய்! அவருக்கு நிறைவேறாத ஒரு காதல் ஃப்ளாஷ் பேக்! அதற்கு பிறகு நடைபெறும் காமெடி களேபரங்கள் தான் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’

படம் பற்றிய அலசல்

பேயை வைத்து ஆக்ரோஷ பழி வாங்கும் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் என்று பயம் காட்டாமல் ரசிகர்களை இரண்டு மணிநேரம் சிரிக்க வைத்தால் போதும் என்ற முடிவோடு இப்படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் பாஸ்கர் முதல் படத்திலேயே கவனம் பெற்றிருக்கிறார். படத்தின் முதல் 25 நிமிடங்கள் வைவபின் திருட்டு வேலைகள், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது அண்ணன் வி.டி.வி.கணேஷ் கும்பலுடனான காமெடி கலாட்டாக்கள் என ஜாலியாக பயணிக்கும் கதை, ஃபோன் ஆவி ஓவியா என்ட்ரி ஆனதும், த்ரில்லிங்காக பயணிக்கிறது. இடைவேளைக்கு பிறகு வரும் சில காட்சிகள் கொஞ்சம் போரடிக்க வைத்தாலும், பேய் ஓவியாவின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றும் கிளைமேக்ஸ் காட்சி அதையெல்லாம் மறக்கடிக்க செய்கிறது. சித்தார்த் விபினின் இசை அமைப்பு, என்.பானுமுருகனின் ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்களும் கச்சிதமாக அமைந்துள்ளது. சுந்தர்.சி.இயக்கும் படங்களை போன்று கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் அமைந்திருக்கிறது அவர் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்த படம்!

நடிகர்களின் பங்களிப்பு

பெர்ஃபாமென்சில் இதுவரை நாம் பார்க்காத ஒரு வைபவை இப்படத்தில் பார்க்கலாம். சாவுக்கு ஆடும் நடனம் கற்றுக்கொடுக்கும் விடிவி கணேஷுக்கு சவால் விட்டு டப்பா குத்து, டம்ளர் குத்து, டிஃபின் பாக்ஸ் குத்து என்று தூள் கிளப்பும் ஆட்டத்திலாகட்டும், ஃபோன் பேயிடம் மாட்டிக்கொண்டு அல்லல்படும்போதாகட்டும்… படம் முழுக்க கலகலக்க வைக்கிறார் வைபவ். ‘காக்க முட்டை’யில் அப்படியொரு பெர்ஃபாமென்ஸை வழங்கிய ஐஸ்வர்யா நடிப்பு குறித்து நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதில் குத்தாட்டத்திலும் தன்னை நிரூபித்திருக்கிறார். பேயாக வரும் ஓவியாவும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். சாவு நடனத்துக்கு விதவிதமான விளக்கத்தை சொல்வதில் ஆரம்பித்து சரக்கை மிக்ஸ் பண்ணி அடித்து ஆவியை அடக்க செல்லும் விடிவி கணேஷ், காதலுக்கு ஐடியா சொல்லும் ‘யோகி’ பாபு, மற்றும் சிங்கப்பூர் தீபன், ஓவியாவின் காதலனாக வரும் கருணாகரன் ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

பலம்

1. வைபவ், விடிவி கணேஷ், சிங்கப்பூர் தீபன் முதலானோரின் காமெடி
2. நேர்த்தியாக பயணிக்கும் முதல் பாதி

பலவீனம்

1. லாஜிக் விஷயங்களை கவனத்தில் கொள்ளாதது
2. இரண்டாம் பாதியில் வரும் குளறுபடிகள்

மொத்தத்தில்

லாஜிக் விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் இரண்டு மணிநேரம் சிரித்து பொழுதுபோக்க விரும்புவோர் தாராளமாக இந்த படத்திற்கு டிக்கெட் எடுக்கலாம்!

ஒருவரி பஞ்ச் : சிரிப்பு பேய்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;