பஸ் 657 - விமர்சனம்

‘பஸ் 657’ல் தாராளமாக பயணம் செய்யலாம்.

விமர்சனம் 21-Mar-2016 1:10 PM IST Top 10 கருத்துக்கள்

பஸ்ஸில் பயணிப்பவர்களை பணயக்கைதிகளாக்கி, அரசிடமிருந்து பணம் பறிக்கும் கும்பலைப் பற்றி ஏற்கெனவே வெளிவந்த ‘ஸ்பீடு’ படத்தில் பார்த்தோம். இப்போது அதே பாணியில் பஸ் சம்பந்தப்பட்ட த்ரில்லர் படம் ஒன்று வெளியாகியுள்ளது. ‘ஹைஸ்ட்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு பின்னர் ‘பஸ் 657’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் இப்படத்தை ‘தி டோர்னமென்ட்’ படத்தை இயக்கிய ஸ்காட் மான் இயக்கியிருக்கிறார். ஜெஃப்ரி டீன் மோர்கன், ராபர்ட் டி நீரோ, நாயகனாக நடித்திருக்கிறார். ‘பஸ் 657’ எப்படிச் செல்கிறது?

கேஸினோ ஒன்றில் அடியாளாக வேலைசெய்யும் ஜெஃப்ரி டீன் மோர்கன், தனது மகளின் மருத்துவச்செலவிற்காக தனது பாஸ் ராபர்ட் டி நீரோவிடம் பெருந்தொகை ஒன்றை கேட்கிறார். ஆனால், பணம் தர முடியாது எனச் சொல்லி அவரை துரத்தியடிக்கிறார் ராபர்ட். இதனால் ஆத்திரமடையும் ஜெஃப்ரி டீன் மோர்கன், தனது கூட்டாளிகள் சிலருடன் இணைந்து, ‘கேஸினா’வில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார் ஜெஃப்ரி. கேஸினாவை கொள்ளையடித்துவிட்டு எஸ்கேப் ஆகும் சமயத்தில், அங்கிருக்கும் பாதுகாவலர்களுக்கும் ஜெஃப்ரி டீமுக்கும் இடையே துப்பாக்கி யுத்தம் ஆரம்பமாகிறது. அதிலிருந்து தப்பித்து வெளியேறும் சமயம் போலீஸும், அவர்களைத் துரத்த வேறு வழியில்லாமல் பஸ் ஒன்றை கைப்பற்றி அதிலிருக்கும் பயணிகளையும், டிரைவரையும் பணயக்கைதியாக பயன்படுத்தி தப்பிக்க நினைக்கிறார்கள். சுற்றிலும் போலீஸ் வாகனங்கள் படைசூழ, பஸ் 657 பயணிக்கத் தொடங்குகிறது. இறுதியில் யாருக்கு என்ன ஆகிறது என்பதே இப்படத்தின் பரபரப்பான க்ளைமேக்ஸ்.

ஒரு கொள்ளையுடன் துவங்கும் இப்படம், பஸ்ஸை கைப்பற்றியதும் ஜெட் வேகம் பிடிக்கிறது. போலீஸிடமிருந்து, நாயகன் ஜெஃப்ரி எப்படியெல்லாம் தப்பிக்கிறார் என்பதை ‘த்ரில்லிங்’காக படமாக்கியிருக்கிறார்கள். அதோடு பஸ்ஸுக்குள்ளேயே நடக்கும் சிற்சில சம்பவங்களும் ரசிகர்களின் பல்ஸை எகிற வைக்கிறது. கதையும், காட்சிகளும் நாம் ஏற்கெனவே பார்த்த சிற்சில படங்களை ஞாபகப்படுத்தினாலும், எந்த இடத்திலும் போரடிக்காத ஒரு ஆக்ஷன் த்ரில்லரை தரத் தவறவில்லை இயக்குனர்.

கதாபாத்திர வடிவமைப்பும், அதில் நடித்திருப்பவர்களின் பங்களிப்பும் அதற்புதமாக இருப்பதுதான் இப்படத்தின் முக்கிய பலம். ஆங்காங்கே திரைக்கதை சற்று தொய்வடையும்போதெல்லாம், நடிகர்களின் பங்களிப்பால் அது மறக்கடிக்கப்படுகிறது. ‘வான்’ கேரக்டரில் நடித்திருக்கும் ஜெஃப்ரி டீன் மோர்கனும், கேஸினோ உரிமையாளர் போப்பாக நடித்திருக்கும் ராபர்ட் டி நீரோவும் படத்தின் முக்கியத்தூண்களாக செயல்பட்டிருக்கிறார்கள். இருவருமே தத்தமது கேரக்டரில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளன. மகளுக்காக கொள்ளையடிக்கும் அப்பாவைப் பற்றிய கதை என்ற பழை விஷயமும், திரைக்கதையை இன்னும் கொஞ்சம் ‘க்ரிப்’பாக உருவாக்கியிருக்கலாம் என தோன்றுவதையும் தவிர்த்து பெரிய குறைகள் எதுவும் இப்படத்தில் இல்லை. நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள ஒரு ஆக்ஷன் த்ரில்லரை பார்க்க வேண்டுமென நினைப்பவர்கள் ‘பஸ் 657’ல் தாராளமாக பயணம் செய்யலாம்.

Stephen Cyrus Sepher மற்றும் Max Adams இதற்கு திரைக்கதை அமைத்துள்ளனர். இப்படத்தில் Morris Chestnut மற்றும் Tyson Wilson ஆகிய நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Brandon Cox ஒளிப்பதிவு செய்துள்ளார். Robert Dalva படத்தை தொகுத்துள்ளார். Impossible Films இப்படத்தை உருவாக்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாறுமாறு வீடியோ பாடல் - கலகலப்பு 2


;