கார்த்தியின் ‘தோழா’ சில ஹைலைட்ஸ்!

கார்த்தியின் ‘தோழா’ சில ஹைலைட்ஸ்!

கட்டுரை 24-Mar-2016 5:47 PM IST VRC கருத்துக்கள்

‘பிவிபி சினிமாஸ்’ நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பான ‘தோழா’ நாளை உலகம் முழுக்க அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வம்சி இயக்கி, வெளியாகவிருக்கும் இப்படத்தில் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, மறைந்த நடிகை கல்பனா என ஏராளமானோர் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘தோழா’வின் சில ஹைலைட்ஸ் விஷயங்கள் இதோ:

எதிரெதிரான குணாதியசங்களை கொண்ட இரண்டு மனிதர்கள்! அவர்களில் ஒருவர் கோடீஸ்வரர்! வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்தவர்! ஆனால் இப்போது, கழுத்துக்கு கீழே செயலற்று சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இன்னொருவர் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாதவர்! ஆனால் பெரும் திமிருடன் அலட்சியமா வாழ்க்கையை நடத்துபவர். இப்படிப்பட்டவருக்கு கோடீஸ்வரர் கூட வாழ்கிற ஒரு வாய்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? இது தான் கார்த்தி, நாகார்ஜுனாவின் ‘தோழா’வின் கதைக்களம். இதில் கோடீஸ்வராக நாகார்ஜுனாவும், அலட்சியமான முறையில் வாழ்க்கை நடத்துபவராக கார்த்தியும் நடிக்கிறார்.

ஃபிரெஞ்சு மொழியில் The Intouchables என்ற பெயரில் வெளியாகி சக்கை போடு போட்ட படத்தின் கதை! அதை தமிழில் ‘தோழா’வாகவும், தெலுங்கில் ‘ஊபிரி’ என்ற பெயரிலும் இரு மாநில ரசிகர்களின் ரசனைக்கேற்ப தனி தனியாக படமாக்கியுள்ளார் வம்சி!

நாகார்ஜுனாவுக்கு இப்படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும் ஃபிரெஞ்சு The Intouchables படத்தை தன் மனைவி அமலா, மகன்கள் நாக சைதன்யா, அகில் ஆகியோருடன் பார்த்துள்ளார் நாகார்ஜுனா! படத்தை பார்த்து முடித்ததும் நாகார்ஜுனாவின் மனைவி அமலா மற்றும் மகன்கள் ‘இந்த கேரக்டரில் நீங்கள் நடிக்க வேண்டாம், அதற்கு நாங்கள் சம்மதிக்க மட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். காரணம் நாகார்ஜுனாவை படத்தில் கூட கழுத்துக்கு கீழ் செயலற்றவராக அவர்களால் பார்க்க முடியாது என்பதால் தான்! ஆனால் அப்போதே நாகார்ஜுனா இந்த கேரக்டரில் நடித்தே தீருவது என்று முடிவு செய்தாரம்! ‘தோழா’வின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாகார்ஜுனா சொன்ன தகவல் இது!

இரண்டு மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் படம் என்றால் அதில் இரண்டு கேரக்டருக்கும் சம அளவில் முக்கியத்துவம் இருக்குமா என்ற ஒரு சந்தேகம் வருவது இயற்கை! ஆனால் இந்த கதையை பொறுத்தவரையில் கார்த்திக்கும், நாகார்ஜுனாவுக்கும் அதுமாதிரி எந்த குழப்பமும் வரவில்லையாம்! காரணம், இருவருக்கும் அந்த கதை மீதும், கேரக்டர்கள் மீதும் இருந்த அதீத நம்பிக்கை தான்! அது மட்டும் இல்லாமல் கார்த்திக்கு பிடித்த நடிகர்களில் நாகார்ஜுனாவும் ஒருவர்! அவர் கூட நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்பதும் ஒரு காரணம் என்று சொல்லியிருக்கிறார் கார்த்தி!

அதைப்போல நாகார்ஜுனாவும் ‘பருத்தி வீர’னில் நடித்த கார்த்தி தான் இன்னொரு கேரக்டரில் நடிக்கிறார் என்றதும் உடனே ஓகே சொன்னாராம். நாகார்ஜுனா ஏற்கெனவே சில நேரடி தமிழ் படங்களில் நடித்திருப்பதைப் போல, கார்த்தி நடித்த சில தமிழ் படங்கள் ஆந்திராவிலும் வெளியாகி வெற்றி பெற்றிருப்பதால் அவருக்கு ஆந்திராவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் இரண்டு மாநில ரசிகர்களுக்கும் தெரிந்த இரண்டு ஹீரோக்கள் நடித்த படம் ‘தோழா’ என்பதால் இப்படத்தின் வெற்றி உறுதி என்கிறார்கள்!.

ஏற்கெனவே ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்து அரும் தமன்னா, ’பாகுபலி’ எனும் பிரம்மாண்ட படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார்! ஏற்கெனவே கார்த்தியுடன் ‘பையா’, ‘சிறுத்தை’ ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ள தமன்னா மூன்றாவது முறையாக ‘தோழா’வில் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் ‘தோழா’வின் ஒரு ஹைலைட்டாகும். ‘பையா’, ‘சிறுத்தை’ படங்களின் சூப்பர் ஹிட் சென்டிமென்ட் ‘தோழா’விலும் தொடரும் என்கிறார்கள்!

ஒரு திரைப்படம் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் வெளியாகும்போது, அதில் ஒன்று டப்பிங் செய்யப்பட்டதாக இருக்கும் என்ற ஒரு சந்தேகம் ரசிகர்களிட்த்தில் இருக்கும்! ஆனால் ‘தோழா’வை பொறுத்தவரையில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாகவே எடுக்கப்பட்ட படம்! இல்லையென்றால் இப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்திருக்குமா என்ன? தமிழக அரசின் வரிவிலக்கு என்பது நேரடி தமிழ் படங்களுக்கு மட்டும் தான்! ‘தோழா’விற்கு வரி விலக்கு கிடைத்திருப்பதால் இது ஒரு நேரடி தமிழ் படம் என்பது உறுதியாகி விட்டது!

கார்த்தியின் ‘கொம்பன்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிற நிலையில் நாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிற ‘தோழா’விற்கும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு கிடைக்கும் என்று நம்புவோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;