Direction : Sathish Chandrasekaran
Production : Rite Media Works & Studio Green
Starring :Kalaiyarasan, Rameez Raja, Dr Maya, Kaali Venkat, Hari, Arjunan, Ramdoss
Music : Radhan
Cinematography : Vijay Kartik Kannan
Editing : Madan
கடந்த வருடம் வெளியாகி பேய் வசூல் செய்த ‘டார்லிங்’ படத்தின் இரண்டாம் பாகம் என்ற அறிவிப்புடன் வெளிவந்திருக்கும் இந்த ‘டார்லிங் -2’ முந்தைய படத்தின் வெற்றியைத் தக்க வைத்திருக்கிறதா?
கதைக்களம்
நண்பர்களான கலையரசன், காளி வெங்கட், ரமீஸ், ‘ஜானி’ ஹரி, அர்ஜுன் ஆகியோர் வால்பாறைக்கு டூர் போகிறார்கள். போன இடத்தில் நண்பர்கள் அனைவரும் ஜாலியாக பொழுதை கழிக்கிறார்கள். இந்நேரத்தில், காதலித்த பெண்ணை (மாயா) திருமணம் செய்ய முடியாமல் போய்விட்ட காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட (ஒரு வருடத்திற்கு முன்) ரமீஸின் தம்பியின் ஆவி கலையரசன் உடம்பில் புகுந்து, நண்பர்கள் அனைவருக்கும் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறது. ஜாலியாக டூர் வந்த இடத்தில் ஆவியிடம் சிக்கிக் கொள்ளும் நண்பர்களின் கதி என்னவாகிறது? ரமீஸ் தம்பியின் ஆவி கலையரசன் உடம்பில் மட்டும் புகுந்து அட்டகாசம் செய்ய என்ன காரணம்? இதற்கெல்லாம் விளக்கம் தருகிறது ‘டார்லிங் -2’.
படம் பற்றிய அலசல்
நிஜத்தில் நடந்த சில சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியிருப்பதாக கூறியிருக்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் சதீஷ் சந்திரசேகர். வாழ்க்கையில் விளையாட்டாக நாம் செய்யும் சில விஷயங்கள் ஒருவரின் வாழ்க்கையில் எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இரண்டு மணிநேர திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார். படத்தின் முதல் பாதி நண்பர்களின் ஜாலி, காமெடி, கலாட்டா என நீளமாக பயணிக்கிறது. கலையரசன் மீது ஆவி புகுந்ததும் சூடு பிடிக்கும் திரைக்கதையில், ரமீஸ், மாயா காதல் சம்பந்தப்பட்ட ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் நிறைய குழப்பங்கள்! அதை ரசிகர்களுக்கு புரியும்படி படமாக்கியிருந்தால் ‘டார்லிங் -2’வை ஓரளவுக்கு ரசிக்க முடிந்திருக்கும். முதல் ‘டார்லிங்’ படத்தில் இருந்த காமெடி, த்ரில்லிங் போன்ற விஷயங்களும் இதில் மிஸ்ஸிங் என்பதால் படம் போரடிக்கதான் செய்கிறது. ரதனின் பின்னணி இசை, விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் பாராட்டும் படி அமைந்துள்ளன.
நடிகர்களின் பங்களிப்பு
நண்பர்களாக வரும் கலையரசன், ரமீஸ், காளி வெங்கட், ‘ஜானி’ஹரி, அர்ஜுன் ஆகியோர் தங்களது கேரக்டர்களுக்கு ஏற்ற நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். வால்பாறை வரதனாக வரும் முனிஸ்காந்தின் பாத்திரம் எடுபடவில்லை. ரமீஸின் காதலி ஆயிஷாவாக வரும் மாயா அழகாக இருக்கிறார். நடிப்பிலும் குறைவைக்கவில்லை.
பலம்
இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.
பலவீனம்
வலுவில்லாத குழப்பமான திரைக்கதை, எடுபடாத பொழுதுபோக்கு அமசங்கள் என முக்கியமான விஷயங்களை சரியாக கையாளத் தவறியிருப்பது.
மொத்தத்தில்...
‘டார்லிங்’ படத்தை மனதில் வைத்து இப்படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இந்த ‘டார்லிங் -2’ பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தாது.
ஒருவரி பஞ்ச் : ஏமாற்றம்!
ரேட்டிங் : 3.5/10
‘டார்லிங்-2’, ‘ராஜா மந்திரி’ ஆகிய படங்களை தொடர்ந்து கலையரசன், காளி வெங்கட் மீண்டும் ஒரு படத்தில்...
‘மெட்ராஸ்’, ‘டர்லிங்-2’, ‘ராஜா மந்திரி’ ஆகிய படங்களை தொடர்ந்து கலையரசன் நடித்துள்ள ரஜினியின் ‘கபாலி’...
சமீபத்தில் வெளியான ‘டார்லிங்-2’ படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்தவர் ரமீஸ் ராஜா. இவர்...