தோழா - விமர்சனம்

ஆனந்தக் கண்ணீர்!

விமர்சனம் 25-Mar-2016 1:10 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Vamsi Paidipally
Production : PVP Cinemas
Starring : Nagarjuna Akkineni, Karthi, Tamannaah, Prakash Raj
Music : Gopi Sunder
Cinematography : P. S. Vinod
Editing : Praveen K. L

வெளிநாட்டுப் படங்களை ரீமேக் செய்வது சமீபகாலமாக தமிழ்சினிமாவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ‘தி இன்டச்சபிள்ஸ்’ பிரெஞ்சுப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வெளிவந்திருக்கிறது ‘தோழா’. நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கியிருக்கிறார்.

கதைக்களம்

திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி, ஜெயிலுக்குச் சென்று திரும்பும் கார்த்தியை அவரது குடும்பம் வீட்டை விட்டுத் துரத்துகிறது. இன்னொருபுறம்... கை, கால்கள் செயலிழந்து வீல் சேரில் வாழ்க்கை நடத்திவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான நாகார்ஜுனா, தன்னை கவனித்துக்கொள்ள ஒரு நல்ல ஆளை தேடிக் கொண்டிருக்கிறார். இந்த இருவரும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். அதன்பிறகு நடக்கும் உணர்வுப்பூர்வமான சம்பவங்களே ‘தோழா’வின் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்

இது ஒரு ரீமேக் படம் என்பது எந்த இடத்திலும் தெரியாத அளவிற்கு திரைக்கதையில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து அற்புதமாக இயக்கியிருக்கும் வம்சி பைடிபல்லிக்கு வாழ்த்துக்கள்! இப்படத்தின் மிகப்பெரிய பலம் கதாபாத்திர வடிவமைப்பும், அதற்குத் தகுந்த நடிகர்களை தேர்வு செய்திருப்பதும். அந்தளவுக்கு நாகார்ஜுனாவும், கார்த்தியும் அந்தந்த கேரக்டர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

மனதைப் பிழிய வைக்கும் ஒரு கதைக்களத்தை கையிலெடுத்து, ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் படத்தின் முதல்பாதியை காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருப்பது நல்ல முடிவு. படத்தில் வரும் சென்டிமென்ட் காட்சிகள் அழகாகவும், உணர்வுப்பூர்வமாகவும் உருவாக்கப்பட்டிருப்பதால் படத்தோடு நம்மால் எளிதில் பயணிக்க முடிகிறது. அதற்கு முக்கியப் பங்கான்றியிருக்கிறது ‘குக்கூ’ ராஜுமுருகனின் வசனங்கள். பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவில் படம் கலர்ஃபுல்லாக ஜொலிக்கிறது. குறிப்பாக பிரான்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் கொள்ளை அழகு!

படம் கொஞ்சம் நீளமோ என்ற உணர்வைத் தருவதும், ஆங்காங்கே இடையூறாக அமைந்த பாடல்களையும் தவிர்த்து, படத்தில் பெரிய குறையெதுவுமில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

துறு துறு பாடி லாங்குவேஜ், படபட வசனங்கள், ரொமான்டிக் லுக் என மீண்டும் பையா, நான் மகான் அல்ல படங்களில் பார்த்ததைப்போல அச்சு அசலாக கண்முன் நிற்கிறார் கார்த்தி. நாகார்ஜுனாவுக்கும் அவருக்குமான ‘கெமிஸ்ட்ரி’, கார்த்தி & தமன்னாவின் கெமிஸ்டரியை ஓவர்டேக் செய்திருக்கிறது. மொத்த நடிப்பையும் முகத்தின் மூலம் மட்டுமே வெளிப்படுத்த வேண்டிய சவாலான கேரக்டர் நாகார்ஜுனாவுக்கு. ஒரு சூப்பர்ஸ்டாருக்குள் ஒளிந்திருக்கும் சூப்பர் ஆக்டரை சாதாரணமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் நாகார்ஜுனா. பல இடங்களில் கண்களாலேயே பேசி, கைதட்டல்களை அள்ளியிருக்கிறார். தமன்னா படம் முழுவதும் வந்தாலும் நடிப்பதற்கு பெரிய வேலையில்லை. ஆனால், அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை அழகாக இருக்கிறார். வக்கீல்களாக வரும் பிரகாஷ் ராஜ், விவேக் ஆகியோருக்கு சின்ன வேடங்கள்தான் என்றாலும், கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

பலம்

1. கார்த்தி, நாகார்ஜுனாவின் பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸ்.
2. வசனங்கள்
3. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை

பலவீனம்

1. படத்தின் நீளம்
2. பாடல்கள்

மொத்தத்தில்...

‘பணம் மட்டுமே வாழ்க்கையில்லை... அன்பு காட்ட ஆள்தான் அவசியம்’ என்பதை அழகாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறது ‘தோழா’. தெலுங்கு ரசிகர்களை குறிவைத்து திரைக்கதையில் செய்யப்பட்டிருக்கும் சிற்சில சமரசங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ‘தோழா’வை இருகரம் நீட்டி அணைத்துக்கொள்ளலாம்.

ஒரு வரி பஞ்ச் : ஆனந்தக் கண்ணீர்!

ரேட்டிங் : 6/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தோழா - டிரைலர்


;