‘தமிழ் பேசி நடிக்க தெரிந்ததால் கிடைத்த வாய்ப்பு!’ - ஐஸ்வர்யா

‘தமிழ் பேசி நடிக்க தெரிந்ததால் கிடைத்த வாய்ப்பு!’ - ஐஸ்வர்யா

செய்திகள் 28-Mar-2016 12:38 PM IST VRC கருத்துக்கள்

‘அவ்னி மூவீஸ்’ சார்பில் இயக்குநர் சுந்தர்.சி முதன் முதலாக தயாரித்துள்ள படம்
‘ஹலோ நான் பேய்பேசுறேன்‘. வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற இப்படத்தில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா,விடிவி. கணேஷ், கருணாகரன்,சிங்கம்புலி,சிங்கப்பூர் தீபன் முதலானோர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் பாஸ்கர் இயக்கியுள்ளார். இப்படம் சம்பந்தமான புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, ‘தமிழ் பேசும் நடிகைகளுக்கு இங்கே வாய்ப்பு தருவதில்லை’ என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசும்போது,

‘‘இப்படத்தின் இயக்குனர் பாஸ்கர், இந்த படத்திற்கு தமிழ் பேசி நடிக்கும் நடிகை தேவை என்பதால் தான் என்னை தேர்வு செய்தாராம்! அதற்கு அவருக்கு என்றி. தமிழ் சினிமாவில் தமிழ் பேசி நடிக்கும் நடிகைகளுக்கு அவ்வளவாக வாய்ப்பு தருவதில்லை. அந்த வகையில் எனக்கு வாய்ப்பு தந்தமைக்காக பெருமைப்படுகிறேன்.
‘ஹலோ நான் பேய் பேசுறேன்‘ படம் நல்ல ஒரு பொழுது போக்குப் படமாக உருவாகியுள்ளது. த்ரில், காமெடிக்கு பஞ்சமிருக்காது. இதில் வைபவுடன் முதன் முதலாக இணைந்து நடித்துள்ளேன். இப்படத்தில் நடிக்கும்போதே எங்களுக்குச் சிரிப்பு வந்தது. நான் இதற்கு முன் நடித்த படங்களில் நடனமாடி நடிக்கும் வாய்ப்பு எனக்கு அதிகமாக வந்ததில்லை. இப்படத்தில் ‘சில்லாக்கி டும்மா’ என்ற பாடலில் பிணத்தின் மீது எல்லாம் ஏறி நடனம் ஆடியிருக்கிறேன். இந்த படத்தில் நடித்தது நல்ல ஒரு அனுபவம்’’ என்றார்.

கதாநாயகன் வைபவ் பேசும்போது, ”நான் இதில் பிக்பாக்கெட் அடிப்பவனாக வருகிறேன். இயக்குநர் பாஸ்கர் புதியவர் என்றாலும் நினைத்ததை எடுப்பவர். நினைத்தது வரும் வரைவிட மாட்டார். படத்தில் நான் ‘உய்யோ கவிதா’ என்று ஒரு வசனம் பேசி நடிக்கணும். எனக்கு அந்த வசனம் பேசி நடிக்க சரியாக வரவில்லை. 30 முறை எடுத்தார். அந்த காட்சியை படமாக்கும்போது சுந்தர்.சி சார் செட்டுக்கு வந்திருந்தார். அந்த காட்சியை படமாக்குவதை பார்த்துவிட்டு, இவன் இவ்வளவு டேக் வாங்கறானே என்று நினைத்தாரோ என்னவோ ‘ஐயோ’ என்று ஓடி விட்டார். இதில் நானும் ஐஸ்வர்யாவும் சிரமப்பட்டு சாவுக் குத்து நடனம் எல்லாம் ஆடியிருக்கிறேன். அது தரை லோக்கலாக இருக்கும்’’ என்றார்.


இயக்குநர் பாஸ்கர் பேசும்போது ” நான் அடிப்படையில் மிகவும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். மார்க்கெட்டிங் துறையில் அலைந்து கொண்டிருந்தவன். எட்டு குறும்படங்கள் இயக்கியிருக்கிறேன். ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்கு சுந்தர்.சி.சார் நடுவராக வந்தார். என் குறும்படம் அவருக்கு பிடித்துப் போய் இந்த பட வாய்ப்பை கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி என்று ஒரு வார்த்தையால் மட்டும் கூறிவிட முடியாது, வாழ்க்கை முழுவதும் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்’’ என்றார்.

இவர்கள் தவிர நிகழ்ச்சியில் நடிகர்கள் வி.டி.வி.கணேஷ், சிங்கம்புலி, சிங்கப்பூர் தீபன், இசை அமைப்பாளர் சித்தார்த் விபின் முதலானோரும் பேசினார்கள். இப்படத்தை தமிழகமெங்கும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;